இந்த மாத உயிர்மையில் வந்த எனது “இந்து, இஸ்லாம், கிறித்துவம்: குட்டையும் மட்டையும்” என்ற கட்டுரையை ஒட்டி பாலசுப்பிரமணியம் என்பவர் என்னை “மதங்களை வெறுப்பவன்” திட்டி கடிதம் எழுதியிருக்கிறார். அது குறித்து மூன்று விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்று, வெறுப்பு என்பது உக்கிரமான ஈடுபாட்டில் இருந்து வருவது. எனக்கு மதம் எனும் அமைப்பின் மீது அத்தகைய ஈடுபாடு இல்லை. ஆக காழ்ப்பும் இல்லை. இரண்டு, மதம் இன்று நம்மை நவீன வாழ்வின் உரிமைகள், வாய்ப்புகள், முக்கியமாய் சுதந்திரம் ஆகியவற்றை அடைய விடாமல் தடுப்பதாய் நம்புகிறேன். ஒருவன் சமகாலத்திலும் மதத்திலும் ஒரேநேரத்தில் இருக்கவே முடியாது. ஆக, சிறுபான்மையினர், பெண்கள், ஊனமுற்றோர், ஜனநாயகவாதிகள் அனைவருக்கும் பெரும் தடைச்சுவர் மதம். நாம் மதத்தை எதிர்ப்பது கடவுளை பிடிக்காததனால் அல்ல. மூன்று, மதம் நம்மை தர்க்கரீதியாய் சுயசார்போடு யோசிக்க விடாமல் எளிதில் தன்னல அமைப்புகள் அல்லது நிறுவனங்களுக்கு அடிமையாக்குகிறது. மதத்துக்காக கொல்லப்பட்ட கொல்லுகிற மக்களின் எண்ணிக்கை முடிவற்றது. இன்றும் இதை எழுதுகையிலும் யாரோ ஒருவர் மதத்துக்காக கொல்லப்படுகிறார், துப்பாக்கி...