இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலூன்றி நிற்கும்போது நிழல் மேல் தான் நிற்கிறோமா? காலைத் தூக்கி பார்க்கலாம் தான். இந்த யோசனையை நான் ஏற்கவில்லை. பூமியில் நிற்கும் போது எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல் என்பது தான் எனக்குத் தெரிய வேண்டும். (சுந்தர ராமசாமி கவிதைகள், பக். 78) சு.ராவின் இந்த கவிதை ஒருவிதத்தில் அவரது அரசியல் அல்லது தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைக்கிறது. சு.ரா ஒரு நவீனத்துவவாதி. பொதுவாக தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களை இரண்டாக பிரிக்கலாம்: 1) பொருள்முதல்வாதிகள் 2) கருத்துமுதல்வாதிகள். அல்லது இப்படியும் பிரிக்கலாம். 1) அரசியலுணர்வு கொண்டவர்கள் 2) அரசியலற்றவர்கள்.