Skip to main content

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -



பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும். அவரை சர்ச்சையின், பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளியமாதொரு பாகனில்இருந்து 2018இல் வந்தகழிமுகம்வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை, வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக, அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக, நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார், ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார்; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார். இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார். இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார். அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை, பாசாங்கை, மேம்போக்கான வீராப்புகளை, பாவனைகளை பெருமாள் முருகன் ஏகத்துக்கு பகடி செய்கிறார். அந்த இடங்களில் நகைச்சுவை அலையடித்து கண்சிமிட்டுகிறது

அதன் பிறகு குமராசுரரின் மகனான மேகாஸ். பதின் வயதிலிருக்கும் அவனுக்கு தன் அப்பாவின் உலகம் வெகுதொலைவில் இருக்கிறது. அப்பாவின் பயங்கள், பதற்றங்கள், தடுமாற்றங்கள் அவனுக்கு எரிச்சலாக, அலுப்பாக இருக்கின்றன. அப்பாவுக்கு டிஷ் டிவியில் இருந்து ஸ்மார்ட் போனை வரை பழக்கி தன் அருகாமைக்குக் கொண்டு வர முயன்று தோற்கிறான். அதன் பிறகு அவன் ஒரு போர்டிங் ஸ்கூலில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சேர்க்கப்படுகிறான். குறிப்பாக அங்கிருந்து தான் அவன் தன் தந்தையிடம் இருந்து முழுக்க உடைபட்டுப் போகிறான். தந்தைக்கு மகன் குறித்த பதற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மகனை கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போய் அவன் விரும்பும் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார் குமராசுரர். இங்கு தான் நாவலின் பிரதான முடிச்சு விழுகிறது - பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து அறுபட்டு விடுதியில் வாழ நேரில் மாணவர்கள் தாம் நினைவேக்கத்தில் தவித்துப் போவார்கள்; தனிமையுணர்ச்சியும் கல்வியின் நெருக்கடியும் அவர்களை கடும் மன அழுதத்தில் தள்ளும். பலர் மனம் சிதறுவார்கள். ஆனால் இங்கே இது நடப்பது மேகாஸுக்கு அல்ல, அவனது அப்பாவுக்கே (பெருமாள் முருகனின் நகைமுரணை இங்கே கவனிக்க வேண்டும்). இந்த இடத்தில் இருந்து மகன் அப்பாவாகிறார்; அப்பா மகனாகிறார். (இந்த பாத்திர இடமாற்றம் வாசகர்களுக்கு ஆரம்பத்தில் பிடிபடாது என்பதால் பத்து அத்தியாயங்களாவது தொய்வாகப் படும்.) 

ஒரு நாவலின் கதையை நகர்த்துவது பிரதான பாத்திரம் என்றால் அந்த பாத்திரம் செயலூக்கத்துடன் இருக்க வேண்டும்; இந்நாவலிலோ பெற்றோர் ஒரு கட்டத்தில் செயலற்று நின்று விடுகிறார்கள். அவர்கள் குழந்தையைப் போலாக, குழந்தை வாழ்க்கையின் லகானை கையில் எடுத்துக் கொள்கிறான். ஆனால் நாவல் 90% வரை பெற்றோரின் கண்ணோட்டத்தில் இருந்து நகர்வதால் கதையோட்டம் போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்டது போல துவளுகிறது. இதன் பின் வரும் முக்கியம் சம்பவம் மகன் தனக்கு சுமார் எழுபதினாயிரத்துக்கு மேல் மதிப்புள்ள செல்போன் வேண்டுமென அப்பாவைக் கேட்பது - இது ஒரு முக்கிய கதை முடிச்சு. இந்த முடிச்சு பின் மெல்ல மெல்ல சிக்கலானதாகிறது; செல்போனினால் விளையும் ஒழுக்க சீர்கேடுகள், குற்றங்கள், அதனால் சில மாணவர்கள் (gaming addiction) மனம் பித்தாகி வாழ்க்கையை தொலைப்பது, போர்னோகிரபி பார்ப்பது என வரும் செய்திகள் குமராசுரரை வெகுவாக அலைகழிய வைக்கிறது. இத்தகைய சூழலில் இன்று பெரும்பாலான பெற்றோர் ஒரு குழந்தையைப் போல் ஆகி நவீன காலத்தின் அசுரப் போக்குகளை புரிந்து கொள்ள முடியாது கைவிரித்து நிற்பதை குமராசுசர் பிரதிநுத்துவப்படுத்துகிறார்; ஆனால் இந்த காலத்தை ஏற்றுக் கொள்ளும் அபாரமான மன முதிர்ச்சி பதின்வயதினருக்கு எப்படியோ கிடைத்து விடுகிறது; அவர்கள் மனம் கலைந்து விடுவார்களே என கலங்கி நம் வயதானவர்களே வழிதவறி பித்தாகிறார்கள். அதாவது இளைஞர்களில் சிலருக்கு உள்ள முதிர்ச்சி வயதானவர்களில் பலருக்கு இல்லாமல் போகிறது. மகனுக்கு எதுவோ ஆகி விட்டது என பயந்து பயந்து குமராசுரருக்குஎதுவோஆகிப் போகிறது. நெருக்கடி அவரை  மன அழுத்தம் நோக்கித் தள்ளுகிறது. அலுவலகத்தில் கும்பாஸ் எனும் ஒரு இளநிலை கணக்கர் போர்னோ இணையதளங்களை இவருக்குக் காண்பிக்க வெளியே வந்தவருக்கு உலகில் எல்லாருமே நிர்வாணமாக இருக்கும் பிரமை ஏற்படுகிறது; இந்த அனுபவம் முதலில் பாலியல் காட்சிகளைக் காணும் பலருக்கும் ஏற்படும் ஜுரமே என்றாலும் அது ஒருவருக்கு நாற்பது வயதைக் கடந்த நிலையில் ஏற்படுவதே இந்நாவலின் பகடிச்சுவை. இது பின்னர் அவலச்சுவையாகவும் ஆகிறது; குமராசுரர் தன் உடம்பே நிர்வாணமாய் இருப்பதாய் நினைத்து போர்வையை சுற்றிக் கொண்டு அறையில் முடங்கிக் கொள்கிறார். தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். இருளும் ஒளியும் அவரை பயமுறுத்துகின்றன. கண்களைத் தொடர்ந்து கழுவிக் கொள்ளநிர்வாண ஜுரம்அகலுகிறது; ஆனால் கண்கள் வீங்கிக் கொள்கின்றன. இப்படி தொழில்நுட்ப பாதிப்பால் மகனுக்கு வர வேண்டிய மனவியாதி தகப்பனுக்கு வருகிறது; அவர் இதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதே நாவலின் இரண்டாவது கதைக்களத் திருப்பம்.


இங்கே நாம் ஒரு சுவாரஸ்யத்தை கவனிக்க வேண்டும் - குமராசுரரின் பாத்திரத்தில் துவக்கம் முதற்கொண்டே ஒரு சிறிய குழந்தைத்தனத்தை நாம் கவனிக்கிறோம். அவருக்கு தன் மகனிடம் ஒரு எளிய உரையாடலை நடத்தத் தெரியவில்லை. அலுவலகத்தில் நிர்வாக ரீதியான கடித பரிவர்த்தனை பண்ணுவதைப் போன்றே மகனிடமும் உரையாடுகிறார்; இது இருவருக்கும் இடையில் இடைவெளியை பெரிதாக்க குமராசுரர் தவித்துப் போகிறார். வாழ்க்கையை இயல்பாகக் காணும் தன் மனைவிக்கு மட்டும் தன் மகனுடன் இந்த இடைவெளியின்றி நீண்ட நேரம் எப்படி பேச முடிகிறது என்று அவருக்கு விளங்கவில்லை. காலையில் நடைபழகச் செல்லும் அவர் வாய்க்கட்டுப்பாடின்றி மோசமான எண்ணெயில் பொரித்த வடைகளைத் தின்று உடல்நிலையை மோசமாக்கிக் கொள்கிறார். வருடத்தின் முடிவில் அரசு தரும் நாட்காட்டிகளை கேள்வின்றி வாங்கிக் கொள்வதுடன் ஒவ்வொரு வருமும் அதை தன் அலமாரியில் சேகரித்து வைக்கிறார். மத்திய அரசு பணிகளை கணினிமயமாக்க அதைக் கண்டு பயந்து போகும் அவர் தன் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட கணினிப் பகுதிகளை ஒன்று சேர்த்து பயன்படுத்தாமல் அலமாரிக்குள் பூட்டி வைத்து, பழைய டைப்ரைட்டரிலே வேலைகளைத் தொடர்கிறார். இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு குழந்தைத்தனமான மங்குணியாகவே இருக்கிறார் குமராசுரர். குமராசுரர் எனும் இந்த பாத்திரம் நமக்கு சுஜாதாவின் மத்தியமர் பாத்திரங்களை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியாது; குறிப்பாகபல்லக்குநாடகத்தையும்குதிரைசிறுகதையையும். புதுமைப்பித்தனின்பால்வண்ணம் பிள்ளையையும்தான். இந்த பாத்திரங்களை இன்றைய பின்நவீன காலத்துக்கு நகர்த்திக் கொண்டு வந்து, இன்றைய கல்விப் பண்ணை கலாச்சாரத்தில் குழந்தைகள் மீது கற்பித்தலின் பெயரில் நடக்கும் கொடூரங்கள், தொழில்நுட்பம் அவர்களுக்கு திறந்து விடும் அபாரமான சாத்தியங்களும் குற்ற வாய்ப்புகளையும் அதனால் அவர்களின் கற்பனையும் வாழ்க்கைக்கான சுரணைத்தன்மை சுரண்டப்படுவதையும் பேசி, இந்த குழந்தைகளுக்கு எதிர்நிலையில் நம் மத்தியமர்களை வைத்து விட்டால் வருவதே குமராசுரரின் பாத்திரம்.


இங்கு பெருமாள் முருகன் ஒரு முக்கியமான அவதானத்தையும் செய்கிறார் - இன்று நாம் ஒருவர் மீது கொள்ளும் மிகை விருப்பமும் ஆட்கொள்ளலும் அவர்களின் எதிர்காலக் கனவுகள் பாழாகி விடக்கூடாதே பயமாகி, அந்த பயத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனும் போது அவருக்குப் பதில் நாமே பயந்து நடுங்கி மனம் சிதைந்து போவது நடக்கிறது. அதாவது நம் குழந்தைகளுக்கு எதுவெல்லாம் நடக்கக் கூடாதென நாம் விரும்புகிறோமே அதையெல்லாம் நாம் நமக்கே வருவித்துக் கொள்கிறோம். அவர்கள் இடத்தில் இருந்து நாம் வருந்தித் தவிக்கிறோம். அவர்களின் போதை அடிமை மனநிலை நம்மை ஆட்கொள்கிறது. இன்றைய super kid குழந்தைகள் தந்தையரின் ஆதாரத்தன்மையை, அர்த்தத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். தந்தையர் இதனை சமாளிக்கத் தெரியாமல் தம்மை குழந்தைகளுக்கு இணையாகக் கருதி அவ்வாறே நடக்கத் தொடங்கிட இது குழந்தைகளை மேலும் எரிச்சலூட்டுகிறது; அவர்கள் கூடுதலாக கலகம் பண்ண தந்தையருக்கு அவர்களை சமாளிக்கத் தெரியாமல் மிக குழந்தைத்தனமாக தம் குழந்தைகளிடத்தே நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த பின்நவீன இடக்குழப்பத்தை, அதன் நிலையற்ற தன்மையை, நிலையின்மையினால் ஒரு தந்தை கோமாளியாவதை பெருமாள் முருகன் சுட்டுகிறார். நம் காலத்து மத்தியமர் தந்தைகளின் இந்த நகர்வை இந்த நாவல் கோடிட்டுக் காட்டுவது ஒரு முக்கியமான அம்சம்.

சரி, கதையின் இறுதிக் கட்டத்துக்கு வருவோம்

 குமராசுரரை எப்படி குணப்படுத்துவது எனத் தெரியாமல் மனைவி மங்காசுரி தன் உறவினரும் குடும்ப நண்பருமான அதிகாசுரருக்கு போன் போட்டு உதவி வேண்டுகிறார். அவர் குமராசுரை அழைத்து தன்னுடன் சில நாட்கள் இருந்து போக வேண்டுகிறார். விளாடிமிர் போப் போன்று நாட்டுப்புறக் கதைகளில் ஆய்வு செய்த கோட்பாட்டாளர்கள் உலகம் முழுக்க கதைகளில் ஒரு குறிப்பிட்ட போக்கை அடையாளம் காண்கிறார்கள். நாயகன் பிரச்சனையில் மாட்டி விழிபிதுங்கும் போது ஞானம் பொருந்திய முதிய வழிகாட்டிகள் (wise oldman) தோன்றி அவனை தெளிவுபடுத்தி வழிகாட்டுவார்கள். அதிகாசுரர் போன்றோரை இப்படிக் காணலாம். அவர் நவீன தொழில்நுட்பத்தையும் மதுப்பழக்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கையும் எப்படி வாழ்க்கையை ரசனையாக்க பயன்படுத்தலாம், ஒவ்வொரு சந்தர்பத்தையும் சாத்தியப்படும் அளவுக்கு மகிழ்ச்ச்சிக்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டுமே ஒழிய, இறுக்கமாக ஒன்றை மட்டுமே எதிர்நோக்கி சின்ன சின்ன அழகுகளை சிலாகிக்காமல் விட்டு விடக் கூடாது என புரிய வைக்கிறார். அவருடன் இருக்கும் போதே குமராசுசர் அதிகமாய் சிரிக்கிறார்; தன் இறுக்கத்தில் இருந்து, கடிவாளம் போட்ட நோக்கில் இருந்து விடுபடுகிறார். அப்போது தான் அவர் ஒரு கழிமுகத்துக்குச் சென்று கடலும் ஆறும் சங்கமிக்கும் அபூர்வமான அந்த இணைவை ரசிக்கிறார்; சில அடிகள் வித்தியாசத்தில் நீர் ஒரு பக்கம் கரிக்கும், மற்றொரு பக்கம் இனிக்கும் என்பது இயற்கையின் அதிசயம் மட்டுமல்ல வாழ்க்கையின் அதிசயமும் தானே. இதற்கு அடுத்து குமராசுசர் மீண்டும் அந்த கழிமுகத்தைக் காண்கிறார். இந்த இரு அத்தியாயங்களையும் பெருமாள் முருகன் அபாரமான கவித்துவத்துவத்துடன் சிலாகிக்கத் தக்க வகையில் எழுதி இருக்கிறார். இதன் பிறகு ஊருக்குத் திரும்பிச் செல்லும் குமராசுரர் நிறைவான மனிதராகிறார் - அமைதியாக கனிவாக நடந்து கொள்கிறார்; அலுவலகத்துக்கு செல்கிறார்; வீட்டுக்கு வந்த பின் மேஜைக்கணினியை பயன்படுத்தி பாடல்களைப் பார்க்கிறார்; இரவில் மனைவியை தழுவிக்கொள்கிறார். வழக்கமான நவீனத்துவ நாவல்களில் மையப்பாத்திரத்தின் இந்த மலர்ச்சியே நிறைவாக இருக்கும். ஆனால் இதுஅசுரர்களின்கதையல்லவா, அதுவும் பின்நவீன அசுரர்களின் கதை அல்லவா! ஆக மற்றொரு திருப்பமும் வருகிறது. நான் இந்நாவலில் மிகவும் ரசித்த உரையாடல் தந்தை குமராசுரருக்கும் மகன் மேகாஸுக்கும் இறுதி அத்தியாயத்தில் வருவது. தந்தை மகனிடம் திரும்பத் திரும்ப அவன் அந்த விலைமதிப்பு வாய்ந்த செல்போனை வாங்கப் போவதில்லையா எனக் கேட்கிறார். அவனும்இல்லை வேண்டாம்என்கிறான். அவன் பொறுப்பு வாய்ந்த பிள்ளை - மொபைல் ஆப்புகளை உருவாக்குவதில் ஆரவம் கொண்டு அந்த 70,000 மேல் விலையுள்ள போனைக் கேட்ட அவன் இப்போது கோடிங்கின் ஆர்வம் திரும்பியதால் அது தேவையில்லை என்கிறான். அவன் மனம் முழுக்க கல்வி ஆர்வமே ஆக்கிரமித்துள்ளது. ஆனால் அப்பாவின் பதில் அவனை திகைப்பில் ஆழ்த்துகிறது; வாய் பிளந்து போகிறான் - “சரி நானே அந்த போனை வாங்கிக் கொள்கிறேன், இந்த பழைய போனை தூக்கி கடாசி விடுகிறேன்.” இப்போது நரகாசுரர் தன் மகன் எதுவாக மாறிடுவான் என பயந்தாரோ அதுவாகவே அவர் மாறி விட்டார்; அப்படி மாறியதே அவரது மன அழுத்தத்தில் இருந்து ஒரு மீட்சியாகவும் மாறி விடுகிறது. இந்த நகைமுரண் தான் இன்றைய வாழ்வின் ஆதார ஸ்ருதி

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...