நவீன வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் பெருந்துன்பங்கள் என்று இரண்டைச் சொல்வேன்:
1) நம் வாழ்க்கை மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. பணம், சுற்றுச்சூழல், குடும்ப அமைப்பு, உறவுகள், உற்பத்தி உறவு என எதிலும் நமக்கென ஒரு முகமையோ அதிகாரமோ இல்லை. நாம் அதிலெல்லாம் இருக்கிறோமோ அல்லது மாயாவியாகத் திரிகிறோமா என்பதே தெரியவில்லை. இதனால் சதா ஒருவிதப் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கிறோம். அதைப் போக்க வன்முறை, போதை, கேளிக்கை, துய்ப்பு என உள்ளுக்குள் குறுகிக் கொண்டே போகிறோம், வெறுப்பாலும் கசப்பாலும் நிரம்பியிருக்கிறோம். நமது கொண்டாட்டங்கள் தப்பித்தல் மட்டுமே. அசலான நிம்மதியான தன்னம்பிக்கை ததும்பும் கொண்டாட்டங்கள் அல்ல.
2) நம் திறமைக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். நீங்கள் டெலிவரி பாய்ஸைப் பாருங்கள். விற்பனைப் பிரதிநிதிகள், சேவைத் தொழிலில் உள்ளோரைப் பாருங்கள். அவர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேலைக்கு அதனளவில் முன்பிருந்த மரியாதை இன்றில்லை. வேலையென்பது அது ஈட்டித் தரும் பணத்தினால் மட்டுமே மரியாதையைப் பெறுகிறது. ஒரு டாஸ்மாக்கை நடத்துபவர் ஒரு ஆசிரியரை விட பலமடங்கு மேலானவர் இங்கு. சவுக்கு சங்கர் அவருடைய சொத்து மதிப்பினாலே ஒரு அரசியல் போராளியை விட அதிக அதிகாரமும் மதிப்பும் பெற்றவர். மோசடிப் பேர்வழிகள் தம் அதிகாரத்தாலும் பணத்தாலும் கொண்டாடத்தக்கவர்கள் ஆகிறார்கள். இப்படி எல்லாமே தலைகீழாகி விட நாம் நம் வேலையில் இருந்து வேலையைச் செய்யும் முன்பே வெளியேற்றப்படுகிறோம். அவநம்பிக்கையுற்று வேலையை அசிரத்தையாகச் செய்வோர் பெருகி விட்டனர். இது தமக்கான வேலையல்ல எனும் எண்ணமே அவர்களைச் செலுத்துகிறது.
இக்காரணங்களாலே பெரும்பாலானோர் ஒருவித சமூக மனவியாதிக்கு ஆட்படுகிறார்கள். கடும் வறுமையால் மக்கள் துன்புறும்போது அது பசிப் பிரச்சினை. போரினால் நிலையழியும்போது அது அழிவின் பிரச்சினை. ஆனால் தன்னிலிலும் பிறரிலும் பொருந்த முடியாமல் போகும்போது, வேலை, குடும்பம், சமூகம் எல்லாமே மனிதர்களை வெளியேற்றும்போது அது சமூகப் பைத்தியமாக வெடிக்கிறது. இந்தப் பைத்தியத்திற்கு மருந்து மாத்திரைகள் தீர்வல்ல.
சமூகப் பொருளாதார, சமூகக் கலாச்சார தீர்வுகளே நமக்குத் தேவை. மனிதர்களுக்கு தாம் வாழும் வெளியில் - அகவெளியிலும் புறவெளியிலும் - உரிமையும் முகமையும் வேண்டும்.