15) என் வாழ்க்கையின் ஆகக்கொடுமையான அனுபவங்களில் ஒன்று எனச் சொல்ல மாட்டேன் என்றாலும் அந்த இருட்டில் வண்டியோட்டியது கிலியான அனுபவம்தான். சுந்தர் சியின் பேய்ப்படங்களைப் போல என் பீதியைக் காண எனக்கே சிரிப்பாகவும் வந்தது. அங்கங்கே கடைகளும் குடியிருப்பும் வருமிடங்களில் விளக்குகள் ஒளிரும். மீண்டும் கடும் இருட்டு. என்னதான் சாலையின் ஒரு பக்கமாய் அமைக்கப்பட்டிருந்த பிரதிபலிக்கும் அம்பு முனைக் குறியீடுகள் வண்டியை வயலுக்குள்ளோ பாறைகளிலோ பாய்ச்சாமல் தப்பிக்க உதவினாலும் சில இடங்களில் எங்கே சாலை வளைகிறது, எங்கிருந்து வாகனங்கள் வருகின்றன என கணிக்க வேண்டியிருந்தது. பெங்களூர் வந்து பிரதான சாலையை அடையும்வரை ஏதோ முதலிரவில் விளக்கணைத்து நடக்கும் வன்முறை போலத்தான் வண்டியோட்டினேன்.
16) அவெஞ்சரில் ஒரு வினோதப் பிரச்சினை - ஷோரூமில் தந்த சாவி அடிக்கடி வளைந்தது. மாற்றுச் சாவியைச் செய்தால் அதுவும் வளைந்தது. ஒருவேளை பிரச்சினை என்னிடம்தான் இருக்க வேண்டும். ஆனாலும் சாவி எப்படி வளையலாம், பஜாஜ் கம்பெனியே நம்மை ஏமாற்றுகிறது, வழக்குத் தொடுக்க வேண்டும், சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என டொனால்ட் டிரம்பைப் போல பல்லவி கொதித்துக் கொண்டிருந்தாள். போல்ட் லூசாக இருந்ததும் அவளைத் தூண்டிவிட்டது. வண்டி ஒழுங்காக ஓடினால் போதும் என்பது, சாவி என் தவறாகவும் இருக்கலாம் என் நிலைப்பாடு. ஷோரூமில் இருந்து வண்டியை எடுக்கும்போது சில நேரங்களில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வருமென்பதும் என் அனுபவம். ஆனாலும் அவள் சொன்னதில் ஒரு விசயத்தை ஒப்புக்கொண்டேன் - சுமோ மல்யுத்த வீரனைப் போல ஒரு பைக்கைக் கொடுத்துவிட்டு அதன் பிரதானமான உறுப்பை மட்டும் இவ்வளவு சின்னதாக, மெல்லியதாக, வளையக் கூடியதாக கொடுத்திருக்கக் கூடாது. அதன் வடிவத்தாலும் கனத்தாலும் வண்டியை அசைப்பதும், திருப்புவதும் கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை இயக்குவதையும், லாக் செய்வதையும் முத்தம் கொடுப்பதைப் போல வலிக்காமல் பண்ண வேண்டியது என பஜாஜ் நிறுவனம் சொல்லக் கூடும். “கன்னிப் பொண்ணா நினைச்சு காரைத் தொடணும்” என்று வாலி சொன்னது காருக்கு மட்டுமல்ல பைக்குக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். முதல் சர்வீஸுக்கு விடும்போது இப்பிரச்சினைகளைக் குறிப்பிட்டேன். சர்வீஸ் பொறுப்பாளர் இதெல்லாம் பிரச்சினையே இல்லையென்பதைப் போல ஒரு அட்டைக் காகிதத்தில் குறித்துக்கொண்டார். முதல் சர்வீஸுக்குப் பின்பு வண்டி இன்னும் சுமூகமாக, வெண்ணெய் போல ஓடும் என்கிறார்கள். மைலேஜும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.
17) சர்வீஸுக்குப் பின் வண்டியின் பிக் அப்பும், வேகமும் நன்றாகவே உள்ளன. ஆனால் பூட்டு மட்டும் அதிமுக தலைவர்களின் தலையை வருடிக் கொடுக்கும் மோடியைப் போல உள்ளது. ஒருநாள் திறக்கிறது, இன்னொரு நாள் அசைய மறுக்கிறது. சர்வீஸ் செண்டரில் கேட்டாலும் புதுசு அப்படித்தான், போகப்போக பழகிரும் என்கிறார்கள். நேற்று ஒரு ஆட்டோக்காரரிடம் இதைப் பற்றிப் பேசினேன்: அவர் தன் வண்டிச் சாவியைக் காட்டி இப்போது வரும் வாகனங்களின் சாவிகள் பலவீனமாக உள்ளதாகவும், அதற்கு கம்பெனிக்காரர்கள் கொண்டு வந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களே காரணம் என்றார். அவெஞ்சரின் சாவிப் பிரச்சினையைப் பற்றி யுடியூபில் காணொளிகளும் உள்ளன. நம் ஆட்கள் என்ன சீர்திருத்தம், மாற்றம் கொண்டு வந்தாலும் அது புதுப் பிரச்சினைகளையும் கைப்பிடித்து அழைத்து வருகிறது.