Skip to main content

Posts

Showing posts from September, 2023

இன்று முதல் 'அபுனைவு எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்' வகுப்பு ஆரம்பம்

அபுனைவு எழுதுவது ஒரு முக்கியமான திறன். நாவலாசிரியர், ஊடகவியலாளர், ஆய்வாளர் ஆவதற்கே அடிப்படை அபுனைவு தான்.  என்னுடைய 'அபுனைவு எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்' இணைய வகுப்புகள் இன்று ஆரம்பமாகின்றன. முதல் இரு வகுப்புகள் மட்டும் (இன்றும் நாளையும்) அனைவருக்கும் இலவசம். விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளலாம். நாட்கள்: சனி மற்றும் ஞாயிறு ஊடகம்: கூகிள் மீட் வகுப்புக்கான நேரம்:மாலை 7--8:30 கலந்து கொள்வதற்கான லிங்க்: https://meet.google.com/qgz-prhf-yge

பார்வையற்றவர்களின் உலகில் அம்மணம்

பொதுமக்களின் உலகில் இலக்கியம், சாஸ்திரிய இசை, தத்துவம், அறிவுத்துறைகளின் நிழல் கூட விழுவதில்லை. விழுந்தால் தானே பார்வை ஏற்பட்டு கருத்து சொல்ல? பார்வையற்றவர்களின் உலகில் நிர்வாணமாக ஒருவர் குறுக்குமறுக்காக நடந்துகொண்டே 'ஐயோ என் நிர்வாணத்தைப் பார்த்திட்டாங்க... என்ன நினைப்பாங்களோ?' என அசூயைப் படுவதைப் போன்றது இங்கு கலைஞனாக இயங்குவது. இதன் ஒரே அனுகூலம் நீங்கள் எவ்வளவு வேண்டுமெனினும் அம்மணமாக இருக்கலாம்!

தீக்குச்சியும் எரிகல்லும்

நான் பன்னிரெண்டு வயதிருக்கும் போதே - எழுத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது என்றாலும் - எழுத்தாளராவது என முடிவெடுத்தேன். என் பதினாறாவது வயதில் நவீன கதைகள் எழுதத் தொடங்கினேன். அப்போதே எனக்கு தீவிர இலக்கிய குழுக்களுடன் பரிச்சயம் இருந்தது. எழுதினால் பதிலுக்கு ஒன்றுமே கிடைக்காது என்று தெரிந்திருந்தது. அதனால் என்றுமே எனக்கு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏமாற்றமும் இருந்ததில்லை. பணப்போதாமை இருக்கும் போது மட்டும் ஒரு கசப்பு வரும் - இவ்வளவு எழுத்துக்காக உழைக்கிறோமே, நம்மை சுரண்டுகிறார்களே என்று சில நாட்கள் மனதுக்குள் குமுறுவேன். அவ்வளவுதான். அண்மையில் தான் புத்தகங்களின் முதலீடு, விற்பனை, லாபம், மதிப்புரிமை குறித்து ஒரு தெளிவு ஏற்பட்டது - சிறந்த விற்பனை ஒரு நூலுக்கு ஏற்பட்டாலும் எழுத்தாளன் அதில் இருந்து ஒரு பெண் பூக்கட்டி ஒரு மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு மடங்கே சம்பாதிக்க முடியும்; இத்தனைக்கும் அவன் அதற்காக ஒரு ஆண்டு முழுக்க முதுகொடிய எழுத வேண்டும். அந்த சொற்ப தொகைகையும் தராமல் ஏமாற்ற அனுமதிக்காமல் வாங்குவதே திறமை தான் எனும் போது அதன் அளவைப் பற்றி யோசிக்கவே முடியாது. என்னை மிகவும் ஆச்சரி...

வாசலோடு வைத்து அனுப்புபவர்கள்

ஒரு படைப்பாளியை, எழுத்தாளரை ஒரு இதழ் உரிமை கொண்டாடுவது மிக மிக முக்கியமானது; அப்போதே இரு தரப்பும் பெருமைப்படத்தக்க சாதனைகள் நிகழும். எனக்குத் தெரிந்து தொடர்கதைகளின் காலம் வரை தமிழ் வெகுஜன இதழியலில் அது நடந்தது. மலையாள இதழியலில் இன்னும் அது தொடர்கிறது. தமிழில் டிவி தொடர்கள் வந்து, கேபிள் டிவி, பெரிய பட்ஜட் படங்கள், புரொமோஷன் என வியாபாரம் பெருத்த பின்னர் தமிழ் இதழியல் முழுக்க முழுக்க சினிமாவின் கூட்டுறவையே பிரதானமாக எண்ணியது - எனக்குத் தெரிந்த ஒரு இயக்குநர் இருந்தார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த ஒரு இளம் இயக்குநருக்கு நேரடியாக வந்து ஒரு முக்கிய வார இதழின் எடிட்டரிடம் பேசி ஒரு தொடர் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அந்த தம்பி அப்போது ஒரு எழுத்தாளராகவோ திரைக்கலைஞராகவோ நிலைப்பெறவில்லை. நான் அப்போது பத்தாண்டுகளாக பரவலாக எழுதி வந்திருந்தேன். ஆனால் பலமுறை முயன்றும் எனக்கெல்லாம் தொடர் போக, ஒரு கட்டுரை எழுதக் கூட அவ்விதழில் வாய்ப்பு கிடைத்ததில்லை. அதுதான் திரைப்படக் கலைஞர்களின் அதிகாரம். நான் இதை ஒரு விமர்சனமாக சொல்லவில்லை. நம்மிடம் அதிகாரமும் தொடர்புகளும் இருந்தால் தேவைப்படும் இடத்தில் பயன...

வேதாளத்துக்கு சொன்ன பதில்

"விக்கிரமாதித்தா, என் நாவலை எடிட் செய்ய நேரம் போதவில்லை. 20% முடித்துவிட்டேன். புத்தக விழா வேறு வருகிறது. அவசரம்! பதிப்பாளர் வேறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அனுப்பட்டுமா?" "வேதாளமே, கேள். ஒரு நாவலை முடித்து ஓரிரு ஆண்டுகளாவது திரும்பத் திரும்ப படித்து திருத்தி எழுதிவிட்டு பதிப்பிப்பதும், முடிந்தால் அடுத்த ஆறு மாதங்கள் அதை புரொமோட் செய்ய எடுத்துக்கொள்வதும் நல்லது. நான் என்னுடைய நாவலை இரண்டாண்டுகளாக எடிட் செய்து வருகிறேன். இந்த ஆண்டு கொண்டு வருவேனா எனத் தெரியவில்லை. ஆனால் எழுத்தாளருக்கு பொறுமை முக்கியம். வாசகருக்கு நாம் நியாயம் செய்ய வேண்டும். நமது நாவல் ஒருவேளை நூறு ஆண்டுகள் கழித்தும் படிக்கப்படும் எனில் அது எவ்வளவு முக்கியம்! அதற்கு சற்று பொறுமை காக்கலாம் தானே? நூறாண்டுகளுக்குப் பிறகு ஆவியாக வந்து திருத்த இயலாது தானே?"

"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" - டிசம்பர் மாதம் முதல் அடுத்த வகுப்பு!

 

தெய்வத்துக்கு ஸ்வந்தம் அல்லாத நாடு

கடந்த பத்திருபதாண்டுகளில் வந்துள்ள மலையாளப் படங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அவை பிளாஸ்டிக்காக, ஆனால் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். திரைக்கதையின் தந்திரங்களால் நம்மைக் கடைசி வரை பார்க்க வைக்கும், ஆனால் முடிவில் ஒரு பெரிய அதிருப்தி நம்மைக் காத்திருக்கும். அது உணர்வுரீதியான வெறுமை. என்னதான் இப்படங்களை நாம் கொண்டாடினாலும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் ஒரு உணர்வுரீதியான ஒன்றுதல் இப்படங்களில் இருப்பதில்லை. வெற்றான புதிர்களாக இவை மாறி வருகின்றன. அதுவும் கொரோனாவுக்குப் பிறகான மலையாளப் படங்களைப் பார்க்கையில் எனக்கு சற்று பயமாகக் கூட உள்ளது - இப்படங்களைப் பார்த்து உள்வாங்கும் மலையாளிகள் எப்படி இருப்பார்கள்? சகமனிதரிடத்து ஒருவித அன்னியோன்யத்தை, பிரியத்தை, நம்பிக்கையை இழந்தவர்களால் மட்டுமே ஒரு கதையை வெற்றுத் தந்திரங்களுக்காக பார்க்க முடியும். இத்தனைக்கும் 90கள் வரை மலையாள படங்களில் உணர்ச்சிகரமான மோதல்கள் இருக்கும். விழுமியங்களின் வீழ்ச்சியும், அது ஏற்படுத்தும் கோபமும் துயரமும் இருக்கும், குடும்பம், சமூக அமைப்புகளின் (சில குறிப்பிட்ட சாதிகள், பாலினம்) சிதைவு குறித்த பதற்றம், சினம் இருக்க...

ஒரு முடிவற்ற 'துப்பறிவாளன்'

2021இல் எழுதி முடித்த நாவல் அது. அதைக் கடந்த இரு ஆண்டுகளாக திருத்தி மீளெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது புதிய பொலிவை, அடர்த்தியைப் பெறும் போது மகிழ்கிறேன். நான் எழுத்தாளனாக அறிமுகமான காலத்தில் ஒரு புனைவெழுத்தை முடித்ததும் வெளியிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போக வேண்டும் என நினைத்திருந்தேன். வெகுபின்னரே அது தவறு, கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க தோற்றம் தெளிவுறுவதைப் போல, ஒரு படைப்பை நாம் திருத்தத் திருத்தத்தான் முழுமையாக வெளிப்படுகிறது எனப் புரிந்துகொண்டேன். இந்நாவலுக்காக ஆய்வு செய்யும் நோக்கில் எவ்வளவோ படித்திருக்கிறேன், குறிப்பெடுத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்தின் பெயரை மாற்ற வேண்டுமெனில் அவர் எந்த மதத்தின், தத்துவ சிந்தனையின் பிரதிநிதி என யோசித்து, அதற்கான நூல்களை வாசித்து, அக்குறிப்புகளை கதையில் சரியான இடங்களில் கதையோட்டம் பாதிக்கப்படாமல் நுழைப்பது, அவரவருக்கான தனித்துவமான சிந்தனை, பேச்சுமொழிகளைக் கொண்டு வருவது ... இதற்கே ஒரு சில மாதங்கள் ஆகும். கதை முழுக்க காலநிலைக் குறிப்புகளில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டு வரவே ஒரு மாதத்திற்கு மேல் உழைப்பு தேவைப்படும். நாவலின் பக்கங்களை இ...

யுவன் சந்திரசேகர்

யுவனை நான் ஜெயமோகன் நடத்திய ஊட்டி முகாமில் எனக்கு 17 வயதிருக்கும் போது சந்தித்தேன். அவருக்கு அப்போது நாற்பது வயதிருக்கும், ஆனால் என்னை விட பயங்கர இளைஞனாக நடந்துகொண்டார். அந்த முகாமில் நான் பார்த்த ஒரே சுதந்திர பிறவி அவர் தான் - கவிதையியல் குறித்த தன் நுட்பமான கருத்துக்களை தத்துவார்த்தமாக விவாதிப்பார். - யுவன் விமர்சகராக உருவாகாமல் போனது ஒரு இழப்பே! எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் இவரது கருத்துக்களை மட்டுமே பொறுமையாகக் கேட்டுப் பார்த்திருக்கிறேன். எப்போதுமே சினம் கொண்டபடி இருக்கும் ஜெயமோகன் இவரிடம் மட்டுமே அமைதியாக இருந்து பார்த்திருக்கிறேன். எனக்கு அப்போதே யுவனை மிகவும் பிடித்திருந்தது. நான் கல்லூரியில் படிப்பதற்காக சென்னைக்கு சென்ற போது முதலில் சென்று சந்தித்த படைப்பாளி யுவனே. அவரது வீடு என் கல்லூரி அருகிலே இருந்தது. அங்கு யுவன் சற்று வித்தியாசமாக இருந்தார். ஊட்டியில் நான் பார்த்த அந்த ஜாலியான சாகசக்காரராக இல்லாமல் அமைதியான குரலில் பேசும், அலுவலக நேரத்தில் அலுவலக வேலை, வீட்டில் இனிமையான தகப்பன், பிரியமான கணவனாக இருந்தார். அவர் வீட்டுக்குள் சிகரெட் பிடிக்க மாட்டார் என்பதே எனக்...

புத்தகத்தையும் எழுத்தாளனையும் 'எரிப்பது'

  இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து கி.ரா மீதுள்ள பற்றினால் அவருடைய வேட்டியைத் துவைத்துப் போட வேண்டும் என கி.ராவிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார் என்று படித்தேன். இதை நான் வேறு பலரிடமும் கண்டிருக்கிறேன். எழுத்தாளனின் காலில் விழுவார்கள், பரிசளிப்பார்கள், எழுத்தாளரின் முகவராக மாறுவார்கள், தமது பிரியத்தைக் காட்ட என்னென்னமோ செய்வார்கள். இலக்கியத்தின் மீதான உணர்ச்சிகரமான பிடிப்பு என்றல்லாமல் படைப்பின் மீதுள்ள அச்சம், வாசிப்பின் அடுத்தடுத்த கட்டங்கள் மீதுள்ள தயக்கம் என்றே நான் பார்க்கிறேன்.  நீங்கள் ஒரு படைப்பைப் படித்து வியந்தால், ரசித்தால், பாராட்ட விரும்பினால் அதை எதாவது ஒரு விதத்தில் பதிவு பண்ணுவதும், சமூகத்திடம் பகிர்வதுமே முதலில் செய்ய வேண்டிய ஒரே வேலை. சமூகப் பகிர்வு வாசிப்பை ஒரு செயல்பாடாக்கும். ஆழமான திருப்தியும் நம்பிக்கையையும் கிடைக்கும். இதைச் செய்பவரே பொறுப்பான நல்ல வாசகர்.  அடுத்து அந்த படைப்பில் இருந்து பெற்ற கருத்துக்கள், உணர்வுகள், கற்பனையை உங்கள் அனுபவங்களுடன் உரசிப் பார்த்து அவை உண்மை தானா எனக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பயனற்ற எதையும் விட்டுவ...

நவீன தேசங்கள் ஏன் கடைசி விவசாயியை அச்சுறுத்தலாக பார்க்கின்றன?

“ கடைசி விவசாயி ” படத்தை அண்மையில் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் . அப்படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போது அது எந்தளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக , போலி முற்போக்கு வியாபார உத்திகள் இல்லாமல் இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது . அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது .   கடைசி விவசாயியான மாயாண்டி தாத்தா   போலி வழக்கில் சிறையில் விசாரணைக் காவலில் இருப்பார் . அவர் குற்றவாளி அல்ல எனத் தெரிந்தும் ஆவணத் தாக்கலில் நேரும் தாமதத்தால் அவரை சிறையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிக்கு வருவதை அழகாக காட்டியிருப்பார்கள் . இதுதான் நீதிமன்றத்தின் நடைமுறை - அங்கு யாருக்கும் உண்மை , பொய் குறித்து அக்கறை இருப்பதில்லை .  சிறையில் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இளைஞன் இருக்கிறான் . அவன் ‘ தொழில்முறைக் குற்றவாளி ’ அல்ல . அவனுக்கு ஒரு பிரச்சினை - அவன் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவான் . அவனுக்கு அப்போது யாரும் வேலை கொடுக்கவோ பெண் கொடுக்கவோ மாட்டார்கள் என ஒரு சிறைக்காவலரே சொல்...