Skip to main content

ஆவண அரசியல் 2

 கர்நாடக அரசு வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்காக ஒரு சட்ட வரைவைக் கொண்டு வரப்போகிறது. அதன்படி இனி பணியாளர்களை சுத்தம் பண்ணவும் சமைக்கவும் நியமிக்கிறவர்கள் கட்டாயமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் நிபந்தனைகளை, எதிர்பார்ப்புகளைப் பதிவு பண்ண வேண்டும். வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். பயிற்சியளிக்க வேண்டும். அதன்பிறகுதான் வருகிறது பிரச்சினையே - வருங்கால வைப்புநிதியைப் போல ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு பணி அமர்த்துநர் ஒரு தொகையை (5%) வழங்க வேண்டும். அதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் வழங்குவதை ஆவணப்படுத்தி அதை ஒரு படிவத்தில் நிரப்பி வருடத்திற்கு ஒருமுறை மொத்தமாகத் தாக்கல் பண்ண வேண்டும். அரசு இந்த அமர்த்துநரின் வருடாந்திர வரவு செலவுக்குள் இந்த பணம் செலுத்துதல் வருகிறதா எனச் சரிபார்க்கும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டும்.

நோக்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சிறந்த வரைவு. ஆனால் நடைமுறையில் இது பலருக்கும் சிக்கலாகும். வார விடுமுறையை பலரும் ஏற்கப் போவதில்லை. வார இறுதி நாட்களில்தான் வேலைகள் அதிகம் என்பதாலும் அப்போதுதான் அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதாலும். அடுத்து, வைப்புநிதியையும் சேர்த்தே சம்பளம் கொடுப்பார்களா அல்லது அதற்காக அதிகரிப்பார்களா என்பது. அடுத்து, இவ்வளவையும் பேசி முடித்தபின்னரும் ஒரு சிறிய வேலைக்காக ஆவணமாக்கல் பணியில் ஈடுபட மக்கள் மெனெக்கெடுவார்களா என்பது. ஒரு அலுவலகத்தில் இதற்கென ஊழியர்கள் இருப்பார்கள் (மனிதவளத்துறை). மாதம் ரெண்டாயிரத்துக்கு பாத்திரம் தேய்க்க ஆளை அமர்த்துவோர் அதற்காக வருடத்திற்கு நான்கு முறைகள் அரசுக்குப் பணம் செலுத்தி அதை சரியாக ஆவணப்படுத்தி முறையாக தாக்கல் செய்வார்களா? மறந்துபோய் அபராதம் கட்டுவார்களா? கொஞ்சம் மெனெக்கெட்டால் நாமே பாத்திரம் தேய்த்து பெருக்கிவிட்டுப் போகலாமே என யோசிக்க மாட்டார்களா?
அரசு அதிகாரிகளின் ஒரு பிரச்சினை அவர்கள் உலகமே ஆவணங்களில்தான் வாழ்கிறது என நம்புவது. அவர்களுக்கு ஆவணத் தாக்கலில்தான் வருமானம் வருகிறது. ஆனால் உலகில் எவ்வளவோ பிரச்சினைகளும் வேலைகளும் குவிந்திருக்கையில் ஆவணங்களுக்காக அலைவதற்கு மக்களால் முடியாது. அது ஒருவித தண்டனையாகிவிடும். வாடகைப் பணம் வரும்போது அதற்காக ஒப்பந்தம் தாக்கல் செய்ய தயங்காத நாம் இதைப் போன்ற தவிர்க்கக் கூடிய வேலைக்காக செய்வோமா என்றால் சந்தேகம்தான்.
குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் ஒருவர் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி வழக்காடுமன்றம் போவாரா? சந்தேகம்தான். அடுத்து, அவர் தன் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து வைப்புநிதியாக வைத்து அதில் சிறிது சேர்த்து திரும்ப அளிப்பதை விரும்புவாரா அல்லது அதை அவர் செலவுக்கு வைத்துக் கொள்ள நினைப்பாரா? மிகச்சிறிய தொகைகளுக்கு இது எப்படி உதவும்? இதற்குப் பதிலாக அரசு ஒரு தொகையை அவர்களுக்காக வழங்கலாமே.
முகவர்கள் வழியாகப் பணி அமர்த்துவோருக்குப் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். ஏற்கனவே உள்ள முகமைக் கட்டணத்துடன், முகமைச் சேவையுடன் இப்பணிகளையும் சேர்த்துவிடுவார்கள். சுயமாக பணியமர்த்துவோருக்கே இது தொல்லையாகும். ஒருவேளை எதிர்காலத்தில் இரண்டு விசயங்கள் கர்நாடகத்தில் நடக்கலாம்: ஆவணமாக்கலுக்குப் பயந்து அமர்த்துநர்கள் வேலையாட்களைத் தவிர்ப்பார்கள்; அதைக் கருதி ஆவணமின்றி பணியில் இருப்பவர்களே அதிகமாக இருப்பார்கள். அதாவது நடைமுறைப்படுத்துவதன் சிரமம் காரணமாகவே திட்டம் தோல்வியடையும்.
அரசு வீட்டுப் பணியாளர்களுக்கு ஒரு தனித்துவ அடையாள எண்ணையும் அளிக்கிறது. ஆனால் அது பெயருக்குத்தான். இம்மாதிரி எண்கள், அட்டைகளுக்கு பயன்மதிப்பே அரசு அதை வழங்கும்போதல்ல, அரசு நலத்திட்டங்களுக்கு அதைப் பயன்படுத்தும்போதுதான் வரும். ரேஷன் அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ரேஷன் பொருட்களை வழங்கும் பொறுப்பை அரசு தனியாருக்கும், என்.ஜி.ஓக்களுக்கும் கொடுத்துவிட்டு அட்டை மட்டும் தம் பொறுப்பு என்று சொன்னால் அந்த அட்டை மதிப்பிழக்கும். ஆதார், வாக்களர் அட்டைக்குச் செய்ததைப் போலத்தான் அரசு ஒவ்வொரு ஆவணத்துக்கும் செய்து வருகிறது - ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு பின்வாங்குகிறது. இது தன்னுடையதல்ல, இதனால் பயன்மதிப்பில்லை என்கிறது.
அரசு இதற்குப் பதிலாக இப்பணியாளர்களை அரசு நிறுவன முகமையின் கீழ் ஒன்றிணைக்கலாம். பணியமர்த்துநர் தம்மிடம் விண்ணப்பித்து பணியாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வரலாம். நடைமுறையைச் செயலி வழியாக எளிமைப்படுத்தலாம். வேலையை இழக்கும் பணியாளர்களுக்குத் தற்காலிகமாக பணியளிக்கலாம். இதன்வழியாக பணி உத்தராவதம் கொடுக்கலாம். கடுமையான ஆவணத்தாக்கல், அபராத மிரட்டல் மூலமாக அரசு இதைச் சாதிக்க முடியாது. பெரும் நிறுவனங்களில் கூட பணியாளர்களில் மிகமிகச் சிலரே நிறுவனங்களுக்கு எதிராக வழக்காடுமன்றம் போகிறார்கள். அவர்களாலே முடியாதபோது நான்கு வீடுகளில் பணியாற்றி எட்டாயிரம் சம்பாதிக்கும் பெண்களா செய்யப் போகிறார்கள்?
இன்னொன்று - பணியாளர்களுக்கும் அமர்த்துநருக்குமான உறவில் ஒரு உணர்வுரீதியான பந்தம் உள்ளது. பணியாளர்கள் வீட்டில் வந்து குடும்பத்தின் பகுதியாகிப் பணி செய்கிறார்கள், பழகுகிறார்கள் என்பதால் அவர்களைத் தம்மவர்களாக்கிக் கொள்ள அமர்த்துநர்கள் முயல்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்குப் படிக்க பணம் கொடுக்கிறார்கள், சமைத்துக் கொடுக்கிறார்கள், ஆடைகளை வழங்குகிறார்கள், சிலர் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாங்கிக்கொடுப்பது, கல்யாணம் பண்ணி வைக்கும் அளவுக்குக் கூடப் போகிறார்கள் (ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் இந்த உணர்ச்சிகரமான பந்தத்தைக் காட்டினார்கள்). இதைச் சுரண்டல் என்று நாம் சுருக்கிவிட முடியாது (தனித்தட்டில் சோறு கொடுப்பவர்கள், சொந்த சாதிக்குள் வேலைக்கு வைப்பவர்கள் போன்ற தீயவர்களும் இருக்கிறார்கள்). ஆனாலும் பணியமர்த்துதல் ஒருவித இறையாண்மையைத் தோற்றுவிக்கிறது - பணியாளர்களின் உடலில் அது செயல்படுத்தப்படுகிறது. அது ஒருவித தேசமாகிறது. 'தேசப்பற்று' (முதலாளி பற்று), 'சேவை மனப்பான்மை' (பணியாளர் மீதான பற்று), 'தியாகம்' (இரு தரப்பு தியாகங்கள்) போன்ற கொள்கைகள், செண்டிமெண்டுகள் தோன்றுகின்றன. அரசு ஆவணப்படுத்தல் வழியாக இத்தேசத்தைக் கைப்பற்ற வாக்குகளாக அதை உருமாற்ற விரும்புகிறது. ஆனால் அதற்காகச் செலவு செய்ய, பொறுப்பேற்க மட்டும் தயாரில்லை.
யோசித்துப் பாருங்கள் - ஒரு பெண் தாதியாக வேலை செய்கிறார். அவருக்கும் குழந்தைக்கும் உணர்ச்சிகரமான பந்தம் தோன்ற குழந்தை அவரைத் தாய் என்றே நினைக்கிறது. அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு ஆவணம் தாக்கல் பண்ணாவிடில் இவ்வுறவு செல்லுபடியாகாது என்கிறது. வெள்ளையினத் தம்பதிக்குப் பிறந்த எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் தனது குழந்தைப் பருவத்தை இந்திய தாதியிடமும் பணியாளர்களிடமுமே அதிகமாகக் கழித்தார். இந்தியைக் கற்றுக்கொண்டார். இந்தியாவை அறிந்து கொண்டார். அந்த பந்தத்தையே மோக்லிக்கும் ஓநாய்களுக்குமான பந்தமாக அவர் "ஜங்கிள் புக்" நூலில் சித்தரித்தார். இதைப் பணத்தாலோ ஆவணத்தாலோ வாங்க முடியாது, விளக்கவும் முடியாது.
இப்படி, யாருக்கும் பயனில்லாத அடையாளச் சட்டமாக ஒன்றை உருவாக்கி என்ன பயன்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...