தாமரை இதழில் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி நான் எழுதி வரும் தொடரில் இம்மாதம் வடக்குமாசி வீதி ஒவ்வொரு ஊரிலும் அதன் பிரதான கலாச்சார மற்றும் உளவியல் அம்சங்களை வெளிப்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். பிரமுகர்களை சொல்ல வில்லை. இவர்கள் பெரும்பாலும் உதிரிகளே. உலோபிகள், சோம்பேறிகள், வன்முறையாளர்கள், குடிகாரர்கள், திருடர்கள், அடையாள வெளிப்பாட்டிற்காக கலை, விளையாட்டு போன்றவற்றில் ஒரு சில்லறை அளவில் ஈடுபட்டு வருபவர்கள் ... இப்படி. ஒரு வங்கி குமாஸ்தா அல்லது விவசாயியை விட ஊரில் அதிக பிரபலமானவர்களாக இவர்கள் இருப்பர். அதிகமும் வட்டப் பெயர்களால் அறியப்படுவார்கள். காலப்போக்கில் சிலரது நிஜப்பெயர் மறந்து அடையாளப்பெயர் நிலைக்கும். உதாரணமாக எங்களூரில் சிலர் எவரஸ்டு, சோப்பு என்றெல்லாம் அறியப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஊரின் பல்வேறு மித்துகளில் இவர்களின் கதைகளும் கலந்து விடும். இந்த கதைகள் பலநூறு தடவை வெவ்வேறு சந்தர்பங்களில் பேசப்பட்டு தொடர்ந்து வண்ணம் ஏற்றப்படும். இலக்கியத்தில் ஒரு ஊர் புனையப்படும் போது நிஜவரலாற்றை விட இத்தகைய வினோத உதிரி மனிதர்களே முக்கியமான இடம் பெறுவர். ஜேம்ஸ் ஜாய்ஸில் இருந்து கு...