கடந்த பத்திருபதாண்டுகளில் வந்துள்ள மலையாளப் படங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அவை பிளாஸ்டிக்காக, ஆனால் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். திரைக்கதையின் தந்திரங்களால் நம்மைக் கடைசி வரை பார்க்க வைக்கும், ஆனால் முடிவில் ஒரு பெரிய அதிருப்தி நம்மைக் காத்திருக்கும். அது உணர்வுரீதியான வெறுமை. என்னதான் இப்படங்களை நாம் கொண்டாடினாலும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் ஒரு உணர்வுரீதியான ஒன்றுதல் இப்படங்களில் இருப்பதில்லை. வெற்றான புதிர்களாக இவை மாறி வருகின்றன. அதுவும் கொரோனாவுக்குப் பிறகான மலையாளப் படங்களைப் பார்க்கையில் எனக்கு சற்று பயமாகக் கூட உள்ளது - இப்படங்களைப் பார்த்து உள்வாங்கும் மலையாளிகள் எப்படி இருப்பார்கள்? சகமனிதரிடத்து ஒருவித அன்னியோன்யத்தை, பிரியத்தை, நம்பிக்கையை இழந்தவர்களால் மட்டுமே ஒரு கதையை வெற்றுத் தந்திரங்களுக்காக பார்க்க முடியும். இத்தனைக்கும் 90கள் வரை மலையாள படங்களில் உணர்ச்சிகரமான மோதல்கள் இருக்கும். விழுமியங்களின் வீழ்ச்சியும், அது ஏற்படுத்தும் கோபமும் துயரமும் இருக்கும், குடும்பம், சமூக அமைப்புகளின் (சில குறிப்பிட்ட சாதிகள், பாலினம்) சிதைவு குறித்த பதற்றம், சினம் இருக்கும். இவை முழுக்க தலைமுழுகப்பட்டது ஜித்து ஜோசப்பின் "திருஷ்யம்" படத்துடனே என நினைக்கிறேன். அது அச்சமூகத்துக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்குமான இழையை அறுத்துவிடுகிறது. அப்படம் கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு பின்நவீன சாயல் கொண்ட படங்கள் வரத்தொடங்குகின்றன. அவை மலையாள மண்ணில் இருந்து அந்நியப்பட்டவையாக இருக்கின்றன. அப்படங்களின் ரசிகர்களும் அந்நியப்பட்டவர்களும், அந்த அந்நியமாதலைக் கொண்டாடுகிறவர்களுமே.
நல்லவேளை இந்த தலைகீழ் மாற்றம் (paradigm shift) தமிழில் முழுக்க நிகழவில்லை. தமிழில் கார்த்திக் சுப்புராஜ், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் இதைத் துவங்கினாலும், அவர்களும் ஏதோ ஒரு இடத்தில் விழுமியங்களுடன் பரிசீலனையை மேற்கொள்கிறார்கள். "விக்ரம்" வரை அது தொடர்கிறது. மலையாளத்திலோ மக்கள் பரஸ்பரம் விலகிக் கொண்டே பரஸ்பரம் சந்தேகத்துடன் வாழும் உலகம் படங்களிலும் காட்டப்படுகிறது.
நான் பார்த்தவரையில் அமெரிக்க, பிரெஞ்சு பின்நவீன படங்களில் இந்த அந்நியமாதலின் அரசியல் பேசப்படும், இருத்தல் குறித்த விசாரணை இருக்கும், அதன் கொண்டாட்டம் இருக்கும். மலையாள சமகாலப் படங்களில் - இவற்றை அங்கு neo-noir என்று அழைத்து ஆய்வும் செய்கிறார்கள் - இவை இல்லை; அவர்களுடைய பண்பாட்டின் எந்த தொடர்ச்சியும் இல்லை. (ஆனால் கன்னடத்தில் "காந்தாராவில்" பண்பாட்டை வைத்து விளையாடுகிறார்கள்.) முழுக்க ஆழமற்றதாக, ஒரு பிணத்தை கொடூரமாக அறுத்து கூராய்வு செய்வதைப் போல உள்ளது அவலமாக உள்ளன இந்த மலையாளப் படங்கள். நான் படித்தவரையில் மலையாள இலக்கியத்தில் ஆர். உண்ணியும் டி.டி ராமகிருஷ்ணனும் இத்தகைய ஜித்து விளையாட்டுக் கதைகளை எழுதுகிறார்கள். மற்ற மலையாள பின்நவீன எழுத்தாளர்கள் அங்கு எப்படியெனத் தெரியவில்லை.
படங்களும் இலக்கியமும் ஒரு சமூகத்தின் ஆழ்மனத்தைப் பேசும் தொன்மங்கள் என எடுத்துக் கொண்டால் நவீன கேரளத்தின் ஒரு பகுதி குறித்த அச்சமூட்டும் சித்திரமே நமக்கு கிடைக்கிறது. பரதனும் பத்மராஜனும் அரவிந்தனும் உள்ளிட்ட எத்தனையோ மகத்தான இயக்குநர்கள் எடுத்த படங்கள் நம்மை இன்றும் அலைகழிக்க, யோசித்தாலே நெகிழ, வாழ்க்கை குறித்து சிந்திக்க வைக்கின்றன. அங்கிருந்து எது அவர்களை இங்கு கொண்டு வந்தது?
என்னதான் தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடோ?
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

