Skip to main content

ஜியும் கொரோனாவும் - சர்வாதிகாரத் தந்தை / பாசமிகு தந்தை




நடுவண் அரசு கொரோனா தடுப்பூசிகளை தாராளமயப்படுத்தி சந்தைக்கு திறந்து விடுவது, விலையை இஷ்டத்துக்கு நிர்ணயிக்கலாம் என அனுமதி அளிப்பது, (தாம் ஆளும் மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்க) 50% தடுப்பூசிகளை 150 ரூபாய்க்குள் வாங்கும் எனவும், மிச்சத்தை அதிக விலையில் மாநிலங்கள் வாங்கி தம் மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனக் கோருவதும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த அரசின் கடந்த சில ஆண்டுகளின் செயல்பாடுகள் இவ்வாறே இருந்துள்ளன. இந்த அரசு தொடர்ந்து தான் ஆளும் மாநில மக்களை உயர்வாகவும், தனக்கு வாக்களிக்காத மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவுமே நடத்தி வருகிறது. இதை மறைக்க எந்த முயற்சியும் அது எடுப்பதில்லை - சொல்லப்போனால் பாஜக ஆளாத மாநில மக்கள் தாம் ஜியின் அன்பைப் பெறாதவர்கள், அதனாலே கைவிடப்படுகிறோம் எனும் அச்சவுணர்வுக்கு, தவிப்புக்கு ஆளாக வேண்டும் என்றே நடுவண் அரசு விரும்புகிறது. இது ஒரு கோபக்கார தந்தை தன்னை மதித்து பணியாத மகனிடம் பேசவோ அவனுக்கு பணம் அளிக்காமலோ தனிமைப்படுத்துவது, அதற்கும் பணியாத போது பாசத்தை பிற பிள்ளைகளிடம் காட்டி ஒருவித பொறாமையை உண்டு பண்ணப் பார்ப்பது, இது எதுவுமே பலனளிக்காவிட்டால் வீட்டில் இருந்து அடித்து வெளியே தள்ளுவது, சொத்தை தர மாட்டேன் என மிரட்டுவது போன்ற காரியங்களுக்கு சமமானது. இந்த கோபக்கார-பாசக்கார தந்தையின் மனநிலையை கொண்டவர் ஜி என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது; இந்த கொரோனா சமயத்தில் அது இன்னும் வெளிப்படையாக நிகழ்த்தப்படுகிறது - நடுவண் அரசு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தமிழகத்துக்கு தர மறுக்கிறது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இங்கிருந்து எடுத்து அண்டை மாநிலங்களுக்கு அளிக்கிறது, சாலைகளின் பெரியார், அண்ணா பெயர்களை மாற்றுகிறது, வாக்களிக்காத மக்களிடம் ‘உங்கள் அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவோம்’ என உணர்த்துகிறது, பிரச்சாரத்துக்கு வடமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து அவர்களை இந்தியில் கோஷமிட வைத்து, பைக்குகளில் பெரும் ஊர்வலம் செய்ய வைக்கிறது, எந்த அரசை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அது எங்கள் அரசே என மிரட்டுகிறது, உங்கள் மாநிலத்தில் வட இந்தியர்களை அதிகமாக குடியமர்த்தி, அவர்களுக்கு வீடுகளும் வாக்குரிமையும் அளிப்போம் என்கிறது, மாநிலத்தின் அரசி வேலைகளையும் கணிசமாக வட இந்தியர்களுக்கே அளிக்கிறது, இவை எதுவும் எடுபடவில்லை என்றால் தமிழகத்தின் பெயரை இந்தியில் மாற்றுவோம் என செய்தியை கசிய விடுகிறது. இவை எதுவுமே தற்செயலாக, மறைமுகமாக நடப்பதாக நான் நினைக்கவில்லை; மாறாக இவற்றை தமிழக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நினைப்புடனே ஜியின் அரசு செய்கிறது. சொல்லப் போனால் தமிழக பாஜக ஊடக தொடர்பாளர்களே ‘பாஜகவுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு நடுவண் அரசு அனுசரணையாக இருக்கும்’ என வெளிப்படையாகவே பேசுகிறது. இதையே முதல்வர் எடப்பாடியும் சொன்னார். அதாவது எங்களுடன் கூட்டணி அமைத்தால் மத்தியில் பிரதிநுத்துவம் தருவோம், அமைச்சர் பதவி தருவோம் என்றல்ல, ‘உங்களுக்கு சோறு போடுவோம்’ என வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.


நடுவண் அரசுக்கும் தமிழகம் போன்ற ஆட்சி அதிகாரம் பாஜகவுக்கு இல்லாத மாநிலத்துக்குமான உறவு கடத்தியவருக்கும் கடத்தப்பட்டவருக்குமான உறவைப் போல இருப்பதை கவனியுங்கள் - “குணா” படத்தில் கமல் தன் காதலியை கடத்தி வைத்து ஒரு குகையில் வைத்து காதலிப்பார் இல்லையா அப்படித்தான் நடுவண் அரசு நம்மை நடத்துகிறது. ஒன்று காயப் போடும் இல்லாவிட்டால் திருக்குறளை எல்லாம் தப்புத்தப்பாய் சொல்லி “வண்கோம்” என அச்சுறுத்தி காதல் கடிதம் எழுதும். அதை நம்மையே “கண்மணி அன்போடு” என பாடச் சொல்லும். ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கினால் ஒரு கட்டத்தில் நாம் அடங்கி மடிந்து அவர்களுடைய சொற்படி ஆட ஆரம்பிப்போம், நம்மை அடக்கி ஆள்பவரை வழிபடத் துவங்குவோம் என நம்புகிறார்கள். 


ஜியின் இந்த சர்வாதிகாரத் தந்தை அணுகுமுறை மேலும் பல வருடங்கள் தொடருமெனில், 2024இல் இதே அரசு ஆட்சியில் அமரும் எனில், நாம் நம்மை “அபிராமி” என ஒப்புக்கொண்டு வேடமணிவதைத் தவிர வேறு வழியிருக்காது என நினைக்கிறேன். இப்போதே பாருங்கள் - தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் 150 ரூபாய்க்கு கொடுப்பது லாபமே எனச் சொன்னவர்கள் அரசின் அறிவிப்பு வந்தவுடன் ‘எங்களுக்கு 150 ரூ கட்டுப்படியாகாது’ என கைவிரித்து விட்டனர். பல கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பு ஒரேயடியாக உச்சம் பெற்று விட்டன. இது 750-1000 ரூபாய்க்கு தலா ஒரு தடுப்பூசியை இவர்கள் விற்கப் போகிறார்கள் எனக் காட்டுகிறது. மாநில அரசிடம் பணமில்லை. நோய்த்தொற்று அதிகரிக்க அதிகரிக்க போதுமான தடுப்பூசிகளை மாநிலமும் வாங்க முடியாமல், தனிப்பட்ட முறையில் தனியார் மருத்துவமனைகளிடம் பணம் செலுத்த மக்களுக்கும் தவிப்பார்கள். மாநில அரசு செயலிழந்து விட்டது என எதிர்க்கட்சிகளும் பாஜக ஆதரவாளர்களும் விமர்சிப்பார்கள், நம் முதுகுக்குப் பின்னால் கைகொட்டி சிரிப்பார்கள். இன்னொரு பக்கம் மருந்து கம்பனிகள் பல லட்சம் கோடிகளை அள்ளுவார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இலவசமாக தடுப்பூசிகள் சுலபமாக கிடைக்கும், அல்லது அவ்வாறு தாம் அளித்துள்ளதாக நடுவண் அரசு கோரிக் கொள்ளும். அடுத்தடுத்த தேர்தல்களில் நம்முடைய பணத்தை வரியாகவும், இது போல பாரபட்சமான முடிவுகளாலும் பிடுங்கி அதை தமக்கு அனுசரணையாக வட இந்திய மாநிலங்களுக்கு கொட்டிக் கொடுத்து அல்லது அவ்வாறு காட்டிக் கொண்டு நம் நடுவண் அரசு தொடர்ந்து பல நாடாளுமன்ற தேர்தல்களை வெல்லும். நமக்கு சர்வாதிகாரத் தந்தையாகவும் வேறு சில தேர்தெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அன்பான தந்தையாகவும் ஜி இருப்பார். இப்போது நாம் மெல்ல மெல்ல அடிபணிய ஆரம்பிப்போம் என சர்வாதிகாரத் தந்தை நம்புகிறார். இதைத் தான் Stockholm syndrome என்கிறார்கள். 


இன்னொரு பக்கம் இந்த கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நமது ஜியின் தமது தேர்தல் செலவுகளுக்கான பெரும் தொகையை கட்டிங்காக வாங்கியும் விடுவார் என நினைக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் - சர்வாதிகாரத் தந்தையை பொறுத்தமட்டில் - அவருக்கே லாபம்! பிரதமர் தவறிழைத்து விட்டார், கொரோனா நேரத்தில் இந்த அரசு மிகப்பெரிய சொதப்பல்களை செய்து விட்டது, நாட்டை கைகழுவி விட்டது என்பது போன்ற விவாதங்கள் ஒரு பக்கம் ஊடகங்களில் நடப்பதை நான் ஏற்கவில்லை; ஏனென்றால் இந்த நடுவண் அரசு இதையெல்லாம் தெரிந்தே திட்டமிட்டே செய்கிறது. ஒரு கையில் - உலகில் வேறெங்குமே நடைபெறாத அளவில் - கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை இஷ்டத்துக்கு விலை ஏற்றி விற்க அனுமதி அளித்து, தன் கட்சியின் கஜானாவை ஜி கொழிக்க வைக்கிறார்; ஒரு கையில் பல லட்சம் கோடி பணம் என்றால் இன்னொரு கையில் இந்த சூழலை பயன்படுத்தி தன்னை ஆதரிக்காத மக்களை தண்டிக்கும் சாட்டையையும் வைத்திருக்கிறார். கொரோனா அவருக்கு பணமாகவும் சாட்டையாகவும் ஒரே சமயம் இருக்கிறது. மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல், மருந்து இல்லாமல், போதுவ சிகிச்சை வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள், சாகிறார்கள் எனும் குற்றச்சாட்டுகள் அவரைத் தொடாது; அவை முழுக்க எதிர்க்கட்சிகளின் தவறு, ஆளும் மாநில அரசுகளின் குற்றம் என அவரை ஆதரிக்கும் டிவி சேனல்கள் இப்போதே கூவத் தொடங்கி விட்டார்கள்!


நமது ஜி இப்போது கொரோனா கிருமியிடம் சொல்வதெல்லாம்: “கண்மணி அன்போடு காதலன் நான் ... நான் எழுதும் கடிதம் இல்ல ச்சே கடுதாசி, இல்ல கடிதமே இருக்கட்டும்.”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...