நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி மட்டையாடியதைப் பார்த்தபோது அவர் மீது எனக்கு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகமான மரியாதை ஏற்பட்டது. அவரது வயதுக்கும் தொழில்வாழ்க்கையில் உள்ள சரிவுக்கும் இது ஒரு மகத்தான சாதனை. இழப்பதற்கு ஏதுமில்லை என்பதாக ஆடினார். தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறந்த இடத்தில் இருக்கிறார் - என்னை மிகவும் கவர்ந்தது லாங் ஆனிலோ கவர் பகுதியிலோ சிக்ஸர் அடிக்க அவர் முன்பைப் போல இறங்கி வர இப்போது தேவையிருக்கவில்லை என்பது. அவரது இடதுகால் முன்னே வர பந்தின் திசைக்கு ஏற்ப அவரது காலும் தோளும் சரிய தலை மிகச்சரியான இடத்தில் இருக்க பந்தை அந்த நிலையில் இருந்து தரையோடு விரட்டவோ தூக்கி சிக்ஸர் அடிக்கவோ முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாகப் பந்தை கணித்துத் தயாராகி விடுகிறார். இந்த வயதில் ரோஹித் நன்றாக ஆடினாலும் அவரால் கூட இவ்வளவு மின்னல் வேகத்தில் தயாராக பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருவர் ஆடும்போது அவர் பந்து வீச்சாளரின் மனதுக்குள் புகுந்து அவரைக் கட்டுப்படுத்துவதான ஒரு பிரமை ஏற்படும். இதற்கு முன்பு சச்சினும் லாராவும் இப்படி ஆடிப் பார்த்திருக்கிறோம். டிவுல்லியர்ஸும் கூடத்தான். அவர்களுக்கும் இவருக்கும் ஒரே வித்தியாசம் அவர்களால் மட்டையின் கிரிப்பை நினைத்த நேரத்தில் மாற்றி ஆடப்ப்போகும் ஷாட்டை மாற்ற முடியும் என்பது. ஒரே நிலையில் இருந்து நான்கு ஷாட்களை ஆட முடியும் என்பது. கோலியும் அந்த இடத்துக்கு வந்தால் அபாரமாக இருக்கும்.
இன்னும் இரண்டாண்டுகள் இப்படி ஆடினால் நிச்சயமாக ஐ.சி.சி ரேட்டிங்கில் மேலே போய்விடுவார். அவரால் இப்போதைக்கு டெஸ்டிலும் ஆட முடியும் என்றாலும் அது அவரது ஆட்டத்தின் துணிகரத்தை, சரளத்தை குறைத்துவிடும். பந்தை ஆப் ஸ்டம்புக்கு மேல் விடுவதிலே கவனம் செலுத்தி ஒருநாள், டி20யில் பின்னுக்குப் போய் விடுவார். அடுத்த இரண்டாண்டுகளிலும் அவர் வெள்ளைப் பந்தில் கவனம் செலுத்துவதே நல்லது. அதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் அடைய முடியும். எளிதாக 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடியும். இந்த தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தைப் பார்க்கையில் வரப்போகும் ஐ.பி.எல்லில் ரன்களை வேகமாகக் குவிக்கப் போகிறார் என்பது தெரிகிறது.
ஒருவரால் ஸ்டம்புக்கு குறுக்கே விளாசாமல் இப்படி மின்னல் வேகத்தில் ஆட முடியும் எனப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. வயது என்பது ஒரு கற்பனைதானே, உடற்தகுதி இருந்தால் எதுவும் முடியும் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சச்சினின் மிகச்சிறந்த ஆட்டத்தை 35 வயதுக்கு மேல் தந்ததைக் கண்டது மீண்டும் கண்முன்னே வருகிறது. இந்த வயதில் அவர்களால் தம் ஆட்டத்தை எளிமைப்படுத்தி அதிலொரு துல்லியத்தைக் கொண்டு வருவதும் முடிகிறது. மிகக்குறைந்த ஆற்றலை ஒற்றைப் புள்ளியில் குவித்து சாதிக்கத் தெரிகிறது. கிட்டத்தட்ட குழந்தைகளைப் போல ஆடுகிறார்கள். சரியாகப் பந்தின் திசையைப் பிடித்து அதை அடிப்பதில், இன்பம் அடைவதில் கவனம் செலுத்துகிறார்கள். வயதில் பின்னுக்குப் போய் விடுகிறார்கள். ஆட்டதை விட இதைக் கவனிக்கவே மனம் துள்ளுகிறது.
(7 டிசம்பர் 2025)