கே . வி ஆனந்த் சற்று மிகைப்படுத்தப்பட்ட ஆனால் அழகான துலக்கமான சித்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் - அவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் கூட துண்டுத் துண்டு சித்திரங்களாகவே என் மனத்தில் பதிந்துள்ளன . அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் கூட அப்படித்தான் . அதுவும் பாடல்களில் வரும் மொண்டாஜ் பாணி அவ்வளவு அழகாக இருக்கும் . பி . ஸி ஶ்ரீரம் மிக மென்மையான ஒளியில் சன்னமான வண்னங்களுடன் , ஒளி - நிழல் பின்னல்களுடன் காட்சிகளை உருவாக்க விரும்பினார் என்றால் , அந்த காட்சிகள் கதையமைப்புடன் பொருந்தி படத்தின் செய்தியை உள்மனத்துக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தார் என்றால் , அவருடைய சீடரான கே . வி ஆனந்த் ஒரு மீ - எதார்த்த கனவுலக பாணி ஒளியமைப்பை கொண்டு வந்தார் . 96 இல் என் பதின்வயதில் “ காதல் தேசம் ” வந்த போது “ எப்படி இப்படியெல்லாம் எடுக்கிறார்கள் ?” என பார்த்து பார்த்து ஏங்கியது நினைவுள்ளது . “ என்னைக் காணவில்லையே நேற்றோடு ” பாடலில் அந்த நீல நீர் அப்படி கனவில் காண்பது போல - எட்டித் தொடலாம் - என்பது போ...