இப்போது நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஒரு வினோதமான சூழலை உண்டு பண்ணியிருக்கிறது - மக்கள் தெருவிலும் ஆஸ்பத்திரி வராந்தாக்களிலும் படுத்தபடி கெஞ்சுவது, ஆக்ஸிஜன் தரப்படாமல் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளை சமூகத்தை சாபமிடுவதை, அழுது புலம்புகிற காணொலிகளை, காட்சிகளை தினம் தினம் பார்க்கிறோம் - நல்லவேளை மருத்துவர்களாக இருந்து இதையெல்லாம் நேரில் கண்டு பதில் சொல்லுகிற நிலை ஏற்படவில்லை; எனக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கும்.
இந்தியா முழுமைக்கும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு எனும் சேதியை படித்தேன். எனில் ஏன் இந்த தட்டுப்பாடு? கடந்த ஓராண்டாக நாம் திட்டமிடாமல் அக்கறையில்லாமல் இருந்து விட்டோம். கடந்த சில மாதங்களாகவே நமது பிரதமரும், உள்துறை அமைச்சரும் முழுமூச்சாக மாநில தேர்தல் பிரச்சாரங்களில் - குறிப்பாக மேற்கு வங்கத்தை கைப்பற்றும் ‘போரில்’ - ஈடுபட்டிருந்தனர். இது போக, இரண்டாம் அலை பற்றி தெரிந்திருந்தும், ராகுல் காந்தி போன்றோர் முன்பே வலியுறுத்தி இருந்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் நம்மால் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜனை தயாரித்து வைத்திருந்த முடியும்.
அடுத்த பிரச்சனை, போக்குவரத்து சம்மந்தப்பட்டது. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எல்லா தேவைப்படுகிற மாநிலங்களுக்கும் விரைவில் நம்மால் அனுப்பி வைக்க முடியவில்லை. இதற்கு முன்பே பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி பெரிய அளவிலான ஆக்ஸிஜன் தயாரிப்பில் ஈடுபட்டு, உற்பத்தி ஆனவற்றை நிர்வகித்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிற ஒரு மைய அமைப்பை நாம் ஏற்படுத்தி இருந்தால் இந்த கொலைக்களன் நாடு முழுக்க தோன்றியிருக்காது. இப்போது கொரோனா பாதிப்பினால் அல்ல, போதுமான கட்டமைப்பு வசதிகளும், திட்டமிடலும், நிர்வாகமும் இல்லாததாலே இத்தனை ஆயிரம் பிணங்கள் நாளும் விழுகின்றன.
நம் மைய அரசு இப்போது என்ன பண்ணுகிறது? இந்த சூழலை பயன்படுத்தி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் பின்வாசல் வழியாக மீண்டும் செயல்பட அனுமதி கொடுக்கலாம் என நீதிமன்றத்திடம் சொல்கிறது. இன்னொரு பக்கம், தடுப்பு மருந்து நிறுவனங்கள் கன்னாபின்னாவென விலையை உயர்த்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு கொள்ளைக்கும் ஒரு கட்டிங். அல்லது நேரடியான பினாமி முதலீடு இந்நிறுவனங்களில் நமது அதானி ஜனதா கட்சிக்கு இருக்கும் போல. முழுக்க முழுக்க வணிகர்களைப் போல யோசிக்கும் ஒரு அரசை நாம் இப்போது தான் பார்க்கிறோம். ஏனென்றால் நமது வரலாற்றில் முதன்முதலாக தடுப்பு மருந்துகளை தனியார் வசம் ஒரு அரசு ஒப்படைப்பதை, அவர்களிடம் கொள்ளை விலைக்கு வாங்கி மக்களுக்கு அளிக்கிற பொறுப்பை மாநிலங்களிடம் கைகழுவி விடுவதை பார்க்கிறோம். 1877 ஆம் ஆண்டின் தாது வருடப்பஞ்சத்தை ஆங்கிலேய அரசு இந்தியாவில் உருவாக்கியதை, பின்னர் அதை கொடூரமாகக் கையாண்டதைப் போன்றே இந்த அதானி ஜனதா கட்சியின் அரசு கொரோனாவை கையாள்வதும் இருக்கிறது. இருவருக்கும் லாபத்தை தவிர வேறெந்த அக்கறையோ பொறுப்போ இல்லை.
கோயிலுக்காகவும், இந்து மதப்பற்றின் பொருட்டும், பாகிஸ்தான் ஒழிக கோஷத்துக்காகவும் ஒரு கட்சியை மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததன் விலையை இப்போது கொடுக்கிறோம். நினைக்க மனம் பதறுகிறது!
