விருதுகளைப் பற்றின என் கருத்து எப்போதுமே இதுதான் - நாம் ஒருவரைக் காதலிக்கிறோம், அதனால் நாம் அவருக்கு அடிமையாகி விடுவதில்லை.முத்தம் ஒரு பரிசு. விருதும் ஒரு பரிசு. நீ எனக்கு அடிமையாக மாட்டாயா எனும் கோரிக்கை அது. நல்ல எழுத்தாளர்கள் தம் தோளில் விழுந்த அழகிய கரங்களை புன்னகையுடன் விலக்கி விட்டு முத்தத்துக்கு நன்றி என்று கடந்துவிடுவார்கள். அவர்கள் எப்போதுமே முத்தமிட்டவர்களை எதிர்ப்பார்கள். மறுப்பார்கள். தம் பாதையில் தொடர்ந்தபடியே இருப்பார்கள். சில எழுத்தாளர்கள் எப்போதுமே மனைவியின் மடியில் பூனையாக இருக்கும் மனநிலை கொண்டவர்கள். அவர்கள் இன்னும் முத்தம் கொடு என்று பின்னாலே திரிவார்கள்.
ஆகையால் நாம் விருதை எதிர்க்கத் தேவையில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்மைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது. விருதை அச்சத்துடன் எதிர்கொள்ளத் தேவையில்லை. அரசு, தேசம், தேசியம் ஆபத்தானவை எனும் தாராளமய முற்போக்குச் சிந்த்னையின் விளைவே அவ்வச்சம். ஆனால் தேசமும் நம்மை உள்ளடக்கியதுதான். அது நம்மில் இருந்து விளைவதே. நாமே தேசத்தையும் தேசியத்தையும் அதிகார வர்க்கத்தையும் நம் மனத்திலும் உடலிலும் இருந்து உற்பத்தி செய்கிறோம். அதனாலே அது காதலுக்கும் காமத்துக்கும் நெருக்கமாக வரும் செயல்பாடு என்கிறேன். தேசியத்தின் எழில்மிகு அதரங்களிலே விருது மலர்கிறது. சுகந்தமாக, இனிமையாக இருக்கும். அதன்பின்னுள்ள கூர்மையான பற்களைக் கண்டு நாம் அஞ்சுவதால் பயனில்லை. நாம் அதை விளையாட்டாகக் கையாண்டாலே அது அடங்கிவிடும்.
சாகித்ய அகாடெமியோ பொற்கிழியோ கொடுத்தால் வாங்கிப் பையில் போட்டுக் கொள்வோம். வீடு, செல்வாக்கு, பயணம் என முடிந்த போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் ஒரு முத்தத்துக்காக வாழ்நாள் அடிமையாக முடியாது, தாலி கட்டி குடும்பம் எல்லாம் நடத்த முடியாது என தேசத்தை நோக்கிச் சொல்லி விடுவோம்.
விருது நம்மை அங்கீகரிக்கலாம், நாம் அதை வைத்து விளையாடிவிட்டு விட்டுவிடலாம்.
பின்குறிப்பு: எல்லாவற்றையும் நேரடி அரசியலாகப் பார்ப்போருக்கு நான் சொல்வது புரியாது.