நம்மூரில் தரப்படும் அடையாள அட்டைகளில் பெரும் வேடிக்கை பெயர் பதியப்படும் விதம். என் வாக்காளர் அட்டையில் முதற் பெயர், குடும்பப் பெயர் ஒட்டியிருக்கிறது, ஆதாரில் என் இனிஷியல் முன்னிலையில் இருந்தால் இன்னொரு அட்டையில் கடைசியில் இருக்கிறது. இதில் எந்த முறையையும் நம் அமைப்புகள் பின்பற்றுவதில்லை. கொடுப்பதை தோன்றினபடி பதிவு பண்ணி வைக்கிறார்கள். இவை ஒன்றுபோல இருக்காவிடில் பின்னர் நிராகரித்துவிடுகிறார்கள். MK Stalin என்பது Stalin MK என்றிருந்தால் என்ன தப்பு? அதனால் அவர் இன்னொருவர் ஆகிவிடுவாரா? ஆனால் நம்முர் ஆவணச் சரிபார்ப்பு மண்டைகளுக்கு இருவரும் ஒருவர் அல்லர். எல்லா அட்டைகளிலும் பெயரை ஒரே போல வரவழைத்தாலும் வேறு புதுப் பிரச்சினைகள் புற்றீசல் போல புறப்பட்டு வரும். நான் என் வருங்கால வைப்புநிதிக்காக ஆவணத்தை அளிக்கையில் ஆதாரமாக ஆதாரைக் கொடுத்தேன். அதில் மேற்சொன்ன காரணத்துக்காக என் பெயரை மாற்ற வேண்டி வந்தது - அதாவது இனிஷியலை முன்பிருந்து பின்பாக மாற்றினேன். ஆனால் இணையதளத்தைக் கட்டமைத்தவர்கள் மென்பொருளே தாமாகத் தேடி பெயர் மாற்றங்கள் இருப்பின் தடைசெய்யும்படி அமைத்திருக்கிறார்கள். எனக்கு இது ஆரம்பத்...