இன்று காலையில் ஆந்தெனி ரோபின்ஸின்
பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சில வேலைகளை சிரமம் என எண்ணி தள்ளிப் போடுகிறோம்.
ஆனால் சிரமம் உண்மையில் அவ்வேலை மீது ஒரு எதிர்மறை உணர்ச்சியாக திணிக்கப்படுகிறதே அன்றி
எந்த வேலையும் அதன் அடிப்படையில் சிரமம் அல்ல. ஒருவேலையை எளிது, சுவாரஸ்யம் என யோசிக்க
பழகிக் கொள்ளலாம். பிறகு மெல்ல மெல்ல அதை செய்வதற்கான தயக்கம் போய் விடும் என்கிறார்.
அவர் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. இந்த விளம்பரங்கள் தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை
நமக்கு தேவை என நம்ப வைத்து நம் மேல் திணிக்கவில்லையா? அப்படி இருக்க நாமே ஏன் நம்மை
நம்ப வைக்க முடியாது? அதுவும் நமக்கு உபயோகமான விசயங்களுக்கு.
அதற்காக பிடிக்காத வேலையை பிடிக்கிறது
என நம்ப வைக்க முடியாது. பிடிக்காத மனைவி அல்லது கணவனை பிடிக்கிறது என பிடிவாதமாய்
ஏற்க முடியாது. ஆனால் பிடிக்காத விசயங்களை ஏன் தொடர்ந்து செய்கிறோம் என யோசிக்கலாம்.
அந்த முடிவை எடுக்க ஏன் தள்ளிப் போடுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? முடிவெடுத்த பின் நம்
நிலை இன்னும் மோசமாகாது, சிறப்பாகவே இருக்கும் என நம்மை நம்ப வைக்கலாம். அதன் மூலம்
தயங்கி தயங்கி நரகத்தை அனுபவிக்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறலாம்.
ஆந்தொனி ரோபின்ஸின் வாதம் ஒருவித
கருத்துமுதல் வாதம். அதாவது எல்லாம் மனமே, மனம் நினைத்தால் எதையும் மாற்றலாம் எனும் நம்பிக்கை.
இதில் மிகை உள்ளது தான். ஆனால் ஓரளவு உண்மையும் உள்ளது.
என்னுடைய ஒரு முக்கியமான ஆய்வுக்
கட்டுரை ஒன்றை அதன் சிரமம் காரணமாய் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரது
பேச்சை கேட்ட பின் இந்த “சிரமம்” ஒரு கற்பனை தான் எனப் புரிந்தது. உட்கார்ந்து எழுதி
விட்டேன். இன்றைய காலைப் பொழுது உபயோகமாய் ஆனது.
