இந்த இரண்டாம் அலையில் நாடே போதுமான மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் சாகும் போது பிறர் கேளிக்கையில் ஈடுபட்டு, இயல்பு வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா இல்லை துக்கத்தில் மூழ்க வேண்டுமா எனக் கேட்கிறார்கள். அடுத்தவர் துயரப்படும் போது நாமும் கண்ணீர் சிந்த வேண்டுமா இல்லையா எந்த அடிப்படைக் கேள்வி.
பிறருடைய துன்பம், இழப்பு ஒரு தவிர்க்க முடியாத விபத்தென்றால் கண்ணீர் விடலாம். ஆனால் இப்போது நிகழ்பவை நிர்வாகப் போதாமையால், தொலைநோக்குத் திட்டம் இல்லாமையால் நிகழ்த்தப்படும் மறைமுகமான படுகொலைகள், மக்களுக்கு அவர்களுடைய பிரதிநிதிகள் செய்யும் அளப்பரிய துரோகம். இப்போது கேட்கிறேன்: ஒருவருடைய திட்டமிட்ட அக்கறையின்மையால், தடித்தனத்தால், திமிரால் மக்கள் செத்தால் நியாயமாக என்ன உணர்ச்சி வர வேண்டும்?
என் பதில்: மக்கள் கோபப்பட்டு அரசியல்பட வேண்டும்! ஒன்று திரள வேண்டும். அடித்துப் பிடித்து போராட வேண்டும் என சொல்லவில்லை. கோபத்தை மொழியில் மாற்றி உருவேற்றி வைத்திருக்கலாம், கைமாறப் படும் நெருப்பைப் போல அதை உயிருடன் பாதுகாக்கலாம்.
கோபம் ஒரு மோசமான உணர்ச்சி அல்லவா? அதைத் தவிர்த்து நாம் நிதானமாக அமைதியாக வாழ வேண்டும் என்றல்லவா மேலோர் சொல்லியிருக்கிறார்கள்? ஒரு தனிமனிதன், மற்றமை சமூகம் மீதெழும் கோபம் தன்னையே சுடும் நெருப்பு. அது மோசமானது. ஆனால் அடுத்தவர்களுக்காக அரசின் மீது எழும் கோபம் ஒரு நல்ல உணர்ச்சி. இந்த சமூகத்தில் துன்புறுவோர் நம் உற்றோர், அந்த துன்பத்தை ஏற்படுத்தும் மற்றமை மீது கோபம் கொள்வது தன்னுணர்வை கடந்து செல்லும் ஒரு உயர்வான மனநிலை. அது நம்மை ஒன்று திரள, செயல்பட, போராட வைக்கும்.
அழுவதோ தன்னிரக்கத்தில், குற்றவுணர்வில் செயலின்மையில் தள்ளி விடும்; கேளிக்கை இன்பத் தேடலின் போதாமையை நினைவுபடுத்தி மேலும் மேலும் கேளிக்கைகளை நாடச் செய்து களைப்பாக்குமே அன்றி துன்பத்தை கடக்க உதவாது.
அத்துடன், கண்ணீர் சிந்துவதோ கேளிக்கையில் ஈடுபட்டு அதை மறப்பதோ இந்த துன்பங்களை ஒரு அந்தரங்க நிகழ்வாக்கி விடும். இதை அந்தரங்க நிகழ்வாக்கினால் நோய்த்தொற்று தான் மக்களின் சாவுக்கு காரணம், அரசுக்கும் அரசதிகாரிகளுக்கும், தேர்தல் பிரச்சாரங்களை எட்டு கட்டமாக நடத்த அனுமதித்த தேர்தல் ஆணையத்துக்கும் இதில் எந்த சம்மந்தமில்லை என்றாகி விடும்.
உங்கள் பதில் என்ன?