உலகின் வேறெந்த வரலாற்றுக் கட்டத்திலும் இந்தளவுக்கு அதிகாரத்துவ நடைமுறைகள், அவை சார்ந்த ஆவணமாக்கல் நிகழ்ந்திருக்காது என நினைக்கிறேன் - அதிகாரத்துவ அமைப்புகள் தொடர்ந்து தாம் அளிக்கிற அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையே சந்தேகம் கொண்டு மறுக்கிற அவலமும் நடக்கிறது, இது ஒரு பின்நவீனத்துவ தன்மை கொண்டது.
நான் அன்று ஒரு பட்டியலைப் பார்த்தேன். அதில் எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பிக்கவும் புதுப்பிக்கவும் அரசு எவ்வகை ஆதாரங்களை ஏற்கும் எனப் போட்டிருந்தார்கள். அடையாள அட்டைக்கு ஏற்கப்படும் ஒன்று முகவரி ஆதாரத்துக்கு ஏற்கப்படாது, அதில் உள்ள ஒன்று இதில் இருக்காது. முக்கியமாக ஆதார் அட்டையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் பரவலாக ஏற்பதில்லை. இதைவிடக் கொடுமை வங்கி மேலாளர் கொடுக்கிற ஆவணத்தைக் கூட ஏற்கிறார்கள், ஆனால் அரசு தரும் அட்டையை மறுக்கிறார்கள். சில இடங்களில் எம்.பி., எம்.எல்லே, வார்ட் கவுன்சிலரின் கடிதத்தை ஏற்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலரோ இப்போதெல்லாம் அதிகாரிகள் தம் கடிதத்தையும் மறுப்பதாகக் கூறுகிறார்கள். இந்நிலைக்கு ஒரு காரணம் இந்த அட்டைகளை, ஆவணங்களை வழங்கும்போது அரசியல் தேவைக்காக செய்யப்படும் ஊழல், பின்பற்றப்படும் முறையட்ட நடைமுறைகள். அதாவது ஆளுங்கட்சி ஒரு நோக்கத்துக்காக இதைக் கொண்டு வந்து பின்னர் அரசியலுக்காக, வாக்குகளுக்கு இதை முறையற்று வழங்கி இதன் செல்லுபடியாகும் தன்மையையே ஒழிக்கிறார்கள். மக்கள் தாம் இருக்கிறோமா இல்லையா எனும் பதற்றத்தில் இருப்பதை ஒருவிதத்தில் அதிகாரம் விரும்புகிறது. அப்போதே அவர்களைத் தம் விருப்பப்படி வளைக்க முடியும். பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அழிக்கவும் சேர்க்கவும் முடியும். யாரும் அரசை எதிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அசலான குடிமக்களின் ஆவணங்கள் போலி ஆவணங்களால் மதிப்பிழக்கும்போது அந்த மக்கள் உண்மையில் தமக்கு அதிகாரம் உண்டா, இடமுண்டா எனக் குழம்புகிறார்கள். இருக்கும்போதே வெளியேற்றப்படுகிறார்கள். அதாவது வாழும் காலத்திலேயே அவர்கள் 'மிதக்கும் சமூகமாகிறார்கள்'.
இது ஏன் நடக்கிறது என்பதற்கு என் பார்வை இதுதான்: நாம் பரஸ்பரம் நம்பிக்கை இழக்கிறோம், ஒரு சமூகமாக உதிரிகளாக உடைகிறோம். அப்போது ஒவ்வொருவரும் மோசடிக்காரரே எனும் எண்ணம் வலுக்கிறது. இதுவே அரசின் தளத்தில், அதிகாரத்துவ மட்டத்தில், ஆவணங்களை வழங்கியும் மறுத்தும் நம்மைக் கட்டுப்படுத்துகிற அரசியலாகிறது. முன்பு சேவை வழங்குகிற, வரி வசூலிக்கிற அமைப்பாக இருந்த அரசு இன்று அதிகாரத்துவ நடைமுறை அரசாகிறது, ஆவணங்களை வழங்குகிற அரசாகிறது. ஆவணங்களை நிராகரிக்கிற அரசாகிறது. ஒப்பந்தங்களைச் சாத்தியமாக்குகிற, உருவாக்குகிற, மத்தியஸ்தம் பண்ணுகிற அரசாகிறது. அரசு மெல்லமெல்ல தம் குடிமக்கள் மீதே நம்பிக்கை இழக்கும்போது யார் வாக்களிக்கலாம், கூடாது என்பதில் குழப்பத்தைக் கொண்டு வருகிறது. அது யாருக்கெல்லாம் நலத்திட்டங்கள் போய்ச் சேர வேண்டும், யாருக்கு கூடாது எனத் தீர்மானிக்கிறது. தாம் எல்லாருக்குமான அரசு அல்ல என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீ இத்தேசத்தின் குடிமகனா என்று உரத்து பலவிதங்களில் கேட்டபடியே இருக்கிறது. இன்று அயல்நாடுகளிலும் குடியேறிகளுக்குள்ள சிக்கல் இதுதான்.
இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது. பரஸ்பரம் வெறுக்காமலும் சந்தேகிக்காமலும் சேர்ந்திருப்பது, துணையிருப்பது, அடையாளங்களுக்கு அப்பால் இணைவது, காலத்தையும் வெளியையும் அரசியலுக்கு அப்பால் நம்பி உறவாடுவது. மக்கள் இப்படித்தான் ஆவணங்களின் ஐயப்பாடுகளுக்கு வெளியே உயிர்த்திருக்கிறார்கள்.