அடிக்கடி இந்துத்துவர்கள் கேட்கிற கேள்வி: “மதசார்பற்றவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இந்துக்களை விமர்சிப்பது போல நீங்கள் தைரியமாய் பிற மதத்தவரை விமர்சிக்க முடியுமா?”. பெருமாள் முருகன் சர்ச்சையிலும் அதையே கேட்கிறார்கள்.
பதில்: ஒரு மதசார்பற்றவர் இந்து மதத்தை விமர்சிக்கையிலும் இந்து மதத்தின் சார்பில் நின்றே விமர்சிக்கிறார். என்ன தான் மதசார்பற்றவர் என்றாலும் அவர் இந்து மதத்திற்கு வெளியே போவதில்லை. இதை ஒரு சுய மத விமர்சனமாகவே கொள்ள வேண்டும். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பிற மதத்தவரை அவ்வாறு எந்த சார்பில் நின்று விமர்சிப்பது? மத சார்பற்றவர்கள் முழுக்க வெளியில் நிற்கும் பட்சத்தில் மட்டுமே கிறித்துவர்கள், இஸ்லாமியரை விமர்சிப்பது சாத்தியமாகும். அவ்வாறு முழுக்க மதத்திற்கு வெளியே நிற்பது சாத்தியமில்லை. விவாகரத்து பெற்ற பின் மனைவியை விமர்சிக்க முடியுமா? முடியாது. அது போல் தான் இதுவும். பெரியார் இந்து மதத்திற்கு உள்ளே நின்றே தான் அதை விமர்சித்தார். பெர்ண்ட்னெண்ட் ரஸனும் கிறித்துவத்திற்கு உள்ளே நின்று தான் Why I am not a Christian எழுதுனார்.
இந்த அடிப்படை லாஜிக் புரியாமல் மீண்டும் மீண்டும் அதையே கேட்காதீர்கள். குதிரை மீதிருந்து இறங்கி அதை ஓட்ட முடியாது. முட்டையை உடைக்காமல் குடிக்க முடியாது. ஒன்றை அதன் வெளியில் நின்று விமர்சிக்க முடியாது.