Skip to main content

புத்தகத்தையும் எழுத்தாளனையும் 'எரிப்பது'

 


இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து கி.ரா மீதுள்ள பற்றினால் அவருடைய வேட்டியைத் துவைத்துப் போட வேண்டும் என கி.ராவிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டு அவ்வாறே செய்தார் என்று படித்தேன். இதை நான் வேறு பலரிடமும் கண்டிருக்கிறேன். எழுத்தாளனின் காலில் விழுவார்கள், பரிசளிப்பார்கள், எழுத்தாளரின் முகவராக மாறுவார்கள், தமது பிரியத்தைக் காட்ட என்னென்னமோ செய்வார்கள். இலக்கியத்தின் மீதான உணர்ச்சிகரமான பிடிப்பு என்றல்லாமல் படைப்பின் மீதுள்ள அச்சம், வாசிப்பின் அடுத்தடுத்த கட்டங்கள் மீதுள்ள தயக்கம் என்றே நான் பார்க்கிறேன். 
நீங்கள் ஒரு படைப்பைப் படித்து வியந்தால், ரசித்தால், பாராட்ட விரும்பினால் அதை எதாவது ஒரு விதத்தில் பதிவு பண்ணுவதும், சமூகத்திடம் பகிர்வதுமே முதலில் செய்ய வேண்டிய ஒரே வேலை. சமூகப் பகிர்வு வாசிப்பை ஒரு செயல்பாடாக்கும். ஆழமான திருப்தியும் நம்பிக்கையையும் கிடைக்கும். இதைச் செய்பவரே பொறுப்பான நல்ல வாசகர். 

அடுத்து அந்த படைப்பில் இருந்து பெற்ற கருத்துக்கள், உணர்வுகள், கற்பனையை உங்கள் அனுபவங்களுடன் உரசிப் பார்த்து அவை உண்மை தானா எனக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பயனற்ற எதையும் விட்டுவிடுவதே சாலச்சிறந்தது. வாசக அனுபவத்தை மானுட இருத்தலில் இருந்து விலக்கி தனிப்பொருளாகப் பாருங்கள், வாசிப்பை வாசிப்புக்காக மட்டுமே ரசியுங்கள் என்பது ஒரு பழைய கற்பனாவாதக் கருத்து. அப்பார்வையின் விளைவாக மனிதர்கள் பைத்தியமாகிறார்கள் என பகடி செய்த நாவலே செர்வாண்டஸின் “டான் குவிக்ஸாட்”. அதில் ரொமான்ஸ் படைப்புகளைப் படித்து நிஜம் எது, பிரமை எது எனப் பிரித்தறிய முடியாதபடிக்கு குவிக்ஸாட் பித்தாகிப் போக அவரது வேலைக்காரியும் நண்பர்களுமாக அவரது நூலகத்து ரொமான்ஸ், சாக நாவல்களை குவித்துப் போட்டு எரிக்கிறார்கள். அது ஒரு உருவகம் - எரியும் போது எஞ்சுவது சாம்பல். சாம்பலே எஞ்சுமெனில் அதை ஏன் குவித்து வைக்க வேண்டும்? ஆனால் உங்கள் அகத்தையோ வாழ்க்கையையோ எரித்தால் சாம்பல் வராது, ஒளியே தோன்றும்.

புத்தகத்தையும் எழுத்தாளரையும் எரித்து, அடுத்து அத்தீயை எடுத்து தன் வாழ்வையும் எரித்து ஒளியைப் பெறுபவரே சிறந்த வாசகர். எரிப்பதற்குத் தேவை தைரியம் மட்டுமே.

நானும் ஒரு காலத்தில் டான் குவிக்ஸாட்டாக இருந்தேன். இலக்கியத்தை உண்மையின் உரைகல்லில் உரசிப் பரிசீலிக்க வேண்டும், அப்படியே நம்பலாகாது எனத் தெளிவு வந்த பின்னரே நான் தப்பித்தேன். ஆகையால் எழுத்தாளனிடம் மட்டுமல்ல, புத்தகத்திடமும் பித்தாகக் கூடாது.

வாசிப்பு உங்களை தெளிவான, ஆழமான மகிழ்ச்சியான மனிதராக்க வேண்டும் எனில் அதை வாழ்வுக்குள் இழுத்துச் செல்ல வேண்டும். நமது வரலாற்றில் பல மகத்தான படைப்பாளிகள் அதைச் செய்து பார்த்திருக்கிறார்கள். தஸ்தாவஸ்கியும் தல்ஸ்தாயும் சிறந்த உதாரணங்கள். தமிழிலும் சிலரைச் சொல்ல முடியும். வாசித்ததை வாழ்வில் வைத்துப் பார்க்கையில் அதில் வரும் பார்வையும், சிக்கல்களும், மொழியும் உண்மையா பொய்யா எனக் கண்டுபிடிக்க முடியும். மலை மலையாக நூல்களைப் படிப்பவர் அல்ல, இதைச் செய்பவரே ஒரு தலைசிறந்த வாசகர். எழுத்தாளரை நாடாதவரே தலைசிறந்த வாசகர். 

வாசிப்பு அனுபவம் ஒரு மதலை, புத்தகம் அதைப் பெற்ற தாய், எழுத்தாளன் பிரசவம் பார்த்த மருத்துவர். குழந்தை பிறந்ததும் ஒரு தகப்பன் குழந்தையை ரசிக்கலாம், அடுத்து உணர்ச்சி மேலிட்டால் தன் மனைவிக்கு முத்தம் கொடுக்கலாம், பாராட்டலாம், பரிசளிக்கலாம் (புத்தகத்தை ரசிப்பது, அதைப் பற்றி ஊருக்கே சொல்வது). ஆனால் டாக்டரைப் போய் கட்டிப்பிடித்து உங்கள் காலடி மண்ணை நெற்றியில் நான் போட்டுக்கணும், உங்க சேலையைத் துவைத்துப் போடணும், உங்களுக்கு ஒருநாள் டிரைவராக இருக்கணும் என்று கிளம்பினால் அதற்கு ஒரே ஒரு பொருள் தான் - அவருக்கு தன் குழந்தை மற்றும் மனைவியுடன் நேரம் செலவிட விருப்பமில்லை. (படைப்பை தொடர்ந்து பரிசீலிக்க தயக்கம்)

நிறைய படித்துவிட்டு, பகிராமல், பேசாமல், எழுதாமல், எதாவது ஒரு வகையில் வெளிப்படுத்தாமல் தனியாக ஒரு வீட்டில், தாமுண்டு வேலையுண்டு என முடங்கியிருப்பவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. இதற்குத் தேவை கொஞ்சம் சமூகப் பற்று மட்டுமே.

அடுத்த விசயத்தை செய்ய உங்களுக்கு அபூர்வமான அறிவோ திறனோ தேவையில்லை. துணிச்சலும் நேர்மையும் போதும். ஆனால் வாசிப்பை வாழ்வில் இருந்து தப்பித்தலாகப் பார்ப்பவர்கள் படித்ததை தம் இருத்தலுடன் பொருத்திப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் திகைத்து நிற்கிறார்கள். அதற்கு ஒரு தற்காலிக விடுதலையாக எழுத்தாளனைக் கட்டிப்பிடித்து நெருக்குகிறார்கள், பொருளாக எதையாவது கொடுக்க முயல்கிறார்கள், அல்லது அவனைக் காதலிக்கிறார்கள் அல்லது அவனது வேட்டியைத் துவைத்துப் போடுகிறார்கள். இதை நான் பாமரத்தனமாகப் பார்க்கவில்லை. இதைச் செய்பவர்கள் பெரிய புத்திசாலிகளே.ஆனால் தாம் படித்தது ஏன் தவறாக இருக்கக் கூடாது என யோசிக்கவும் பரிசீலிக்கவும் அவர்களுக்கு துணிச்சல் இருப்பதில்லை என்பதே பிரச்சினை. மற்றபடி அனைவருடைய மூளையும் இந்த உலகில் ஒன்று தான்.

அதனாலே சொல்கிறேன்: ஒரு வாசகனுக்கு அவசியமில்லாத குணம் ஒரு படைப்பை படித்து மனமகிழ்ந்து நெகிழ்ந்து படைப்பாளனிடம் வணங்கிப் பணிவது, அன்பையும் மரியாதையையும் காட்ட எதையாவது செய்துதான் ஆக வேண்டும் என பரவசப்படுவது. ஒரு வாசகனுக்குத் தேவையான குணம் ஒரு நாவலையையோ கவிதையையோ கட்டுரையையோ படித்துவிட்டு இதிலுள்ளது சரிதானா என யோசித்துக்கொண்டே இருப்பது, அதற்கு தான் வாழ்க்கையையே பரிசோதனைக் களமாக்குவது, அப்போது தான் அறிந்துகொண்டது நடப்பில் பொருளற்றது, வாழ்க்கையனுபவத்துடன் ஒத்துவராதது என அறிந்தால் அதைக் குறித்து வைத்துக் கொண்டு தனக்கு உண்மையெனப் படும் படைப்பு என்னவெனத் தேட வேண்டும்.

நான் ஒரு வாசகர் என்னிடம் வந்து “நீங்கள் நன்றாக எழுதியிருக்கிறீர்கள், நான் பாராட்டுகிறேன், ஆனால் உங்கள் நாவலில் சொல்லப்பட்ட விசயத்தை நான் என் வாழ்வில் கண்டதில்லை. அதற்கு என் வாழ்வில் எந்த பொருளும் இல்லை. நீங்கள் மிகையாக பொய்யாக சொல்லியிருக்கிறீர்கள்.” என்று சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவரே என்னைப் பொறுத்தவரையில் சிறந்த வாசகர். 

பி.கு: இதை நான் மாரிமுத்துவை விமர்சிக்க கூறவில்லை. இம்மாதிரி பொதுவான செய்கைகளை மட்டுமே விமர்சிக்கிறேன். அவருடைய மறைவுக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...