Skip to main content

நவதாராள பொருளாதாரம் எப்படி நவீன சாதியமைப்பை உருவாக்குகிறது?




பாரத் பயோடெக்கும், செரம் இன்ஸ்டியூட்டும் வேறுபாட்டு விலைமுறை (differential pricing) மூலம் தடுப்பு மருந்தின் விலையை 150 ரூபாயில் இருந்து 600-1200 என சூழலுக்கு ஏற்றபடி மாற்றி மக்களை ஜேப்படிக்கிறார்கள் என்பதை ஜெயரஞ்சன் ஒரு காணொலியில் விமர்சித்திருந்தார். அதாவது அரசு சந்தையை இரு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து விட்டு, அவர்களை சந்தையின் தேவைக்கு ஏற்பட் விலை ஏற்ற அனுமதிப்பதன் விளைவு மாநில அரசுகள் ஒரு பக்கம் பணமின்றி கடனாளி ஆவது மட்டுமல்ல, மக்களுக்கு இடையில் ஒரு செயற்கையான படிநிலை, மதிப்பேற்றம், மதிப்பிறக்கம் நிகழ்வதும் தான் என அவர் சொல்லுகிறார். உதாரணமாக ஒரே தோசையை ஒருவர் தள்ளுவண்டியில் சாப்பிடுவதற்கும் ஒரு மத்திய தர ஓட்டலில் அமர்ந்தும் சாப்பிடுவதற்கும் அதையே ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து சாப்பிடுவதன் வித்தியாசம் செலவு செய்யும் திறன், தயாரிப்பு செலவு, பொருளின் மதிப்பு மட்டுமல்ல, ஒருவருடைய சமூக மதிப்பு, அந்தஸ்து, சுயமதிப்பும் தான் - நீங்கள் வாங்கி துய்க்கும் பொருளைப் பொறுத்து ஒரு நுகர்வோனாக என் மதிப்பு மாறுபட்டால் பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் இப்படியான வேறுபாட்டு விலைமுறைக்கு உட்படும் போது அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். இன்று இந்த கொரோனா காலத்தில் அது சாவுக்கும் உயிரோடு வாழ்வதற்கும் இடையிலானதாக மாறியிருக்கிறது. 


இந்த சந்தைத் தேவைக்கு ஏற்ற விலையேற்றக் கொடுமையை நாம் இதற்கு முன்பு கல்வி பரவலாக தனியார்மயமான போது பார்த்தோம் - அரசுப் பள்ளிகள் ஒருவித சேரிகளாகப் பார்க்கப்பட்டன; எப்பாடு பட்டேனும் பிள்ளைகளை தனியாரில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் தவித்தார்கள். இன்று என்னதான் தரமான உள்கட்டமைப்புகளுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட்டாலும் அங்கே குழந்தைகளை படிக்க வைக்க நமக்கு தயக்கமுள்ளது. காரணம் கல்வியின் தரம் அல்ல, அது அவர்களுடைய சமூக மதிப்பீட்டை பாதிக்கும் என்கிற அச்சம். இது அடுத்து நிலத்தின் மதிப்புக்கு வந்து நகரங்களில் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் தாம் வேலை பார்க்கும் இடங்களில் இருந்து வெகுதொலைவிலோ அல்லது சிறு பொந்துகள் போன்ற வீடுகளிலோ வசிக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு நவீன தீண்டாமையை ஏற்படுத்தியதுடன் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. நீங்கள் இன்று நகரத்தில் ஒரு கடையை எடுத்து நடத்துவதன் முக்கிய சிக்கல் வாடகை தான். அடுத்து, பொருட்களின், பெட்ரோலின் விலை ஏற்றம். நீங்கள் நகரத்தில் ஓரளவுக்கு நியாயமாக சம்பாதித்தாலும் நிம்மதியாக வாழ முடியாது எனும் சூழலை இது ஏற்படுத்தியது. 

அதாவது நவதாராளவாதத்தின் இந்த வேறுபாட்டு விலைமுறையானது ஒரு நவீன சாதியமைப்பை நம் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது. இதன் ஆதரவாளர்களோ விலை ஏற்றமானது தரத்தை அதிகப்படுத்தும், போட்டியுணர்வை கொண்டு வந்து பின்னர் விலையை குறைக்க உதவும் என முட்டுக் கொடுக்கிறார்கள். (இவர்களே இன்னொரு பக்கம் மரபின் பெயரில் சாதியை, மதவாதத்தை ஆதரிக்கிறார்கள்.) ஆனால் இது ஒரு மிகப்பெரிய பொய் என்பதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம்.

 வெறுமனே இணையம், மொபைலை வைத்து இதை நாம் நியாயப்படுத்தக் கூடாது - அதை மட்டும் வைத்து மனிதன் வாழ முடியாது: தாராளமயமாக்கலும், மாறுபாட்டு விலைமுறையும் கல்வி, உணவு, தண்ணீர், நிலம், வீடு போன்ற விசயங்களில் எந்த கட்டுப்பாடும் இன்றி கால் பாவ நாம் அனுமதித்திருக்கக் கூடாது. அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளே இவை இருந்தாக வேண்டும் - யோசித்துப் பாருங்கள் உணவில் கோதுமை, அரிசி போன்றவை முழுக்க தனியார் வசம் போனால் கிலோவுக்கு 60-100 ரூ இல்லாமல் எளியோரால் கூட அரிசி வாங்க முடியாது. மக்களுக்கும் இல்லாமல், விவசாயிக்கும் இல்லாமல் காசு அதானிகளின் பைக்கு மட்டும் போகும். இந்த ரேஷன் அரிசி இல்லாவிட்டால் தள்ளுவண்டிக் கடைகள் நடக்காது. சிறிய டிபன் கடைகளையும் மூட வேண்டியது தான். எல்லாரும் நூறு ரூபாய்க்கு குறையாமல் ஒரு தோசை வாங்க முடியாது. மதிய சாப்பாட்டின் விலை 150 ரூபாய்க்கு சிறிய ஓட்டல்களிலே ஏறி விடும். எல்லாருமே இங்கு மூன்று வேளை உணவருந்த நாம் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தினமும் செலவு செய்தாக வேண்டும் எனும் நிலை ஏற்படும்.

 பெட்ரோல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு வெளிப்படையாக கைவிடும் நாள் தொலைவில் இல்லை. இதுவே அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அரசு குறைத்து ஒரேயடியாக அவற்றை நாடு முழுக்க மூடுவதுடனும் நடக்கும். கொரோனா காலத்தில் போல பணமில்லாதவர்கள் ரோட்டில் கிடந்து சாகவோ வட்டிக்கு பணம் வாங்கி செலவு பண்ணவோ வேண்டி வரும். அரசு பள்ளிகளை, கல்லூரிகளை இந்த அதானி ஜனதா கட்சியினர் ஒருநாள் மூடும் போது, படிக்க வேண்டியவர்கள் தனியாருக்கு செல்லுங்கள், அரசால் இப்போதுள்ள பொருளாதார நிலையில் செலவு செய்ய வழியில்லை என கைவிரிக்கும் போது, அமெரிக்காவில் இன்று நடப்பதைப் போல கல்லூரி கனவு வெறும் கற்பிதமாக மாறும்; வட்டிக்கு பணம் வாங்கி படித்து முடித்து வாழ்நாள் முழுக்க கல்விக்கடனை திரும்ப செலுத்துகிறவர்களாக நாம் மாறுவோம். உணவு, கல்வி, வசிப்பிடம் சார்ந்து மிகக் கொடுமையான ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் ஏற்பட்டு நாம் நவீனத்துக்கு பிந்தைய காலத்துக்கு செல்வோம். அதை நோக்கி தான் இந்த அரசு நம்மை அழைத்து செல்கிறது. ஆக்ஸிஜனுக்கு கூட வழியில்லாமல், படுக்க படுக்கையில்லாமல் தெருவில் கிடந்து மக்கள் சாகிற இந்த வரலாற்றுத் தருணம் அதையே முன்கூறுகிறது. 


இதற்குத் தீர்வு என்ன? கட்டற்ற தாராளமயமாக்கலை மூக்கணாங்கயிறு மாட்டி தொழுவத்தில் அடைப்பது. கல்வி, உணவு, மருந்து, இருப்பிடம் போன்றவற்றில் அனைவருக்கும் சம உரிமை உண்டு, இதில் வியாபாரம் கோலோச்சக் கூடாது என அரசு ஒரு முடிவெடுப்பது. ஜெயலலிதாவின் அம்மா உணவகத்தை போல பல உணவங்களை நாடு முழுக்க திறப்பது. மக்களுக்கு சோறையும், அடிப்படை வசதிகளையும் பண்ணிக் கொடுத்தால் அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் எனும் பழைய வாதத்தை முறியடிப்பது - மக்கள் வேலை செய்வது சோற்றுக்காக மட்டுமல்ல, மதிப்புக்கு, மரியாதைக்கு, முன்னேற்றத்துக்கும் தான். அதை இந்த சமூகம் கொடுத்தால் அவர்கள் ஏன் வேலை செய்ய சுணங்குகிறார்கள்? 

இலவச உணவு, கல்வி மூலம் சோற்றுக்கு பஞ்சமில்லாத தமிழகம் முன்னேறி இருக்கிறதா இல்லை ஒன்றுமில்லாத உங்கள் உத்தர பிரதேசம் முன்னேறி இருக்கிறதா என்பதை வைத்து நீங்களே முடிவு செய்யுங்கள். 


அடுத்து, நீட் போன்ற தேர்வுகளின் வழி மருத்துவப் படிப்பை கடுமையான செலவுபிடித்த காரியமாக மாற்றாமல், இப்படி படித்தவர்கள் நேராக போய் தனியாரில் வேலை செய்ய அனுமதிக்காமல் இருப்பது - வெளிநாட்டில் பள்ளியும் கல்லூரிப் படிப்பும் முடித்தவர்கள் மட்டுமே இந்தியாவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவர் ஆகலாம், மிச்ச பேர் அரசுப்பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என ஒரு சட்டத்தை கொண்டு வருவது.

 அடுத்து, ராணுவ முதலீட்டை குறைத்து அரசு மருத்துவமனைகளில் , பள்ளிகளில் கூடுதலான முதலீட்டை செய்ய வேண்டும். நவதாராளவாதம் இந்த துறைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற்றப்பட வேண்டும். இன்று ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை தரமான முறையில் அரசு மருத்துவமனையில் செய்ய முடியும் என்றாலும் மத்திய வர்க்கம் தனியாரை நோக்கி படையெடுக்க காரணம் பின்னதன் விளம்பரம், பளபளப்பு. அரசு மருத்துவமனைகளுக்கான விளம்பரத்தை அதிகப்படுத்தி, ஒவ்வொரு நகரிலும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை குறைத்து, அரசு மருத்துவமனைகளை அதிகப்படுத்தி, அங்கு மக்களின் வருமானத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும். ஏழைகளுக்கு இலவசம், மேல்மத்திய வர்க்கத்துக்கு தனியார் செலுத்துவதில் பாதி என. இதைக் கொண்டு தரமான வசதியான சிகிச்சையும் குறைந்த செலவில் எளியோர் மற்றும் மத்திய வர்க்கத்துக்கு அரசே அளிக்க முடியும். 

 இதையே கல்வியிலும் செய்தாக வேண்டும். தாராளமயத்தின் திறந்தநிலைக்கு எதிராக செயல்பட்டு அதானிகளையும் பூனாவாலாக்களையும் தத்தம் துறைகளில் மொனோபோலியாக செயல்பட அனுமதிக்க முடியும் எனில் அரசுத்துறைகளை ஏன் சில குறிப்பிட்ட சந்தைகளில் மொனோபொலியாக்க, லாபம் சம்பாதிக்க வைக்க அரசால் முடியாது? அந்த லாபத்தைக் கொண்டு எளியோருக்கு ஏன் இலவச சேவை அளிக்க முடியாது? இந்த அணுகுமுறை உண்டெனில் இப்போது ஏற்பட்டுள்ள கொடூரமாக மக்கள் சிகிச்சையின்றி கைவிடப்படும் நிலை, ஆம்புலன்ஸில் இருந்து உடல்கள் சிதறி விழும் நிலை, எரிக்க இடமில்லாத நிலை ஏற்படாது. பொருளாதார ரீதியிலான சமூகப் படிநிலைகளை நம்மால் முடிவுக்கு கொண்டால் ஒழிய இந்த நாட்டில் கல்வி, மருத்துவ வசதி, குடியிருப்பு வசதி என எதிலும் நீதி நிலவாது.


முன்பு ஒரு தாழ்த்தப்பட்டவன் தான் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் அப்படி இருக்கிறான், அவனுடைய துன்பங்கள் நியாயம் தான் என்று சொன்னீர்கள். இன்று அதே தர்க்கத்தை எளியோர் சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாமல், மருத்துவனையில் கிட்ட இடமில்லாமல் தரையில் கிடந்து உயிர் விடும் போதும் பயன்படுத்துகிறீர்கள் - பாவத்தின் இடத்தில் பணம் வந்து விட்டது.


இப்போதைக்கு அதானி ஜனதா கட்சியினரிடமும் பூனாவாலாக்களிடமும் சொல்லிக் கொள்வது: பேராசையில் அடுத்த கட்டத்தில் உள்ளவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்! தடுப்புமருந்துகளில் வியாபாரம் பார்க்கிறேன் என மரண வியாபாரி ஆகாதீர்கள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...