சர்வோத்தமனின் மதமும் தேசியவாதமும்
எனும் கட்டுரை வலதுசாரி பார்வை பற்றின முக்கியமான மாற்றுப்பார்வையை கொண்டுள்ளது. இவ்விவாதத்தில்
தரப்புகள் மட்டுமே சாத்தியமாகும். தெளிவான தீர்வுகள், முடிவுகள் இல்லையென நினைக்கிறேன்.
மதம் தேவையா என்று கேட்டால் தேவை என கண்ணை மூடிக் கொண்டு சொல்வேன். ஆனால் மதத்தை கேள்வியின்றி
முழுமையாய் உணர்ச்சிவயப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். மதம் ஒவ்வொரு
நாட்டிலும் ஒன்றாக இருக்கிறது. இந்தியர்கள் மதத்தை ஒரு இறையியல் அமைப்பாக பார்க்கவில்லை.
இங்கு மதம் (இந்து மதம்) இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. 1) சாதிகளை ஒன்றாய் கோர்த்து
ஒன்றன் மேல் ஒன்றாய் உருளும் சக்கரங்கள் கொண்ட எந்திரம் போல் செயல்படுகிறது. 2) வாழ்க்கை
தர்க்கமும் நியாயமும் அற்ற ஒரு விளையாட்டு, ஒரு நாடகம் எனும் பார்வையை அளிக்கிறது.
தரவுகள், சாட்சியங்கள், பகுத்தறிவு அனைத்திற்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை என நாம் நம்ப
விரும்புகிறோம். விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கூட நம்மூரில் இந்த fetish உடனே இருக்கிறார்கள்.
அதனாலே இந்திய ஜனாதிபதி கூட வாயில் லிங்கம் வரவழைக்கும் பாபாவுக்கு பக்தராக இருந்தார்.
நம்முடைய சடங்குகள், கோயில் விழாக்கள், தீபாராதனை, பூஜை புனஸ்காரங்கள், புராத நம்பிக்கைகள்,
நல்ல நேரம் பார்ப்பது, ஜாதகம் கணிப்பது எல்லாமே ஒரு நாடகத்தின் பாத்திரமாகும் நம் ஆசையின்
பல பரிமாணங்களே. தான் சிரமப்பட்டு சபரி மலை ஏறி பிரார்த்தித்ததாலே எனக்கு குழந்தை பிறந்ததாய்
என் அம்மா என்னிடம் கூறுகிறார். எனக்கு அது உண்மையல்ல என தெரியும். ஆனால் அது ஒரு பார்வை.
என்னிடமும் இது போல் பல தர்க்கத்துக்கு புறம்பான பார்வைகள் உள்ளன. ஆனால் மதப்பார்வையின்
சிக்கல் அது உங்கள் கண்ணை முழுக்க கட்டி விடுகிறது என்பது.
ஏன் நாம் நமது முன்னோடி சிந்தனையாளர்கள்,
தத்துவஞானிகளை கொண்டாடுவதில்லை, அவர்கள் இந்து மதத்தின் பிம்பங்களாய் இருப்பதனாலா என
சர்வோத்தமன் கேட்கிறார். எனக்கு மற்றொரு காரணம் தோன்றுகிறது. சங்கரரின் சிந்தனைகள்
அனைவருக்குமான நவீன மொழியில் பிரசுரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படவில்லை. இன்று நாம்
நவீன கல்வியின் பால்பட்டு முன்னேறுகையில் நமது சமகால மொழி, தர்க்கம் ஆகியவற்றுக்கு
உட்பட்டவற்றைத் தானே படிக்க இயலும்? மத பண்பாட்டு சின்னங்களை முன்னெடுக்கும் அளவுக்கு
நம் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகளை நவீன பார்வையில் முன்னெடுக்க நம் வலதுசாரிகளே
முயலவில்லை. அவர்கள் போதுமான அளவில் இத்துறையில் எழுதவோ விவாதிக்கவோ ஆய்வுக்கட்டுரைகள்
பிரசுரிக்கவோ இல்லை. நம்முடைய சம்ஸ்கிருத பிரதிகளை கற்று ஆய்வுக்குட்படுத்த முயன்ற
அனன்யா வாஜ்பயி மூத்த பிராமணிய ஆசான்களின் எதிர்கொண்ட பிரச்சனைகளை The Story of my Sanskrit என்ற கட்டுரையில் கூறி இருக்கிறார். நம் பண்பாட்டை அறிவதில் முதல் முட்டுக்கட்டை
போடுவதே நம் வலதுசாரிகள் தாம். இத்தனை வேதபாடசாலைகள் நிறுவுகிற பிராமணர்கள் ஏன் அனைத்து
சாதியினரும் அங்கு கற்கும்படி ஊக்குவித்து எளிய ஆங்கிலத்தில் வேதங்களை பரவலாக்க கூடாது?
உங்களுக்கு குரான் கற்க விருப்பம் இருப்பது தெரிந்தால் இஸ்லாமிய நண்பர்கள் தாமாகவே
உதவ முன்வருவார்கள். புத்தகக் கண்காட்சியில் ஒரு ஸ்டாலில் குரான் வாங்கினேன். அடுத்த
நாளே ஒருவர் என்னை போனில் அழைத்து சந்தேகங்கள் இருந்தால் அவரே நிவர்த்தி பண்ணுவதாய்
கோரினார். இதை மத பரவலாக்கல் என்றே பார்க்கிறேன். மதமாற்ற முயற்சி என்றல்ல. இந்த தீவிரம்
எந்த இந்து மத ஆர்வலரிடம் நாம் காண்பதில்லை. அவர்களுக்கு அரசியலும் சாதியுமே பிரதானமாய்
உள்ளது. தொடர்ந்து இந்துமதத்தின் பிரச்சனைகளை நியாயப்படுத்துவதிலேயே தம் அத்தனை சொற்களையும்
வீணடிக்கிறார்கள். அரவிந்த நீலகண்டன் போன்றோர் அறிவியலையும் இந்து மதத்தையும் இணைத்துப்
பார்ப்பதில் வியர்த்தமாய் நேரத்தை செலவழிக்கிறார். எதற்கு தலையையும் வலையும் இணைக்க
வேண்டும்? இந்து மதம் நவீனமானதல்ல. அதிலுள்ள சில நம்பிக்கைகள் ஜனநாயகத்தன்மை கொண்டவை
அல்ல. சமகாலத்துக்கு பொருந்தாத விசயங்களை உதறி விட்டு முழுக்க நவீனப்படுத்த வலதுசாரிகள்
தயாராக இல்லை.
நான் அடிப்படையில் அறிவு, பண்பாட்டு
பார்வை, தீவிரமான சிந்தனை ஆகியவற்றை மதிக்கிறேன். ஒரு இலக்கிய கூட்டத்திலோ, சில நல்ல
சினிமா பார்க்கும் கூட்டத்திலோ, பல்கலைக்கழக அரங்குகளிலோ இத்தன்மைகள் கொண்ட மக்களை
காண்கிறேன். சிறு வயதில் இருந்தே இத்தகையோர் தான் என்னை ஈர்த்திருக்கிறார்கள். சிறுவயதில்
இருந்தே என் வீட்டுப்பக்கத்தில் உள்ள கோயில்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் அங்கு வருபவர்கள்
நுண்ணறிவும் பண்பாட்டுணர்வும் அற்ற முரடர்களாகவே இருக்கிறார்கள். கோயிலுக்குள் வெள்ளையர்கள்
வந்தால் அந்நிய மதத்தவர் எனக் கூறி அவர்களை பழித்து துரத்தியதை பார்த்திருக்கிறேன்.
சாப்பாட்டு பந்தியில் சில சாதியினரை விலக்குவதை பார்த்திருக்கிறேன். என்னைப் போன்ற
ஊனமுற்றோரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால்
மேற்சொன்ன இலக்கிய கூட்டங்களிலோ பல்கலைக்கழக அமர்வுகளிலோ இப்பிரச்சனைகள் இல்லை. யாரும்
நுழைய முடியாத ஒரு கோயிலை விட எல்லாரும் நுழைய முடிகிற வகுப்பறையோ வணிக ஸ்தாபனமோ இலக்கிய,
அரசியல் கூட்டங்களோ மேல் என நினைக்கிறேன்.
அடுத்து நம்பிக்கைக்கு வருவோம்.
நம்மால் நம் முந்தைய தலைமுறையினரைப் போல எளிதில் சம்பிரதாய சடங்குகளில் நம்பி பங்குபெற
முடியுமா என சந்தேகம் உள்ளது. அரைமனதுடன் தான் பல சடங்குகளை செய்கிறோம். ஒரு புறம்
நம்பியபடியே இன்னொரு புறம் நம்பாதிருக்கிறோம். என் அப்பா இறந்த போது அவருக்கு ஈமச்சடங்குகள்
செய்வதை மறுத்து விட்டேன். என்னதான் உணர்ச்சிகர மனநிலையில் இருந்தாலும் அச்சடங்குகள்
எனக்கு அந்நியமாய் தோன்றின. ஒரு காகம் என் அப்பா வடிவில் ஒரு குறிப்பிட்ட நாளில் என்னைத்
தேடி வருவார் என என்னால் என்றும் நம்ப முடியாது. மேலும் அப்பாவை காகமாய் நினைத்தால்
காகம் மேல் எனக்கு வெறுப்பு வந்து விடும். எந்த காகமும் என் அப்பா அளவுக்கு கொடுமைகள்
பண்ணியிருக்காது.
நாம் மதத்துடன் ஒரு நெருங்கிய
உறவு கொண்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது கேள்விகளுக்கு
அப்பாற்பட்ட உறவாக இருக்கக் கூடாது. மத நம்பிக்கை அற்றவர்களும் கூட மத நிகழ்வுகளை உற்று
கவனிக்க வேண்டும். அவற்றில் மனித மனதில் அடியொழுக்குகள் புலப்படக் கூடும். இப்போதைக்கு
மதம் என்பதன் அடிப்படையில் லட்சக்கணக்கான பேர்கள் ஒன்று கூடி சமூகமாக்கலில் இணைகிறார்கள்
என்பது தான் ஒரே சாதகமான அம்சம்.
“கரமசோவ் சகோதரர்களில்” தஸ்தாவஸ்கி இறை நம்பிக்கை
என்பது உணர்ச்சிகரமான, வலுவான ஒரு பிடிப்பு என்பார். நம்பிக்கைக்கு ஆதாரங்கள் தேவையில்லை.
விளக்கங்கள், சரி தவறுகள் இல்லை. மிக மோசமான வாழ்நிலையிலும் ஒருவனுக்கு நம்பிக்கை விலகாது.
அது அவன் ஆதார உணர்ச்சியாக இருக்கும். இன்று நான் அப்படியான மனிதர்களை காண்பதில்லை.
ஒன்று அவர்கள் தம் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் அடையாளமாய் மதத்தை பார்க்கிறார்கள். அல்லது
தேசலான பசை போன்ற நம்பிக்கை அவர்களை மதத்தோடு ஒட்டி வைக்கிறது. வழிபட்டால் நல்லது நடக்கும்
என நினைக்கிறார்கள். வாஸ்து போல் ஒன்றாய் கடவுள் இன்று இந்துக்களுக்கு மாறி விட்டார்.
அதனால் தான் மதம் இந்தியாவின் மிகப்பெரும் விற்பனைப் பண்டமாய் மாறி இருக்கிறது. நம்பிக்கை
உள்ள சமூகத்தில் நீங்கள் இப்படி மதத்தை கார்ப்பரேட் ஆக்க முடியாது. துண்டுத்துண்டாய்
பெயர்த்து விற்க முடியாது.
நம்முடைய பண்பாட்டின் மொத்த சேமிப்புக்கிடங்கும்
மதம் தான் எனவும் நான் நம்பவில்லை. நம்முடைய கலைவடிவங்கள், தொன்மங்கள் மத்துடன் தொடர்பு
கொண்டவையே ஒழிய அவை மதத்தின் பகுதி அல்ல. நூற்றுக்கணக்கான வடிவங்களில் புழங்கி வந்துள்ள
மகாபாரதக்கதை ஒரு மத தொன்மக் கதை அல்ல. எந்த மையத்திலும் இணையாத நாட்டுப்புற வடிவங்கள்
இன்று இந்து மத அமைப்புக்குள் மெல்ல மெல்ல கொண்டு வரப்படுகின்றன. சொல்லப் போனால் நம்
தொன்மங்கள் இறை நம்பிக்கையை அல்ல வாழ்வின் சிக்கல்களை தான் வலியுறுத்தி காட்டுகின்றன.
நம் பண்பாட்டை அறிய இறைநம்பிக்கையோ சடங்குகளில் பூரணமாய் தோய்வதோ அவசியம் இல்லை. இதையே
மேலும் வரித்தெடுத்தால் கிறுத்துவம், இஸ்லாம் போல இந்து மதம் முழுமையான நம்பிக்கையை,
பயபக்தியை எதிர்பார்ப்பதில்லை. சாராயம் படைத்து விட்டு அதையே பக்தனும் குடிக்கிற பூர்வகுடி
தெய்வங்கள் வாழ்ந்த மண் அல்லவா இது! இங்கு கணிசமான சமூகங்களுக்கு தெய்வம் என்பது தம்மை
காக்கவும் துன்புறுத்தவும் கூடிய அதே சமயம் தமக்கு சமமானதாயும் உள்ள ஒரு சக்தி மட்டுமே.
இருபதாம் நூற்றாண்டில் பக்தி கலாச்சாரம் வளர்ந்து இந்து பெரும்பான்மைவாதம் ஒரு அரசியல்
சாத்தியமாய் முன்னெடுக்கப்பட்ட போது தான் இந்துமதம் வலதுசாரி தன்மை கொண்டதாகியது. கடவுள்
மனிதனுக்கு அப்பாற்பட்டவரானார். அன்றாட வாழ்வில் இருந்து விலகியவர் ஆனார். சில சாதிகளால்
மட்டுமே தீண்டக்கூடியவர் ஆனார். வெறுப்பு அரசியலுக்கு பயன்படக்கூடிய குறியீடானார்.
என்னைப் போன்றோர் வேண்டுவதெல்லாம் அந்த பழைய செக்யூலரான இந்து மதத்தை மீட்டெடுக்க வேண்டும்
என்பதே. தன் தவறை உணர்ந்த ராமன் ஆற்றுக்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலை செய்தான்
எனக் கூறிய மதம் மீள வேண்டும் என்கிறோம். ராமனை ஒரு மாசற்ற உத்தம நாயகனாக்கி அவன் பெயரில்
பிறர் தலையை அறுப்பவரின் மதம் சீர்திருத்தப்பட வேண்டும் என்பது.
அடுத்த தலைமுறையினர் இந்து மதத்தை
புறக்கணிக்க வேண்டியதில்லை. ஆனால் இந்துத்துவாவை விமர்சித்தபடியே இந்து மதத்தை அணுக
வேண்டும். இந்து மதத்தை பீடித்திருக்கும் அரசியல் நோய்மையை விலக்காத வரை அம்மதத்தையும்
அவர்களால் சரியாய் புரிந்து கொள்ள இயலாது. அடுத்து மிகுந்த விழிப்புணர்வுடன் இம்மதத்தை
அறியவும் அதில் செயல்படவும் செய்ய வேண்டும். ஊரில் நான் அறிந்த மார்க்ஸிய இஸ்லாமிய
நண்பர்கள் தம் மதத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்கிறார்கள். அது பற்றி பேசுகிறார்கள்.
ஆனால் அதை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் தயாராக உள்ளார்கள். அதனால் தான் ஹெச்.ஜி
ரசூலை ஊர் விலக்கம் செய்தார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு எதிராய் பெரும் கண்டனக்கூட்டம்
நடத்தினார்கள். மதத்தை இன்றைய காலத்தில் அணுக வேண்டிய சரியான முறை இது தான். எனக்கு
மதத்தில் ஈடுபாடு உண்டு. சிறுவயதில் தியானம் பயின்றதுண்டு. மத பேருரைகளை ஆர்வமாய் கேட்பேன்.
மதநூல்கள், தத்துவ நூல்களில் எனக்கு விருப்பம் அதிகம். திருவல்லிக்கேணியில் இருக்கையில்
கோயிலில் பாகவதம் என்றால் நிச்சயம் ஆஜராகி விடுவேன். பகவத் கீதை வகுப்புகளுக்கும் போயிருக்கிறேன்.
இவையெல்லாம் வாழ்வின் சிக்கல்களை, பிரச்சனைகளை அறிய நம்மை தயார்படுத்துகின்றன. ஆனால்
கோயிலில் முண்டியடித்து வரிசையில் நின்று கும்பிட மாட்டேன். அதனால் என் துயர் தீரும்
என நம்ப மாட்டேன். மனைவியையும் தேசத்தையும் அடைந்த பின் ஆயோத்தியாவில் ராமன் நிம்மதியற்று
அதிருப்தியாய் வாழ்ந்ததாய் ராமாயணம் சொல்கிறது. அப்படி என்றால் நம் மதம் கூறும் துயரம்
என்பது பக்தியிலும் நம்பிக்கையிலும் தீரும் ஒன்றல்ல. இன்றைய மதம் எளிமைப்படுத்தப்பட்ட
கார்ப்பரேட் புரோஷராக உள்ளது.
என் உறவினர்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க தலைப்படுகிறார்கள்.
எனக்கு குழந்தை பிறந்ததும் ஒருவர் மருத்துவரிடம் பாய்ந்து போய் நேரம் என்ன என அறிந்து
கொள்ள முயன்றார். இன்னொருவர் மனைவியின் சிசேரியனுக்கு முன்பே நல்ல நேரத்தில் அதை ஆரம்பிக்கும்
படி மருத்துவரிடம் கேட்டார். அவர் மறுத்து விட்டார். இந்த போக்கு வாழ்க்கையை அசட்டுத்தனமாய்
எளிமைப்படுத்துகிறது. இப்படி எளிமைப்படுத்தின, ஒரு உணர்ச்சிப்பெருக்கு வடிவில் தான்
இன்றைய மதம் உள்ளது. அதனால் தான் என் குழந்தைக்கு எந்த சடங்கும் கூடாது என்றேன். ஏனென்றால்
அதற்கு நல்ல நேரம் பார்ப்பார்கள். அதென்ன நல்ல நேரம், கெட்ட நேரம்? அப்படி நம் காலத்தை
பிரித்து விட முடியுமா என்ன? நம் மதமே வாழ்வை அப்படி பிரிக்க, எளிமைப்படுத்த முடியாதென்று
தான் கூறுகிறது. நம் அடுத்த தலைமுறையினர் அறிவுரீதியாய், சற்றே விலகின பார்வையுடன்
மதத்தில் ஈடுபட வேண்டும்.
உணர்வுரீதியாய் மந்தையோடு மந்தையாய்
ஓடுகிற ஊர்வலமாய் மதத் தேடல் இருக்கக் கூடாது. ல.சா.ராவை போல் அல்லாது நகுலனைப் போல்
இருக்க வேண்டும் எனவும் கூறலாம். நகுலன் மதத்தின் மீது அபார ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஆனால் நவீனமான கூர்மையான மனமும் கொண்டிருந்தார். அவரிடம் புராதனத்திற்கும் நவீனத்துக்குமான
ஒரு முரணியக்கம், ஒருவித உள்மோதல் இருந்தது. இன்றைய மற்றும் அடுத்த தலைமுறைக்கும் இந்த
உள்மோதல் அவசியம். முரணியக்கம் தான் உங்களுக்கான உண்மையை தரும். ஹெகல் சொன்னது போல
ஆழமான புண் அகத்தில் இருந்தால் தான் பூரணமான சொஸ்தமும் தீர்வும் வாய்க்கும்.
நான் இவ்விசயத்தில் தி.க பகுத்தறிவாளர்களின்
பக்கமும் இல்லை. சில இடதுசாரிகள் போல் மதத்தை சமூக மீட்சிக்கு எதிரானதாகவும் காணவில்லை.
சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகளின் வடிவில் மிக தட்டையானதாய், எளிமைப்படுத்தப்பட்டதாய்
முன்வைக்கப்படும் இந்து மதம் உண்மையில் நமக்கு கேடானது என நினைக்கிறேன்.
இனி சாதிக்கு வருவோம். சாதியை
ஒரு பழங்குடி அடையாளமாய் பார்ப்பது சரியா? மனிதர்கள் ஏன் தத்தமது சமுதாய அடையாளஙக்ள்,
வழமைகளுடன் தனித்துவமாய் வாழக் கூடாது? தாராளமாய் வாழலாம். ஆனால் இன்று தன்னை முன்னெடுக்கும்
எந்த சாதியாலும் பிறரை ஒடுக்காமல் அதை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. அதனால் கலப்புத்திருமணங்கள்,
நகரமயமாக்கல் மூலம் சாதிகள் தன் முகங்களை ஓரளவு இழப்பது நல்லது தான் என நினைக்கிறேன்.
அதனால் மனிதன் தன் வேர்களை இழக்கிறான் என்றால் போகட்டுமே! இழப்பில்லாமல் மேம்பாடு இல்லை.
சாதி இருக்கட்டும். ஆனால் அது முக்கியத்துவம் குறைந்ததாய் இருக்கட்டும். அதற்கு நம்
மீதுள்ள பிடி லகுவாய் மாறட்டும். ஒரு குழந்தைக்கு சாதி அடையாளத்தை வலியுறுத்துவது,
சாதி பெருமிதத்தை கட்டமைப்பது உறவினர்கள் தாம். வெறும் பெற்றோரால் சாதியுணர்வை எளிதில்
ஊட்ட இயலாது. தம் சாதிக்குள் மட்டும் புழங்குகிற ஒருவன் பிற சமூக மக்களை புரிந்து கொள்ள
முடியாதபடி கசப்புணர்வும் வெறுப்பும் குறுகின பார்வையும் கொண்டவனாகிறான். எனக்கு சிலரைத்
தெரியும். அவர்களுக்கு தம் சாதியைக் கடந்து ஒரு நண்பர் கூட இல்லை. பிற சாதியினரிடம்
அணுக்கமாய் உரையாடவே மாட்டார்கள். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே சொந்த சாதியினர் அதிகமாய்
வசிக்கும் இடத்தில் வளர்ந்திருப்பார்கள். சடங்குகள், விழாக்கள், நிகழ்ச்சிகள் என எங்கும்
சொந்த சாதியினருடன் மட்டுமே பேசுவார்கள். வளர்ந்த பின் கல்லூரி, வேலையிடங்களிலும் சொந்த
சாதியினராய் பார்த்து குழு அமைத்து அவர்களுக்கு உள்ளாகவே உரையாடுவார்கள். இந்த இனக்குழுவாதம்
நவீன ஜனநாய சமூகத்திற்கு புறம்பானது. இதை தகர்ப்பதற்கு முதலில் குழந்தைகளை நம் உறவினர்களிடம்
அதிகம் பழக்காமல் வெளிநபர்களுடன் பேச விட வேண்டும். பல்வேறு சாதியினர் மற்றும் வேற்று
மதத்தவர் மத்தியில் வளரும் குழந்தைக்கு நிச்சயம் பரந்து பட்ட பார்வை இருக்கும். தோலையும்
முக அமைப்பையும் தோற்றத்தையும் மொழிவழக்கையும் கடந்து மனிதர்கள் ஒன்று தான் எனப் புரியும்.
ஒருவேளை அத்தகைய மனிதனுக்கு வலுவான பண்பாட்டு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். அவன் ஊரில்
கெடாவெட்டும் போது தேர் இழுக்கும் போதும் அதில் முழுமனதோடு கலந்து கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால் அவர் பரந்துபட்ட பார்வையும் நுண்ணிய அறிவும் கொண்டவனாய் இருப்பான்.
நவீன மனிதனுக்கு தன்னுணர்வு மட்டுமே
ஒரே வெளிச்சம். தன்னுணர்வு தான் அவனை வாழ்வை ஆழமாயும் தீவிரமாயும் வாழ உதவுகிறது. சாதியும்
மதமும் அவனுக்கு எப்போதும் வேண்டுமானாலும் கழற்றி அணியும் தொப்பி போல இருக்க வேண்டும்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பலரும் சாதி மதத்தை ஏதோ கர்ணனின் கவசம் போல் கருதுகிறார்கள்.
கர்ணனே அதை துச்சமாய் பிய்த்து கொடுத்து விட்டான். ஆனால் இவர்களின் ஈகோ அதை அனுமதிக்காது.