என் கூடப்படித்த நண்பன் ஒருவனின் அப்பா சில மாதங்களுக்கு முன் காலமானார். அவன் படுமக்கு. அவர் தான் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து பையனுக்கு அரசு வேலை வாங்கித் தந்தார். ஆனால் அப்பாவுக்கு மகன் மீது அப்படி ஒரு பெருமை. சதா புகழ்ந்து கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் பல புத்திசாலியான திறமைசாலியான மகன்களை மட்டம் தட்டும் தகப்பன்களை பார்த்திருக்கிறேன். இந்த முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு பொது நியதி இருக்கிறது.
பொதுவாக பெற்றோருக்கு மக்கு பிள்ளைகளை அதிகம் பிடிக்கிறது. அவர்களை கொண்டாடுகிறார்கள். பாதுகாக்கிறார்கள். திறமைசாலி பிள்ளைகளுக்கு இயல்பிலேயே கொஞ்சம் அலட்சியமும் சுதந்திர விருப்பங்களும் வந்து விடுகின்றன. அவர்கள் மீது குறிப்பாக அப்பாக்களுக்கு ஒரு அச்சமும் வெறுப்பும் வந்து விடுகிறது. வரலாற்றிலேயே பல சாதனையாளர்களுக்கு அப்பாவோடு அவஸ்தையான உறவு தான் இருந்திருக்கிறது. பலரும் தம்மை ஏன் அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கவலையை நெஞ்சில் சுமந்தபடி தான் வாழ்நாளெல்லாம் இயங்கி இருக்கிறார்கள்.
யோசிக்க யோசிக்க மக்காய் இருப்பவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாய் அமைந்து விடுவதை பார்க்கிறேன். கண்களில் குழப்பமில்லை, தலைக்கு மேல் பாரமில்லை. உலகில் என்ன நடந்தாலும் அவர்களை பாதிப்பதில்லை. இயல்பான பலவீங்கள் தம்மை பாதுகாக்கும் உணர்வு அபாரமாக வளர்த்து விடுகிறது. அதனால் தம்மை பாதுகாப்பதை தவிர எந்த கவலையும் ஏற்படுவதில்லை. வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில், நண்பர்கள் இடையே இவனை தனியே நம்பி விட முடியாது என அஞ்சி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க மாட்டார்கள். யாராவது அவர்களை உள்ளங்கையில் வைத்து தாங்கியபடி இருப்பார்கள்.
நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு மூளைவளர்ச்சி குன்றியவர் இருக்கிறார். அவர் எந்த வேலையில் பண்ண மாட்டார். ஏதாவது ஒரு துறைக்கு போய் தெரிந்தவர்களிடம் காசு கேட்பார். அவரது அண்ணன் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வுற்றவர் என்பதால் எல்லோருக்கும் அவர் மீது சற்று கருணை உண்டு. ஆனால் அவர் தெய்வத்திருமகன் விக்ரம் போல் தேவமகன் அல்ல. குடி, கஞ்சா பழக்கம் உண்டு. கல்யாணமாகி குழந்தைகளுக்கு கல்யாணமாகி பேரப்பையன்களும் பிறந்து விட்டார்கள். பார்க்க நாற்பது வயது எனத் தான் தோன்றும். ஆள் பலே ஜாலி ஆசாமி. பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு, விபச்சார சகவாசம் எல்லாம் உண்டு. இப்போது சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு இப்படி கொடுத்து வைத்த வாழ்க்கை உண்டு?
