- 
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை
பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி கனிமொழி பற்றி கிளப்பின பரபரப்பு இன்னும்
முடிந்தபாடில்லை. அனந்தியின் கூற்றில் எந்த வெடிமருந்தும் இல்லை. அதில் சர்ச்சைக்குரியதாய்
ஏதும் இல்லை என்பதே உண்மை. நான்காம் கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை சரணடையச் சொன்னார்
கனிமொழி என்பதே அக்கூற்று. சொல்லப்போனால் அவர் சரணடையக் கூட வற்புறுத்தவில்லை. ஆயுதங்களை
சமர்ப்பித்து போரை நிறுத்துவதாய் அறிவியுங்கள் என நடேசனுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.
சேட்டிலைட் போன் வழி எழிலனிடமும் சரணடையச் சொல்லி கேட்கிறார். கனிமொழி அவ்வாறு கேட்காவிட்டாலும்
விடுதலைப்புலிகளுக்கு அச்சூழலில் வேறு வழியில்லை. அதனால் ஏதோ கனிமொழியால் தான் சரணடைந்தார்கள்
எனும் வாதத்தில் பொருளில்லை.
சரணடைய போன தன் கணவன் மீளவில்லை என அனந்தி கூறுகிறார்.
அவர் ராணுவத்திடம் சரணடைந்த பட்சத்தில் இலங்கை அரசை வலியுறுத்தி ஒரு விசாரணை கமிஷன்
அமைக்கும்படியாய் அவர் வறுபுறுத்தலாம். அவர் மாகாணசபை உறுப்பினர் அல்லவா? ஈழப்போரில்
இலங்கைக்கு இந்தியா உதவினாலும் கூட அப்போது முழுமையான அதிகாரம் இலங்கை ராணுவத்துக்கு
வழங்கப்பட்டிருந்தது என்பதால் ராணுவத்தின் ஒவ்வொரு செயலையும் இந்தியா கண்காணித்துக்
கொண்டிருக்க இயலாது. இந்தியாவாலே முடியாது என்றால் அன்று தி.மு.விற்கும் தில்லி அரசியல்
தலைமைக்கும் தொடர்புக்கண்ணியாக இருந்த கனிமொழியால் எப்படி எழிலனின் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் தந்திருக்க இயலும். அவர் தவறாய் வழிநடத்தியதாகவும் கூற இயலாது. அப்போது
அவர் பா.சிதம்பரத்துடன் இது குறித்து உரையாடி அவர்கள் தரப்பை இங்கு எழிலன் போன்றோரிடம்
தெரிவித்திருக்கலாம்.
இவ்வளவு தான் இவ்விசயம் என்றாலும்
தி.மு.க புலிகளை கைவிட்டது, ஈழமக்களுக்கு துரோகம் இழைத்தது எனும் குற்றச்சாட்டை மீண்டும்
எடுத்து பேசுவதற்கு இது ஒரு சந்தர்பத்தை உருவாக்கி இருக்கிறது. தி.மு.க இவ்விசயத்தில்
தார்மீக ரீதியாய் தவறிழைத்தது என்பது மட்டுமே உண்மை. மற்றபடி அவர்கள் நினைத்தால் போரை
தடுத்திருக்க இயலாது. நாம் கேட்க வேண்டிய கேள்வி அவர்கள் ஏன் அதற்கான தீவிர முயற்சியை
எடுக்கவில்லை என்பது. நாம் இப்பிரச்சனையின் ஓட்டுவங்கி அரசியல் பரிமாணத்தைப் பார்க்க
வேண்டும். அப்போது மற்றொரு கோணம் புலப்படும்.
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தின்
போது தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பிரதான கட்சியும் விடுதலைப்புலிகளுக்கும்
ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. பிரபாகரன் எம்.ஜி.ஆரோடு
நெருக்கமாய் இருந்ததால் கலைஞருக்கு அவர் மீது கசப்பு, அதனால் புலிகளை காப்பாற்றவில்லை
என்பது அசட்டு வாதம். அரசியலில் கசப்பு வெறுப்புக்கெல்லாம் இடமில்லை. எம்.ஜி.ஆருக்குப்
பிறகு அதிமுகவும் ஒரு நிரந்தரமான புலி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில்லை என அறிவோம்.
சில வருடங்களுக்கு முன்பு இத்தாலிய கடற்படையினர் எதேச்சையாய் இரு மலையாளிகளைக் கொன்றதற்கு
ஒட்டுமொத்த கேரள அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தில்லிக்கு அழுத்தம் கொடுத்து இத்தாலிய
படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இப்பிரச்சனை தீவிரம் கொண்ட நாள் மாலையே கேரள
முதல்வர் பிரதமரை சந்திக்க தில்லிக்கு விமானத்தில் சென்றார். நூற்றுக்கணக்கான தமிழக
மீனவர்கள் இதுவரை சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஏதாவது சலனம் எழுந்ததா?
ஆந்திராவில் தமிழர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட போது சில பல அறிக்கைகள் விட்டதை ஒழித்து
நம் அரசியல் கட்சிகள் பொருட்படுத்தவே இல்லை. நதிநீர் பங்கீடு, முல்லைப்பெரியார் அணை
என எந்த மாநிலப் பிரச்சனையிலும் நம் பிரதான அரசியல் கட்சிகள் பெரிதாய் ஆர்வம் காட்டுவதில்லை.
சின்ன கட்சிகள் கவனம் பெறுவதற்கு இச்சந்தர்பங்களை அவ்வப்போது பயன்படுத்தும், அவ்வளவே.
இதுவே கர்நாடகாவில் என்றால்? வீரப்பன் அவர்களின் ஒரு நடிகரை கடத்தியது எப்படி அந்த
மாநிலமே அல்லோலப்படது! இதுவே ஒரு தமிழக நடிகரை கன்னடியர் கடத்தியிருந்தால் அது சில
குட்டிப்போராட்டங்கள், நிறைய மீடியா பரபரப்புடன் முடிந்திருக்கும். மாநிலமே ஸ்தம்பிக்காது.
சஜக நிலை தொடர்ந்திருக்கும். இப்போதும் காவிரிப்பிரச்சனையில் எல்லா முக்கிய கட்சிகளும்
அங்கும் இணைந்து போராடுகின்றன. இது ஏன் என நாம் யோசிக்க வேண்டும். இதற்கு நம் அரசியல்வாதிகளின்
சுயநலமே காரணம் என்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் அரசியல்வாதிகள் மக்களின் நாடித்துடிப்பை
அறிந்தவர்கள். ஒரு பிரச்சனை தமிழர்களை கொந்தளிக்க வைக்கும் என்றால் அவர்கள் நிச்சயம்
அதை ஊதிப்பெருக்கி அரசியல் செய்து சம்பாதிப்பார்கள். அப்படி என்றால் “பிரச்சனை” நம்
மக்களிடம் தாம்.
இங்கு தமிழுணர்வு கொண்டோருக்கு
ஈழப்போராட்டத்தில் நிறைய அக்கறையும் குற்ற உணர்வும் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு சிறு
தரப்பு தான். பெரும்பான்மையான தமிழர்களை ஈழப்போர் உள்ளார்ந்து தொடவில்லை என்பதே உண்மை.
ஈழப்போரின் கொடூரமான இன அழிப்பு நிகழ்ந்த பின்னான தமிழக தேர்தலில் அது எந்த தாக்கத்தையும்
செலுத்தவில்லை. அதாவது அயோத்தியா பகுதியில் பாபர் மசூதி இடிப்பு செலுத்திய தாக்கம்
இங்கு ஈழப்பிரச்சனையின் போது இல்லை. நான் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை.
ஆனால் மக்கள் உணர்ச்சியவயப்பட்டு திரண்டு தெருவில் வருவது அங்கு பெரும்பான்மை இந்துக்கள்
விசயத்தில் நடந்தது. இங்கு அப்படியான ஒரு உணர்ச்சிமேலிடல் தமிழ்தேசிய பிரச்சனையின்
போது நிகழ்வதில்லை. வடக்கிந்தியர்களைப் போல மத ரீதியான உணர்வெழுச்சியும் தமிழகத்தில்
நிகழாது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஒன்று திரண்ட
தமிழகம் இன்று மாறி விட்டது. தமிழர்களை இன்று எதுவும் எளிதில் உலுக்குவதில்லை. பொருளாதார
சிக்கல்கள் மட்டுமே அவர்களே பிரதான அக்கறை. அன்றாட பிரச்சனைகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களாய்,
தம் பிரதேசம், தம் சாதி என அக்கறைப்படுகிறவர்களாய் தமிழர்கள் மாறி விட்டார்கள். மீனவர்கள்
கொல்லப்பட்டால் பிற தமிழர்களுக்கு அது ஒரு மீனவ சமூக பிரச்சனை மட்டுமே. சிங்களவர்
× தமிழர் என இப்பிரச்சனையை கண்டு உணர்ச்சிவயப்படுவதில்லை. ஒருவேளை ஈழத்தில் வசிப்பவர்
மலையாளிகளோ கன்னடியரோ என்றால் நிச்சயம் அம்மாநில மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி
இருப்பார்கள். அவர்களின் அரசியல்கட்சிகளும் மைய அரசின் மீது அழுத்தம் செலுத்தி இருக்கும்.
ஆனால் தமிழகத்தில் நிலை வேறு. மொழி சார்ந்த தேசிய
உணர்வு இன்று மக்களை ஒன்றிணைப்பதில்லை. நதிநீர் பங்கீடு விவசாயிகளின் பிரச்சனை மட்டுமாகி
விட்டது. பாலாற்றின் மணல் கொள்ளையர்களுக்கு எதிராய் போராடும் களத்தூர் மக்களை போலீஸ்
கடுமையாய் ஒடுக்கும் போது அது அவ்வூர் மக்களின் பிரச்சனை மட்டுமே. கைக்கும் வாய்க்குமான
தூரம் நீண்டு கொண்டே போகும் போது மக்களுக்கு வாழ்க்கையில் அடிப்படை வசதிகளும், அதன்
பிறகு சொகுசுகளும் சேமிப்புமே பிரதானமாகிறது. தமிழகத்தில் தமிழ்தேசியவாதம் காலமாகி
விட்டது. தேசியவாதத்தின் சமாதியில் லௌகீகவாதம் தலையெடுத்து விட்டது.
இதற்கு உலகமயமாக்கல் ஒரு காரணமாய்
இருக்கலாம். அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் வழி உருவாகி வந்த ஒரு தலைமுறை மிகவும்
லௌகீகமானவர்களாக மாறியிருக்கலாம். தொடர்ந்து பொழுதுபோக்கை மட்டும் திணித்து மீடியா
நம்மை வெறும் கேளிக்கை ஜீவிகளாய் மாற்றி இருக்கலாம். இது ஒரு கலாச்சார வீழ்ச்சியாகவும்
இருக்கலாம். அல்லது இது தமிழர்களின் அடிப்படை குணமாகவும் இருக்கலாம். தமிழகத்தில் போல
வடக்கத்தியர்கள் (பல்லவர்கள்), தெலுங்கர்கள், முகமதியர்கள் என பலதரப்பட்டவர்கள் வந்து
நீண்ட காலம் சாம்ராஜ்யங்களை வேறு தென்னக மாநிலங்களில் ஸ்தாபித்ததில்லை. அதன் பிறகும்
கூட பிறமொழியினரை வரவேற்று இடமளித்து வளரவிட தமிழர்கள் என்றுமே தயங்கியதில்லை. இந்த
inclusiveness கன்னடியர்களுக்கோ தெலுங்கர்களுக்கோ மலையாளிகளுக்கோ இருந்ததாய், இருப்பதாய்
தெரியவில்லை. அங்கு ஒரு தமிழர் முதலமைச்சராகவோ சூப்பர் ஸ்டாராகவோ முக்கியப் எழுத்தாளனாகவோ
இருந்ததுண்டா? அச்சமூகங்கள் exclusive ஆக உள்ளன. இங்கு நம் சினிமாவில் தமிழை கன்னடிய
சாயலில் ரஜினி பேசினால் அது மக்களால் எந்தளவு சிலாகித்து கொண்டாடப்பட்டது! தமிழர்களுக்கு
மாறுபட்ட கலாச்சார அம்சங்களை ஏற்று கிரகிப்பதில் ஒரு இயல்பான ஆர்வம் இருக்கலாம். அப்படி
என்றால் நமது தமிழ்தேசியவாதிகளின் நிலைப்பாடு நம் பண்பாட்டுக்கு உள்ளேயா வெளியேவா இருக்கிறது?
பேராசிரியர் அழகரசனுடன் இது குறித்து
உரையாடும் போது இங்கு தமிழ் தேசியம் எவ்வாறு பல காலகட்டங்களில் பலவாறாக இருந்துள்ளது
என சுட்டினார். அறுபதுகளில் அது பிராமண எதிர்ப்பாய், பின்னர் எண்பதுகளில் ஈழ ஆதரவாய்,
அதன் பின் எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமும் அற்றதாய் மாறியது. இக்கட்டத்திலும் தியாகு
பேசும் தமிழ் தேசியம், வை.கோ, நெடுமாறனின் தமிழ்தேசியம், இப்போது சீமான் முன்னெடுக்கும்
சினிமாத்தனமான தமிழ்தேசியம் ஆகியவை பின்னணி, நோக்கம், பிராந்தியம் பொறுத்து மாறுபட்டவை.
அதாவது இங்கு ஒட்டுமொத்தமான, ஒரே நோக்கிலான ஒரு தமிழ் தேசியம் இல்லை. இந்த துண்டுபட்ட
தமிழ் தேசிய போக்கு மக்களை ஒன்றிணைக்கிற சக்தியாக அது இன்றில்லாததற்கு ஒரு காரணமாக
இருக்கலாம்.
இதை நம்மை விட மிக கூர்மையாக கவனித்து
வருபவர்கள் நம் அரசியல்வாதிகள். அவர்களுக்கு இதல்லவா வயிற்றுப்பாடு? ஒருவேளை இங்கு
தமிழ்தேசிய உணர்வு கொழுந்து விட்டு எரிந்திருந்தால் கலைஞர் காங்கிரஸுக்கு நிச்சயம்
கடும் அழுத்தம் கொடுத்திருப்பார். நான்காம் கட்ட போர் துவங்கிய போதே மத்திய அரசில்
இருந்து விலகி வந்து, மக்களின் உணர்வை ஒன்று திரட்டி தேர்தலில் வாக்குகளை குவித்திருப்பார்.
அவருக்கு போட்டியாய் ஜெயலலிதாவும் ஈழத்தாயாய் உருவெடுத்து களமிறங்கி பிரச்சாரம் செய்திருப்பார்.
புலி பிரதிநிதிகள் நேரடியாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால்
அப்படி ஏதும் நிகழவில்லை.
முத்துக்குமரனின் தற்கொலையை ஒட்டி
இங்கு உருவான பரபரப்பு கூட ஒரு சின்ன வட்டத்துள் முடங்கிப் போனது. இங்கு நிகழ்ந்த தமிழ்தேசிய
பேரணிகள், மேடைப்பேச்சுகள், கூட்டங்கள் ஆகியவை பொதுமக்களின் சிறிதும் அசைக்கவில்லை.
இதை நான் வருத்ததுடனே எழுதுகிறேன். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் நாம் தார்மீக ரீதியாய்
ஒரு உயர்வான இடத்தில் இருந்திருப்போம். ஆனால் ஈரானிலோ, அப்கானிஸ்தானிலோ எளிய மக்கள்
சிதைக்கப்படுவதை மீடியாவில் காணும் போது ஏற்படும் கலக்கம் மட்டுமே ஈழத்தமிழர்கள் விசயத்தில்
ஏற்பட்டது. இதைச் சொன்னதற்காய் நீங்கள் என் கழுத்தை நெரிக்க நினைக்கலாம். ஆனால் இது
தான் நிதர்சனம்.
இந்த உண்மையை நம் தமிழ்தேசியவாதிகளை
விட சரியாய் புரிந்து கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள். அவர்கள் தாம் வேறு, இந்தியத் தமிழர்கள்
வேறு என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் “நாம்” எனும் போது அதில் நீங்களோ நானோ
இல்லை. மொழி அடிப்படையில் இந்திய தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் ஒன்றிணைப்பது அசட்டுத்தனமானது.
அவர்கள் தமிழர்கள் என்பதாலே நாம் அல்ல. “தொப்புள் கொடி உறவு” மற்றொரு பாசாங்கு. நம்
கூடவே வாழும் தாழ்த்தப்பட்ட மக்களையே காதலின், நிலத்தின், கோயில் நுழைவு உரிமைகளின்
பெயரில் வேட்டையாடிக் கொல்கிறோம். தலித்துகள் மட்டும் நமக்கு தொப்புள் கொடி உறவில்லையா?
அவர்கள் மட்டும் என்ன லத்தீன், அப்கானிய மொழியிலா பேசுகிறார்கள்? தமிழகத்தில் சொந்த
நிலத்திலே இப்படி துண்டிபட்டிருக்கும் போது வெளிநாட்டு மண்ணில் பல தலைமுறைகளாய் வாழ்ந்து
வரும் ஈழத்தமிழர்கள் எப்படி தம் தொப்புள் கொடி உறவாய் பாவிப்பார்கள்?
ஈழத்தமிழர் மீது நமக்கு மொழி அடிப்படையில் கனிவும்
கரிசனமும் உள்ளது. அவர்கள் நலம் மீது அக்கறை உள்ளது. ஆனால் அவர்கள் வேறொரு பண்பாட்டில்
இருந்து வருகிறார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். ஈழத்தமிழர்கள் சிதைக்கப்பட்ட
மற்றும் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட படங்களைப் பார்க்கையில் ஒரு ஈழத்தமிழனுக்கு பழிவாங்கும்
உணர்வு வரும். நமக்கு கவலையும் இரக்கமும் ஏற்படும் என ஒரு நண்பர் கூறினார். இது உண்மை.
இரண்டுக்கும் வேறுபாடுள்ளது. வெளியில் இருப்பவருக்கே ஒரு துயரம் இரக்கத்தை ஏற்படுத்தும்.
உள்ளிருப்பவருக்கு பழிவாங்கும் உணர்வைத் தூண்டும். பழிவாங்கும் உணர்வை தூண்டியிருந்தால்
ஏன் நம் தமிழ்தேசியவாதிகளில் ஒருவர் கூட புலிகளின் ராணுவத்தில் இணைந்து நேரடியாய் களத்தில்
போராடவில்லை? இந்திய இஸ்லாமியரில் ஒரு சிறு பகுதி உலகளாவிய இஸ்லாமிய சமூக உணர்வுடன்
அல்கொய்தாவில் சேர்ந்து நேரடியாய் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது பழிவாங்கும்
உணர்ச்சி. அவர்கள் ஈராக்கிலும் அப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் கொல்லப்படுபவர்களை
தம் சகோதரர்களாக பார்க்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களை நாம் அவ்வாறு பார்க்கவில்லை.
நாம் கண்ணீர் மட்டுமே சிந்துகிற அந்நியர்கள்.
மொழி பண்பாட்டை தீர்மானிப்பதில்லை.
மாறாக, பண்பாடே மக்களின் நிலைப்பாடு மற்றும் உளவியலை தீர்மானிக்கிறது. மொழி அடிப்படையில்
ஒன்றாய் தோன்றும் மக்கள் பண்பாட்டு அடிப்படையில் இருவேறாக இருப்பார்கள். இதை ஈழத்து
போர்க்கவிதைகளை வாசிக்கையில் நாம் இன்னும் தெளிவாய் புரிந்து கொள்ளலாம். நமது தலித்
கவிதைகளில் உடல் ரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் பாலியல் வன்முறை பற்றி என்.டி ராஜ்குமாரோ,
சுகிர்தராணியோ எழுதும் போது அதில் கோபமும் வலியும் வெளிப்படும். அரசியல் விழிப்புணர்வு
மூலம் ஒன்று திரண்டு போராடுவது பற்றின கோரிக்கை அக்கவிதைகளில் இருக்கும். ஆனால் அகரமுதல்வன்
மற்றும் தீபச்செல்வன் ஆகியோர் போரில் சிதைந்த உடல்களைப் பற்றி எழுதும் கவிதைகள் முற்றிலும்
வேறானவை. அவை உடல்களின் வாதைகளை சித்தரிப்பது, ஒடுக்குமுறையை எப்படி தவிர்ப்பது ஆகியவற்றை
விடுத்து படுகொலைகள், பலாத்காரங்கள் மற்றும் சிதைவுகளை பழிவாங்கலுக்கான முகாந்திரமாய்
சித்தரிக்கின்றன. அகரமுதல்வனின் ஒரு கவிதையில் ஒரு ஈழப்பெண் போராளியின் பாலுறுப்புக்குள்
சிங்கள ராணுவ வீரன் துப்பாக்கி முனையை நுழைத்து வல்லுறவு செய்ததைப் பற்றி எழுதும் போது
கலப்பையால் அவன் அவள் உறுப்பில் உழுவதாய் ஒரு சித்திரத்தை எழுப்புகிறார். அந்த வல்லுறுவில்
அப்பெண் அடையும் வலியும் சிதைவின் அவமானத்தையும் விட அது எவ்வாறு இன்னும் உக்கிரமான
பழிவாங்கும் போராட்டத்துக்கான முனைப்பை மக்களிடம் தூண்டப் போகிறது என்பதிலே கவிஞனிடம்
அக்றை அதிகம் தெரிகிறது. அதனாலே சிதைக்கப்படும் பாலுறுப்பு ஒரு உழப்படும் நிலமாய் அக்கவிதையில்
மாறுகிறது. அதில் எதிர்கால போராட்ட விதைகள் முளைக்கும் என்கிறார். போராட்டத்தில் விழும்
குண்டு துளைத்த உடல்களையும் அவர் அவ்வாறே விதைக்கப்பட்ட நிலமாகவே பார்க்கிறார். சிங்கள
ராணுவத்தினரை “வன்முறை விவசாயிகள்” என்கிறார். அதாவது சிங்களவர்கள் செலுத்தும் வன்முறை
ஈழத்தமிழ் போராட்டத்துக்கே அனுகூலமாய் முடியும் என்கிறார். அப்போது சிதையும் தமிழன்
அடையும் கடும் வலியும் விடும் உயிரும் பொருட்டல்ல என்கிறார். இவ்வாறு ஒரு இந்தியத்தமிழன்
என்றுமே சிந்திக்கவோ எழுதவோ இயலாது. இதனோடு நமது புறநானூற்று போர்க்கவிதைகளை ஒப்பிட்டு
பாருங்கள். நம்மால் என்றுமே போரில் சிதையும் உடலை இவ்வாறு கொண்டாட முடிந்ததில்லை. வீர
மரணத்தை போற்றுவது வேறு போரில் சிதையும் உடலை உணர்ச்சியற்று பழிவாங்கும் முனைப்புக்கான
முகாந்திரமாய் பார்ப்பது வேறு. தில்லியில் இளம்பெண் கொடூரமாய் பலாத்காரம் செய்யப்பட்டு
கொல்லப்பட்ட போது இங்குள்ள மத்திய வர்க்கம் கொந்தளித்தது. இந்தியா முழுக்க தலித்துகள்
வல்லுறுவுக்கு ஊள்ளாக்கப்பட்டு கொல்லப்படும் போது அதைக் கண்டித்து பல கவிதைகளும் கட்டுரைகளூம்
எழுதப்படுகின்றன. இவற்றில் எங்குமே நீங்கள் அகரமுதல்வனிடம் வெளிப்படும் பழிவாங்கும்
வெறியை காண முடியாது. அகரமுதல்வனின் மனநிலையை எந்த இந்தியனும் ஒருநாளும் உணரமுடியாது.
ஒருவேளை காஷ்மீரத்து மக்களும், வடகிழக்கு மாநில மக்களில் ஒரு பகுதியினரும் அவ்வாறு
இந்திய படையினர் பற்றி உணரலாம். ஆனால் ஜனநாயக அரசியலின் பாதுகாப்பில் வாழும் இந்திய
தமிழனுக்கு இந்த வன்முறை உளவியல் என்றுமே இருக்காது. நாம் வேறு அவர்கள் வேறு. அவர்கள்
அனுபவித்த கலாச்சார வன்முறையின் நிலையின் ஒரு சிறு அணுவளவு கூட நாம் என்றும் அனுபவித்ததில்லை.
இது புரியாமல் ஈழத்தமிழரையும் இந்தியத்தமிழரையும் இன்றாய் பாவிக்கிற தேசிய அரசியல்
உண்மையில் போலியானது. ஈழப்போருக்கு ஒரு இந்தியன் கவலை கொள்ளலாம். கண்ணீர் சிந்தலாம்.
ஆனால் என்றுமே தன்னை அதற்கு பொறுப்பாய் நினைக்க மாட்டான். ஈழப்போரை நிறுத்துவதற்காய்
ஒட்டுமொத்த தமிழர்களும் இந்திய அரசுக்கு எதிராய் திரள நினைக்க மாட்டார்கள். அவ்வாறு
அவர்களை இங்குள்ள அரசியல் கட்சிகள் திரட்ட வில்லை எனக் கூறுபவர்களுக்கு நடைமுறை அரசியல்
புரியவில்லை என்று பொருள்.
போன மாதம் ஆதம்பாக்கத்தில் இரவு
ஒன்பது மணிக்கு ஒரு சிறு மைதானத்தில் வை.கோ ஒரு கூட்டம் நடத்தி அதில் உரையாற்றினார்.
நான் அங்கு நின்று அதைக் கேட்டேன். ஈழப்போரில் எவ்வாறு தமிழர்களை கொன்று குவித்தார்கள்,
அதற்கு எவ்வாறு இந்திய அரசு துணை நின்றது, இறுதி வரை எவ்வாறு புலிகள் நின்று வீரமாய்
போராடினார்கள் என மிக உணர்ச்சிகரமான, நாடகீயமான பேச்சு. அவரது குரல் எட்டுத்திக்கும்
எதிரொலித்தது. ஸ்பீக்கர்கள் வெடித்து விடுமோ என்று கூட ஒரு கட்டத்தில் நான் அஞ்சினேன்.
அற்புதமாய் ஒரு பேச்சை வடிவமைத்து, அழகான தத்ரூபமான ஒரு தமிழில் அவர் முன்வைப்பது பார்த்து
வியந்தேன். தமிழில் இது போல் ஒரு பேச்சுக்கலைஞன் இவருக்கு பின் தோன்றப் போவதில்லையோ
என நெகிழ்ந்தேன். ஆனால் அங்கு திரண்டிருந்த மக்கள் ஒரு டி.வி தொடரைப் போல் அசைவற்று
அவரது எரியும் நெருப்புரையை கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு உரையின் உணர்ச்சி அலையாக
கிளம்பி மக்களைத் தாக்கும் போது அதன் அதிர்வை அங்கிருக்கும் நாம் உணர முடியும். ஆனால்
அன்று வை.கோ பேசும் போது அப்படி எந்த அலையும் எழவில்லை. மக்கள் அதை ஒரு கேளிக்கை நிகழ்வை
போல் கவனித்து ரசித்து விட்டு கலைந்து விட்டனர். அவர்கள் இதைக் கேட்டு முடித்து அமைதியாக
வீட்டுக்கு திரும்பினதும் வை.கோவும் அவர்களை பார்த்து விட்டு மேடையை விட்டு அகன்றிருப்பார்.
மக்களுக்கு பழிவாங்கும் ரத்தக்கொதிப்போ வை.கோவுக்கு அது பற்றி ஏமாற்றமோ ஏற்பட்டிருக்காது.
தமிழ்தேசியவாதம் மற்றொரு கேளிக்கையாக தமிழ் சமூகத்துக்கு மாறி விட்டது. இதை வை.கோவும்,
சீமானும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் அறிவார்கள். அவர்களை எந்தளவுக்கு பயன்படுத்த
வேண்டும் இவர்களும், எவ்வளவு தொகைக்கு விலைபோக வேண்டும் என அவர்களும் அறிவார்கள். மக்களுக்கும்
எப்போதும் எதற்கு கைதட்ட வேண்டும் எனவும் தெரியும். இதுவே தமிழ்தேசியம் Version 2.0.
”ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக
போராடுவோம்
அவர்கள் எமது தொப்பூள் கொடிகளென
சுயநலங்களோடு ஒலிவாங்கியில் நடக்கும்
புரட்சி
இரவைக் கிழித்து எனது இருள்மைக்குள்
வீழ்கிறது”
- அகரமுதல்வன்
(”பதாகைகளில் சாகும் புரட்சி”)
(ஜூலை 2015 உயிர்மையில் வெளியான கட்டுரை)