Skip to main content

Posts

Showing posts from January, 2010

கேதி கல்லிஸ் கவிதை

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள என் மொழியாக்க கவிதை. பொன்னிறம் ஆக நான் அவனிடன் சொன்னேன்: கட்டில் மேல் நின்று வெளியே பார், மரங்களுக்கு கீழ் தங்க இலைகளின் விரிப்பு எத்தனை தடிமனாக உள்ளது பார், இலைகள் விழுவதை கவனி. அவன் தயங்கினான். நான் யாருடைய கட்டிலின் மீதாவது நின்று ரொம்ப காலமாகிறது, அவன் சொன்னான். மேலும், ஒருவேளை நான் வெளியே பார்த்திட நீ காண்பதை பார்க்கவில்லை என்றால், என்ன செய்ய. ஒருவேளை எனக்கு இலைகள் பொன்னிறமாக இல்லை எனில். ரொம்ப காலமாகி விட்டது, அவன் திரும்பவும் சொன்னான், தன் கால்சட்டையின் மந்தமான பழுப்பை நீவியபடி, தன் ரொம்பவே சின்ன கண்ணாடிகளை சரி செய்தபடி; இதோ பார், நான் சொன்னேன், என் கையை பிடித்துக் கொள், நாம் சேர்ந்து கட்டிலில் நிற்போம். ஆக அவன் என் கைகளை பற்றினான்; ஒன்றாக நாங்கள் கட்டிலில் நின்றபடி கவனித்தோம், நாங்கள் தொடர்ந்து கவனித்தோம் இலை-அகற்று எந்திரம் கொண்டு ஆட்கள் புல்வெளியை சுத்தப்படுத்திட, குழந்தைகள் ஒரு நாயுடன், வாலில் ஒரு பொன்னிற இலை கொண்டிருந்த கறுப்பு நாய், நடைபழகுவதை கவனித்தோம். மௌன உறைபனி பொழுதுகள் வர, நாட்கள் சாம்பலாகி, மேலும் வெள்ளையாகி, பனிப் பொழிந்து, முடி...

ராபர்ட் பிளை கவிதைகள்

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதைகள் மகிழ்ச்சியின் மாதம் குருட்டுக் குதிரை செர்ரி மரங்களுடன் நிற்கிறது. தண்மையான பூமியில் இருந்து எலும்புகள் மின்னும். ஏறத்தாழ ஆகாயம் வரை இதயம் துள்ளும்! ஆனால் அரற்றல்களும் தாவர இழை உறுப்புகளும் நம்மை திரும்ப இருளுக்குள் இழுக்கும். இரவு நம்மை எடுத்துக் கொள்ளும். ஆனால் ஒரு விலங்குப்பாதம் சாலையை வெளிச்சமூட்ட இருட்டில் இருந்து வெளிவருகிறது. ஒன்றும் பிரச்சனையில்லை. எனது அனல் தடயங்களை இரவின் ஊடாக தொடர்வேன். மரணத்துக்குப் பிறகு காலம் பின்னோடுகிறது விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக ரொட்டி அரைக்கும் சாம்சன் தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதை மறக்கிறான், பிலிஸ்டைனர்கள் அவனிடமிருந்து பிடுங்கின பதில்கள் சிங்கத்துக்குள் திரும்புகின்றன. கசப்பும் இனிமையும் மணம் புரியும். அவனே சிங்கத்துக்கு அநியாயம் செய்தான். இப்போது கோதுமைப் பயிர் காற்றை தன் மனைவி வாலால் வருடுகிறது; கழுதை நீண்ட புற்களில் ஓடுகிறது, மேலும், சுவர்க்கத்தை விரைந்து பார்த்தபடியால், நரியின் உடல் இளங்காவி பூமியில் ஓய்வாகச் செல்லும். மரணத்துக்குப் பின் ஆன்மா தன் சந்தடியற்ற வீட்டுக்கு பாலும் தே...

வாசனை

தாமரை டிசம்பர் இதழில் வெளியான என் சிறுகதை மகிழ் கவனமாக பைக் கண்ணாடியில் தலை சீவிக் கொண்டான். பேராசிரியர் வீட்டு வாசலில் நாய் இருக்கும் அடையாளம் இல்லை. ஆனால் நிறைய பூந்தொட்டிகள் தாறுமாறாய் அடுக்கப்படிருந்தன. வாசல் பக்க தொட்டிகளில் ஜெவ்வந்தி மற்றும் வண்ணப்புள்ளி குரோட்டன்ஸ். இரண்டு பெரிய தொட்டிகளில் சூரிய காந்தி பூக்கள் மெல்ல தள்ளாடின. கறுத்த ஈர மண். முன்புற தொட்டிகள் இருந்த இடத்தில் கசிவின் தடம். பின்புறம் தொட்டிகளில் மிளகுச்செடி, சாம்பிலை குரோட்டன்ஸ் என பலவகைகள். ஆனால் அவை வாடி நின்றன. சில தொட்டிகள் இடுப்பு நொறுங்கி வேர்க்குவியல் சரிய சுவரில் சாய்ந்து நிதானித்தன. வாசல் கதவுக்கு மேலே ஒரு பூக்கொடி தொட்டி கம்பி பிணைப்பில் ஆடியது. அதில் மோதிடாது சுதாரிக்க வேண்டி இருந்தது. மகிழுக்கு ஆச்சரியம். பேராசிரியருக்கு என்றுமே தோட்டக்கலை, பூந்தொட்ட சமாச்சாரங்களில் ஆர்வம் இருந்ததில்லை. கடந்த முறை விச்சு வந்திருந்த போது லவ்பெர்ட்ஸ், கிளிகள், மைனாக்கள் என கூண்டுப் பறவைகளை வாசல் முகப்பில் தொங்க விட்டிருந்ததாக சொன்னான். மகிழுக்கு தெரிந்த வரையில் பேராசியருக்கு எந்த ஜீவராசியிலும் அனாவசியமாய் ஈடுபாடில்லை.அப்...

வலைப்பூக்களின் பால்வெளியில்

தாமரை இதழில் வலைப்பூக்கள் குறித்து ஒரு தொடர் எழுதுகிறேன். இந்த மாதம் வெளியாகி உள்ள முதல் கட்டுரை இது செவ்வாய்க்கிழமை கவிதைகள் தமிழ் வலைப்பூக்களை ஒரு விளக்க வளையத்துள் நுழைத்து எடுப்பது தான் இன்றைய சவால். இது ஒரு திறந்த நாட்குறிப்பேடா? இருக்கும் பட்சத்தில் அதை படிக்க வேண்டிய அவசியம் என்ன? படிப்பதற்காக எழுதப்படும் குறிப்பேடு ஒரு படைப்பாக்க பிரதி ஆகிவிடுகிறது. அல்லது பயிற்சிக்களமா, சுயபிரசுர மார்க்கம் மட்டுமா அல்லது பிரச்சார தளமா?பிற இடங்களில் இருந்து கத்தரித்து ஒட்டும் சைபர் பொதுச்சுவரா? தமிழ் வலைப்பூ வெளி முழுமையாக உருவாக வில்லை. வலைப்பூ எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஒரு அணுக்கமான வெளியை ஏற்படுத்துகிறது. கால/வெளி கட்டாயங்களில் இருந்து விடுவிக்கிறது. ஒரு இணைய படைப்பு எழுதப்பட்ட உடனே பிரசுரமாகி எதிர்வினை பெற்று மற்றொரு பதிவை எழுத தூண்டி தன் அடுத்த சுழற்சிப்பாதைக்கு ஆயத்தமாகும். உயிரோசை இணைய இதழ் அனுபவத்தை பற்றி குறிப்பிடும் போது மனுஷ்யபுத்திரன் என்னிடம் “உயிர்மையை விட உயிரோசை பலருக்கும் மனதளவில் நெருக்கமானதாக உள்ளது” என்றார். இதழ் பதிவேற்றம் ஒரு நாள் தாமதமானாலே அவருக்கு தொலைபேசி அழைப்புகள...

ஜெயமோகனின் கடுஞ்சாயா

வாழ்வில் முதன்முறையாக என் குருநாதரின் அறிவுரையை பின்பற்றி, அவர் தன் தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ... கடுஞ்சாயா (black tea) செய்து குடித்தபடி இதோ எழுதுகிறேன். ஆஹா, இந்த ஜன்னல் வழி வெளிச்சாரலை கவனித்தபடி கறுப்பு டீயை குடிக்கும் சுகம் அருமை. நாம் வழக்கமாக குடிக்கும் டீயை விடவும் இதற்கு ஒரு அலாதியான சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளது. சில நொடிகள் இளமை திரும்பி விட்டாற் போல் ஒரு உணர்வு வேறு. குருநாதர் இந்திய டீயின் வரலாறு, பண்பாடு குறித்தெல்லாம் விரிவாக எழுதி உள்ளார். வெறுமனே இந்த அதிஅற்புத தேநீரின் செய்குறிப்பு மட்டும் தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் அவர் தளத்துக்கு சென்று தொலைந்து போக வேண்டாம். கீழே சுருக்கமாக தருகிறேன். 1. தண்ணீரை கொதிக்க வையுங்கள் 2. குமிழ்கள் தோன்றும் முன்னரே இறக்கி விடுங்கள் 3. கால் ஸ்பூன் தேயிலை சேர்த்து கலக்குங்கள். 4. சரியாக நாற்பது நொடிகளில் எடுத்து வடிகட்டவும். 5. சர்க்கரை சேர்க்கவும். இது கீழைத்தேய தேனீராக இருக்க வேண்டும். ஆங்கில டீ முற்றிலும் மாறாக தயாரிக்கப் படுகிறது. நிமிடக்கணக்கில் கொதிக்க வைக்க்கிறார்கள். 41 நொடிகள் கொதிக்க வைத்தால் அத...

வெறுப்பு நேசம் எனும் புதிர்கள்

ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன். அப்பாவை நேசிப்பதை ஒரு இயல்பு மீறிய செயலாகவே நம்பி வந்துள்ளேன். பதின்பருவத்தில் ஆளுமை முதிரத் தொடங்கனதில் இருந்தே அவருடன் முரண்பட்டு வந்திருக்கிறேன். பிறகு அவரது வன்மத்தை வெறுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் ஆளுமையில் தெரிந்த அவரது குணாதசியங்களை வெறுக்க முனைந்தேன். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்து போனார். அப்போது அவரை செத்துப் போக மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் நினைவு வந்து திகைப்பூட்டின. என் இளமையில் அப்பா மாலைகளில் ரொம்ப கொடுமைகள் செய்வார். காலையில் போதை தெளிந்து சவரம் குளியலுக்கு பின் பதிவிசாக நல்ல அப்பாவாக அவர் அலுவலகம் கிளம்பிய பின் நான் அம்மா அக்கா சேர்ந்து அவரது துஷ்டத்தனத்தை குறித்து புகார் பேசி மனதை ஆற்றுவோம். புகார் படலம் முடிந்ததும் எனக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்படும். காலையில் அப்பாவிடம் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். மிக சுறுசுறுப்பாக இயங்குவார். உட்காரவே மாட்டார். நடந்து கொண்டே செய்தி படிப்பார். நின்று கொண்டே சன் செய்திகள் கேட்பார். என்னை கண்டிப்பதானாலும் மிகக்குறைவான வார்த்தைகளே...

ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி

பலவிதங்களில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒரு முன்னோடி படம் எனலாம். இது தமிழின் முதல் அசலான மிகுகற்பனை, மாய-எதார்த்த படம் என்பதால்; காதல், திகில், சாகசம் போன்ற குறிப்பான வகைமைக்குள் சிக்காமல் ஒரு விரிவான காவிய பரப்பில் அமைவதால், அடிவாங்கி, தோல்வி மற்றும் ஆற்றாமை உணர்வுகளால் அடிக்கடி அழும் எதார்த்த நாயகனை காட்டியிருப்பதால் ... இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இது ஒரு மிகுகற்பனை படத்தின் சாத்தியங்களை பயன்படுத்திகிறது. உக்கிரமான பல கவித்துவ படிமங்களை இதன் வழி உருவாக்கிறது. குறிப்பாக வெறும் காட்சிபூர்வ கிளர்ச்சி என்பதையும் மீறி மாந்திரிகம் குறித்த தருணங்களை மனித ஆழ்மனதின் ரகசியங்களை பேச மிகுந்த படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி உள்ளது. தமிழ் ஈழ இன-அழிப்பை இந்திய அரசியல் பின்புலத்தில் விசாரிக்கும் தமிழின் முதல் திரைப்படமும் கூட. பார்க்காதவர்களுக்கு ஒரு எளிய கதைச்சுருக்கம் 1279-இல் சோழ பேரசு வீழ்கிறது. வாரிசை கண்காணா இடத்தில் பாதுகாப்பாய் வளர்க்குமாறு அரச குரு உள்ளிட்ட ஒரு படையினரிடம் ஒப்படைத்து கூடவே பாண்டிய குலத்தவரின் குலதெய்வ சிலையையும் கொடுத்து விடுகிறார் சோழமன்னர். இந்த குழுவினர் தங்க...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 11

அம்மா தான் இத்தகைய வாதைகளில் இருந்து விடுபட்டவள் என்று நினைத்தாள்; ஏனெனில் அவளது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் அரகடாகா உடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். அவளது கனவுகள் அவளை ஏமாற்றின.

சு.ராவின் காற்று: வெளியேறலின் தவிப்பு

காற்று கதவை தட்டும் முட்டும் தாழிட்டதில்லை. ஒருக்களித்த கதவுகள் மீது ஆங்காரம் கொள்ளும் திற அல்லது மூடு எனக் கத்தும். எனினும் தூசு போர்த்தும் நெடுகிலும் பரப்பும். எனது பெயர் உக்கிரப்பெருவழுதி எனக் கூறிச் செல்லும். சருகு உதிர்க்கும் எனினும் தளிர் ஒடிக்கும். மூட ஜென்மம். எனினும் குருவிகளை முத்தமிடும் அதிர்ஷ்டம் கொண்டது. இருபதாம் நூற்றாண்டு எழுத்தில் மனிதன் எதிலாவது சிக்குண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறான்: சமூக, அரசியல், தத்துவார்த்த தளங்களில் இந்த வெளிவருதலுக்கான தவிப்பு சு.ராவின் கவிதைகளிலும் காணலாம். அவரது ”ஜன்னல்” சிறுகதை நினைவிருக்கலாம். இந்த சிறைபட்ட மனிதன் உள்ளே இருக்க காற்று வெளியே உலாவுகிறது. இக்கவிதை ஷெல்லியின் Ode to Westwind-ஐ நினைவுபடுத்துகிறது. அந்த ரொமாண்டிக் கவிதையில் காற்று எனும் மகாசக்தி அழிவுக்கும் பிறப்புக்கும் ஆதாரமாக காட்டப்படும். சு.ரா இங்கு மேலும் யதார்த்தமாக பேசுகிறார். சு.ராவின் நவீன காற்றால் ஆங்காரம் கொள்ள, ஜன்னலை முட்டி திற என்று கத்த மட்டுமே முடியும். எங்கும் தூசு பரத்தி தன் ’அடையாளம்’ நிறுவுகிறது. “உக்கிரப்பெருவழுதி” என்பது பெயரில் மட்டுமே. “சருகு” உதிர்க்கும...

ஹர்பஜன் தேங்கி விட்டாரா?

சச்சின் தேங்கி விட்டதாக சொல்லி திட்டு வாங்கிய முன்னாள் இந்திய மட்டையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது மீண்டும் அதே விமர்சனத்தை ஹர்பஜன் மீது வைத்துள்ளார். சொல்லப்போனால் ஹர்பஜன் தன் ஆட்டத்திறனை மீட்டு விக்கெட்டுகள் எடுத்து வரும் கட்டத்தில் சஞ்சய் இதைச் சொல்லியிருக்கிறார். சஞ்சய் சொல்ல வருவது ஹர்பஜன் ஒரு சராசரி வீச்சாளராக உள்ளார், இன்னும் உயரங்களை எட்டவில்லை என்றே. சரி, ஹர்பஜனை எந்த உச்சவரம்பு கொண்டு மதிப்பிடுவது? 2001 ஆஸ்திரேலியா டெஸ்டு தொடரில் 32 விக்கெட்டுகள் சாய்த்த பின் ஹர்பஜனால் தனிப்பட்ட முறையில் ஆட்டங்களை வென்று கொடுக்க முடிந்ததில்லை. ஒரு கட்டம் வரை கும்பிளேவுக்கும் பின்னர் சஹீர், இஷாந்த போன்ற வேக வீச்சாளர்களுக்கும் துணை பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஆனால் முதல் நிலை வீச்சாளராக இயங்க வேண்டிய ஆட்டங்களில் அவரால் சுதாரிக்க முடியவில்லை. இந்தியாவின் தலையான சுழலர் சாய தோள் நாடி தவிக்கிறார். இதுவே சஞ்சயை காட்டமாக விமர்சிக்க வைத்துள்ளது. ஹர்பஜனை உலகத்தரம் என்பது தமிழில் உலக இலக்கியம் படைக்கிறோம் என்று பொத்தாம் பொதுவாக சொல்வது போன்றே. மேலும் தீர்க்கமாய் மதிப்பிட்டு தரம் நிறுவ உரைகற்கள் வேண்ட...

வசையின் உத்தேசம் என்ன: அசோகமித்திரனின் ”முக்தி”

அவதூறு மற்றும் பழிச்சொற்களுக்கு குற்றம் சுமத்தப்பட்டவர் மட்டுமே காரணம் அல்ல. மழைப்பருவத்தில் சென்னை மாநகரின் வெள்ளப்பெருக்கிற்கு மழை மட்டுமே காரணம் இல்லை அல்லவா. அவகாசம் கிடைக்கிற போது யார் பக்கமாவது சாக்கடையை திருப்பி விட அல்லது சில துளிகளை பன்னீர் தெளிக்க நமக்கு விருப்பமாக உள்ளது. பெரும்பாலும் யாரும் விதிவிலக்கு அல்ல என்று நினைக்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ரயில் பயணத்தில் ஒரு தீவிர இலக்கிய வாசகரை சந்தித்தேன். விசித்திரம் என்னவென்றால் அவர் ஆறாம் வகுப்புக்கு மேல் படித்திருக்க இல்லை. இலக்கிய அமைப்புகள், கூட்டங்கள், ஆசான்களின் வெளிச்சமும் அவர் மீது விழுந்திருக்க இல்லை. அவர் ஒரு மீனவர். படகில் கடலுக்கு போகும் போது பொழுது போக்காக தீவிர இலக்கியம் அறிமுகம் ஆகியிருக்கிறது. குறிப்பாய், தனக்குள் உள்ள கல்வி வெற்றிடத்தை இலக்கிய வாசிப்பால் நிரப்பும் ஆவேசம் அவரிடம் இருந்தது. அவருடைய மச்சினிச்சி கூடவே வந்திருந்தார். அவர் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்திருந்தார். குடும்ப எதிர்ப்பை மீறி கன்னியாஸ்திரி ஆகி, தற்போது காசியில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக நாளும் 12 மணி நேரம் மகத்தான சேவை புரிந்து வருகிறார...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 10

ஒருவேளை அந்த மொத்த ரயிலிலும் நாங்கள் மட்டுமே பயணிகளாய் இருந்திருப்போம்; அதுவரையிலும் எதுவுமே எனக்கு நிஜமான சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை. "ஆகஸ்டில் வெளிச்சத்தின்" மந்தத்துக்குள், இடைவிடாது புகைத்தபடி, ஆனால் அடிக்கடி வேகமாக பார்வையை வீசி நாங்கள் கடந்து செல்லும் இடங்களை அடையாளம் கண்டவாறு, ஆழ்ந்தேன்.

ஜெயமோகன்: வழுக்கி செல்லும் மீன்

எழுத்தாளர் யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் ஜெயமோகன் இந்துமத்தை பின்நவீனத்துவ இயக்கம் என்று கூறும் கட்டுரையை கண்டித்து பகடி செய்திருக்கிறார். இப்படி ஜெ.மோவின் வலதுசாரி அரசியலை கண்டிப்பதில் ஒரு கலாச்சார காரணம் உள்ளது. அதைக் குறித்ததே இச்சிறு பதிவு. ஜெ.மோ போன்றவர்களின் மதச்சாய்வை வாசகர் கண்டிப்பதற்கு ஒரு அரசியல் கலாச்சார காரணம் உள்ளது. ஒரு எழுத்தாளன் தீவிர வலதுசாரியாகவும் இருக்கலாம். தவறில்லை. உலக இலக்கியத்தில் இவர்களை விமர்சகர்கள் பொங்கி வடிப்பதில்லை. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் கலகத்தை வெறுத்தவர்; முடியாட்சியை, அதன் எண்ணற்ற குறைகளுடன் சேர்த்தே, ஆதரித்து எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து இடதுசாரிகள் இவருக்கு எதிராக கோஷம் இட்டதில்லை. ஆனால் இங்கு திராவிட பாரம்பரியம் அதன் எழுத்தாளர்களிடத்து இந்து மதத்தை கண்டிக்கும் போக்கை வளர்த்து விட்டது. நாகர்கோவில் பகுதியிலுள்ள ஒரு மிகப்பிரபலமான இடதுசாரி நாவலாசிரியர் குமாரகோவிலுக்கு ரகசியமாய் சென்று வருபவர். மேலும் பல தமிழ் எழுத்தாளர்கள் இப்படியான கொரில்லா பக்தியாளர்களே. அவர்கள் தங்கள் ’பக்தியை’ வெளிப்படையாக எழுத முடியாததற்கு மேற்சொன்ன திராவிட கலாச்சாரம் காரணம்....

வாசகர்கள்: இணையமும் அச்சுத்தளமும்

இணையத்தில் நான் செக்ஸ் குறித்து அதிர்ச்சியூட்டும்படி எழுதியிருக்கிறேன். அழகியல் மற்றும் ஒழுக்கவியலை சற்று ஒதுக்கி விட்டு அறிவியல் ரீதியாக செக்ஸ் குறித்து பேச வேண்டும் என்ற விருப்பமே காரணம். உயிரோசையில் வெளியான எனது “வால்” கதையிலும் பாலுறுப்புகளுக்கு கதாபாத்திரங்களின் அந்தஸ்து உண்டு. இணைய வாசகர்கள் இதுவரை என்னை கண்டித்ததில்லை. ஆனால் சம்பிரதாய பத்திரிகைகளில் ஒரு ஆச்சாரமான சூழல் உள்ளது. 2009 டிசம்பர் மாத உயிர்மை இதழில் வெளிவந்த எனது சிறுகதை “நித்திய கன்னிக்கு” கடுமையான கண்டனங்கள் வந்துள்ளன. ஜனவரி இதழில் பிரசுரமான கடிதங்களில் நான்கு பேர் இதை போர்னோகிராபி என்றுள்ளனர். போர்னோகிராபி மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. என் கதைக்கு அத்தகுதி இல்லை என்று பவ்யமாக தெரிவித்துக் கொள்கிறேன். போர்னோ ஈடுபாடு உள்ளவர்கள் சொல்லுங்கள் -- என் கதையில் அந்தரங்க வெளியற்ற காதலர்கள் கிடைத்த சில வினாடிகளில் முத்தமிடுகிறார்கள், அவசரமாக அந்தரங்க உறுப்புகளை வருடுகிறார்கள். இதுவா போர்னோ? இங்கு ரெண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும். இந்த விமர்சனங்களை வைத்தவர்களுக்கு போர்னோ தெரியாது. போர்னோவை அரசாங்கம் தடைசெய்து மறைவாக விற்கப...

ஜெயமோகனின் கிளி எடுத்த சீட்டு: ஊனம்

“நான் ஒரு தொழில்முறை கவிஞனே ஒழிய உணர்ச்சிகளின் கவிஞன் அல்ல.” - மனுஷ்யபுத்திரன் (”என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்”) ஜெயமோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையான ”கடவுள்ளவனின் பக்திக் கவிதைகள்” ஒரு தட்டையான, முழுக்க தன்வயமான சித்திரத்தை முன்வைக்கின்றன. ஒரு வாசகனுக்கு அவர் கவிதை மீதான இரும்புத்திரையாக இவ்விமர்சனம் அமைகிறது. எப்படி என்று விளக்குகிறது இக்கட்டுரை. ஜெயமோகனின் புரட்டுகள் இவை: • மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி. • இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை. • அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது. • மனுஷ்யபுத்திரன் ஒரு எழுச்சிக்கவிஞர். அவரது கவிதைகளில் ”உணர்ச்சி கொப்புளிக்கிறது.” பக்தி இலக்கியத்தின் நெகிழ்தல் மனுஷ்யபுத்திரனின் பொதுப்பண்பு என்று ஜெயமோகன் கூறுகிறார். நெகிழ்தலை ஜெ.மோ பிரபஞ்சத்தை புன்னகையுடன் வரித்துக் கொள்ளும் தன்மையாக புரிந்து கொள்கிறார். அதாவது ம.பு வின் படைப்பாக்க தரிசனத்தில் எதிர்மறை மற்றும் நேர்மறைப் பண்புகள் சமதளத்தில் சந்திப்பது. இதை அவர் ச...

மனுஷ்யபுத்திரன், அறிவாளி அசடுகள் மற்றும் புத்தக தேர்வு

அறிவாளிகள் ஆபத்தானவர்கள்; அசடுகள் தங்கள் தன்னம்பிக்கை மிகுந்த அறியாமையால் நம்மை தொடர்ந்து வியக்க வைப்பவர்கள்.இருவரும் எதிர்பாராத தருணத்தில் ணங்கென்று நம் பொட்டில் அடிப்பார்கள். மூன்றாவது ஒரு வகை உண்டு. உள்ளதிலே சிரமம் இவர்களை சமாளிப்பது தான்: அறிவாளியாய் தோன்றும் அசடு. மூன்றாம் வகையினரை படு ஜோராக நேரிடுபவர் மனுஷ்யபுத்திரன் அறிவாளி அசடுகள் பொதுவாக ஒரு நிலைகுலையாத தன்னம்பிக்கையுடன் தாக்குவார்கள். இவர் ஹிட்டிலிருந்து கிளம்பி வரும் அதிமனிதன் போல ஒரு புது அவதாரம் எடுத்து மேலும் மூர்க்கமாக எதிர்வினை ஆற்றுகிறார். இதை ஒரு கலையாகவே மாற்றி வைத்திருக்கிறார். தற்போது நடந்து வரும் புத்தக சந்தையில் உயிர்மை கடையில் ஒரு நபர் ம.புவின் இரண்டு கவிதை புத்தகங்களை எடுத்து வந்து அவரிடமே கேட்கிறார்: “இதுல எந்த புத்தகம் நல்லா இருக்கும். சொல்லுங்க சார்”. ம.பு: “ரெண்டுமே படுமட்டமான புக்ஸ் சார். வாங்காதீங்க. ரொம்ப ஏமாற்றமாயிடும்” அறிவாளி-அசடு: “இல்லை சார், நான் அந்த அர்த்தத்துல கேக்கல. எத வாங்குறதுண்ணு ஒரு குழப்பத்துல கேட்டேன் ” ம.பு: “ நானும் அதனால தான் சொல்றேன். படுகேவலமான புத்தகம் ரெண்டுமே. தயவு செஞ்சு வாங்கா...