Skip to main content

வாசகர்கள்: இணையமும் அச்சுத்தளமும்

இணையத்தில் நான் செக்ஸ் குறித்து அதிர்ச்சியூட்டும்படி எழுதியிருக்கிறேன். அழகியல் மற்றும் ஒழுக்கவியலை சற்று ஒதுக்கி விட்டு அறிவியல் ரீதியாக செக்ஸ் குறித்து பேச வேண்டும் என்ற விருப்பமே காரணம். உயிரோசையில் வெளியான எனது “வால்” கதையிலும் பாலுறுப்புகளுக்கு கதாபாத்திரங்களின் அந்தஸ்து உண்டு. இணைய வாசகர்கள் இதுவரை என்னை கண்டித்ததில்லை. ஆனால் சம்பிரதாய பத்திரிகைகளில் ஒரு ஆச்சாரமான சூழல் உள்ளது. 2009 டிசம்பர் மாத உயிர்மை இதழில் வெளிவந்த எனது சிறுகதை “நித்திய கன்னிக்கு” கடுமையான கண்டனங்கள் வந்துள்ளன. ஜனவரி இதழில் பிரசுரமான கடிதங்களில் நான்கு பேர் இதை போர்னோகிராபி என்றுள்ளனர். போர்னோகிராபி மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. என் கதைக்கு அத்தகுதி இல்லை என்று பவ்யமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்னோ ஈடுபாடு உள்ளவர்கள் சொல்லுங்கள் -- என் கதையில் அந்தரங்க வெளியற்ற காதலர்கள் கிடைத்த சில வினாடிகளில் முத்தமிடுகிறார்கள், அவசரமாக அந்தரங்க உறுப்புகளை வருடுகிறார்கள். இதுவா போர்னோ?

இங்கு ரெண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும்.

இந்த விமர்சனங்களை வைத்தவர்களுக்கு போர்னோ தெரியாது. போர்னோவை அரசாங்கம் தடைசெய்து மறைவாக விற்கப்படும் வஸ்து என்ற அளவிலே புரிந்து வைத்திருக்கிறார்கள். என் கதையில் செக்ஸ் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதில் உள்ள மிகை விவரணைகளுக்கு (காதலியின் குறி ஈரம் அவளது தொடை எல்லாம் நனைந்து அவள் காலில் இருந்து செருப்பு வழுவிப் போகிறது) ஒரு காரணம் உள்ளது. அவனது முதல் அனுபவம் அது என்பதாலே முதல் புணர்ச்சி அனுபவம் மிகையாகவே பிரக்ஞையில் படிகிறது. முதல் முத்தம் இதனாலே பொதுவாக சிலாகிக்கப்படுகிறது.




அடுத்து நான் நேரடியாக காமத்தை சொல்லியதனால் உயிர்மை வாசகர்களில் சிலர் மஞ்சள் எழுத்து என்று விட்டார்கள். உருவக அல்லது பூடக மொழி பாலியலை படிக்கும் முதிராத வாசகனுக்கு ஒரு புத்திஜீவி சமாதானத்தை கொடுக்கிறது. அல்லது காமத்தை சித்தரித்த பின் அதன் ஒழுக்கவியல் கோணத்தை சுட்ட வேண்டும். குறைந்தது ஒரு பின்நவீனத்துவ தத்துவார்த்த நிலைப்பாடாவது வேண்டும். பாசாங்கில்லாத நேரடி காமம் பயிற்சியற்ற வாசகனுக்கு ஒரு திகைப்பை ஏற்படுத்துகிறது. புதுவையில் இருந்து கா.ஞானம் என்பவர் அவரது பதின்பருவ மகனை உயிர்மை இதழ் வாசிக்க அனுபமதித்ததாகவும், என் கதை படித்த பின் அம்முடிவு குறித்து சங்கடப்பட்டதாக குறிப்பிட்டு, “இது உயிர்மைக்கு அழகல்ல” என்று தி.மு.க தலைவர்கள் பாணியில் எச்சரித்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனின் நுட்பமான தலையங்கங்களின் தொகுப்பின் தலைப்பு நினைவு வந்தது: “என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?”.

இதே டிசம்பர் உயிர்மையில் எஸ்.ரா நாகராஜனின் ”குறத்தி முடுக்கு” குறுநாவல் குறித்தான கட்டுரையில் “வேசை“ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார் அவரது மற்றொரு சுவாரஸ்யமான பதம் “சுகப்பெண்கள்”. மார்பில் முத்தமிடுவது, ஒரு வேசை ரவிக்கை அவிழ்த்து தன் கிராக்கியிடம் மாரை வெளிப்படுத்துவது குறித்தெல்லாம் வர்ணிக்கிறார். மேற்சொன்ன வாசகரின் மகன் ’குறத்திமுடுக்கின் கனவுகள்’ படித்து விட்டு “அப்பா, நீங்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாறாக இப்படி வேசிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளாரே இது தவறில்லையா; அவர்கள் ஏன் ஜம்பர் அவிழ்க்கிறார்கள். ச்சீ அசிங்கம்” என்றெல்லாம் கேட்கவில்லையா? இராது. இங்கு நாகராஜனுக்கு இன்று கிடைத்துள்ள கிளாசிக் முத்திரையும், அவருக்கு எஸ்.ரா நல்கும் இலக்கிய ரீதியான அதிகார பூர்வ ஏற்பும் கறுப்புப் பூனை பாதுகாப்பு அளிக்கிறது. குழந்தைகள் படிப்பது பற்றி கருத்திற் கொள்வதானால் எஸ்.ரா இந்த முக்கியமான கட்டுரையை உயிர்மையில் வெளியிட்டிருக்கவும் முடியாது.

உயிர்மையில் வெளிவந்த என் முதல் கட்டுரையான மிருகம்-மனிதன்-எந்திரனில் எந்திரன்கள் பாலியல் தொழிலாளிகளானால் நேரும் அறவியல் குழப்பம் பற்றி பேசியிருந்தேன். அக்கட்டுரையின் அறிவார்ந்த தொனி அல்லது அறிவியல் ஒளிவட்டம் என்னை போர்னோ கண்டனங்களில் இருந்து அப்போது காப்பாற்றியது. வன்முறைக்கு வெள்ளை வேட்டி என்றால் செக்ஸுக்கு ஜுப்பா, ஜோல்னா பை.

இதே கதைக்கு இணைய வாசகர்கள் பலத்த வரவேற்பு தந்தார்கள். மதி மற்றும் கைலாஷ் ஆகிய வாசகர்கள் இப்படி கூறியிருந்தார்கள்:

உயிர்மைக்காக இல்லாமல் பிளாகுக்காகவே இதுபோன்ற படைப்புகள் எழுதலாம் அபிலாஷ் , அருமை

Excellent!.such a bold writing.
I am regular reader of your blog.
write more as you think and feel .


இணையத்தில் வாசகன் மற்றும் எழுத்தாளனுக்கு அறிவார்ந்த மற்றும் படைப்பியல் சுதந்திரம் மேம்பட்டதாக உள்ளது. ஒழுக்க போலீஸ் இல்லை. முக்கியமாக, இதை எழுதாதே என்று யாரும் வற்புறுத்தியது இல்லை. மேலும், தான் தனி இதழ் ஒன்றுக்கு செலுத்தும் 20 ரூபாய் விலை ஒரு வாடிக்கையாளர் மனோபாவத்தை அந்த வாசகருக்கு ஏற்படுத்தலாம். “ ’நித்தியகன்னி’ கதை கொஞ்சம் ஆபாசமாகவே பட்டது. இதை எப்படி உயிர்மை ஏற்றுக் கொண்டது என்றே தெரியவில்லை” என்கிறார் கீழ்கலயத்தில் இருந்து இரா.சண்முகவேல். ஒரு தீவிர வாசகன் என்றும் ஆசிரியக்குழுவின் ஒழுக்க தார்மீகத்தை கேள்வி கேட்க மாட்டான். மேலும் சொல்வதானால் ஆனந்த விகடன், குமுதம் மற்றும் குங்குமத்துக்கு “இன்னும் அதிகமாக நமீதா படங்கள், அசின் பற்றின கிசிகிசுக்கள் போடுங்கள்” என்று விடாமல் தபால் அட்டைகள் அனுப்பும் வாடிக்கையாள மனோபாவம் இது.

மனுஷ்யபுத்திரன் இத்தகைய எதிர்ப்புகளை மிக வேடிக்கையாகவே பார்க்கிறார். ஒரு தேர்ந்த வாசகரான அவர் வெறும் கிளுகிளுப்பு கதையை வெளியிடுபவர் அல்ல. இது கூட புரியாத சில வணிகஎழுத்தின் முலைகுடி மறக்காத வாசகர்களின் ஆசிரியக்குழுவையே கேள்வி கேட்கும் அகங்காரம் என்னை திகைப்படைய வைக்கிறது. முந்தைய பதிவில் சொல்லியிருந்தது போல் இவர்கள் அ-அ வகையினர். இவர்களை கையாளுவதில் ம.பு ஒரு நிபுணர். உயிர்மையில் இதைவிட வெளிப்படையான ஒரு கதை எழுத வேண்டும் என்பதே எனது அடுத்த ஆசை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...