மிகப்பெரிய தர்க்க ஓட்டை கொண்ட கதை இது. ஆனால் இதை எப்படி இதன் திரைக்கதை எழுத்தாளர்கள் கௌதம் மேனனை நம்ப வைத்து, அவரும் எப்படி மம்முட்டியை நம்ப வைத்து படமாக எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இயல்பாகவே என்னதான் முயன்றாலும் இப்படம் பல்லிளித்தே ஆக வேண்டியிருக்கும் என்பதால் சொதப்பி விடுகிறது.
அதேநேரத்தில் பெரிய வசதியோ ஆரோக்கியமோ இல்லாத ஒரு சாதாரண தனியார் துப்பறிவாளரின் அன்றாட உலகை, அவரது முயற்சிகளின் சாதாரணத்துவத்தை நன்றாகக் காட்டியுள்ளதை, அதிலுள்ள பகடியை ரசித்தேன். நாயகனான டொமனிக் (மம்முட்டி) தொடர்ந்து பொய் சொல்பவர். ஒரு காட்சியில் சொல்லும் காரணத்தை இன்னொன்றில் மாற்றிச் சொல்வார். அப்போது நாம் அவர் மீது இரக்கம் கொள்ளத்தக்க வகையில் அவரது பாத்திர அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கௌதம் மேனனுக்கு தன் பாத்திரங்கள் ரத்த சக்கரை நோய் உள்ளோராக காட்டப் பிடிக்கும். இதில் மம்முட்டி long acting இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. தன்பாலின ஈர்ப்பு அவர் படங்களில் எப்போதுமே எட்டிப் பார்க்கும், எதிர்பாலின உறவு கசப்பிலோ இழப்பிலோ முடியும். இப்படத்திலும் இவ்விசயங்கள் உள்ளன.
இப்படத்திற்கு முக்கியத்துவம் அற்ற ஒரு காட்சிதான் படத்தைப் பார்த்தபின்னரும் என் மனத்தில் தங்கி நிற்கிறது. அதன் பொருந்தாத்தன்மைதான் காரணம் - புலன்விசாரணை தீவிரமாகிக் கொண்டிருக்கும்போது டொமொனிக்கும் அவரது உதவியாளரும் பேசிக் கொள்கிறார்கள். டொமொனிக் கேட்கிறார்: நாம் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? உதவியாளர்: எனக்கும் வேண்டும் சார்.
நான் யோசித்தேன்: ஆண்கள் இப்படி மனம் சலித்தால், பதற்றம் மிகுந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்களா? இல்லை. தேநீர், காபி, பியர், சிகரெட்தான். நான் என்றுமே என் நண்பர்களிடம் ஸ்வீட் சாப்பிடுவோமா, ஐஸ்கிரீம் பார்லர் போவோமா என்றெல்லாம் கேட்டதோ அப்படிச் சாப்பிட்டதோ இல்லை. நான் ஆண்களுடன் சாக்லேட் பகிர்ந்துகொண்டதும் இல்லை. பெண்கள்தாம் ஐஸ்கிரீம், சாக்லேட் வெறியர்கள். அதற்காக இப்படி ஐஸ்கிரீம் அடிமையான ஆண்கள் இல்லையென்றில்லை. என் கல்லூரிக்கு வெளியே நான் இப்படி கோன் ஐஸ்கிரீமை சப்பிக் கொண்டு நடக்கும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்த சிகரெட், தேநீர், ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் பண்பாட்டு உருவகங்கள். நாம் அவற்றைப் பாவிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விதமாக நம்மை அப்போது மாற்றிக் கொள்கிறோம். இப்படத்தில் மம்முட்டி ஐஸ்கிரீமை கரண்டியில் எடுத்து நக்கும் இடங்களில் அவர் மற்றொரு விதமாக மாறிப் போகிறார். அது படத்தின் தொனியை மாற்றுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் அவர் தான் அதுவரை நேசித்தது பெண் வேடமிட்ட ஆணென்று தெரிந்துகொண்டு சில வினாடிகள் சங்கடப்படுகிறார். சேலையில் அழகான பெண்ணாகத் தெரியும் அவனுடன் சண்டை போடுகிறார். அப்போதும் கூட அவன் முகத்தில் முஷ்டியால் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார். இதையெல்லாம் எதற்குப் பார்க்கிறோம் என்று நம்மையும் யோசிக்க வைக்கிறார். எனக்கு இந்த ரெண்டு காட்சிகளும் ஒன்றுதாம் எனத் தோன்றுகிறது.
இந்தக் கதையைச் சொல்லி எப்படி மம்முட்டியை கௌதம் மேனன் எப்படி ஏமாற்றினார் என்பதை விட டொமனிக் எப்படி அவ்வளவு நாட்களும் ஒரு ஆணைப் பெண் என்று நம்பினார் என்பது குறைவாகவே அதிர்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான காத்திரமான அமைப்பு கொண்ட பாத்திரம் என்றால் நாயகர்கள் உணர்ச்சிவரப்பட்டு ஏற்றுக்கொண்டு அதைத் தயாரிக்கவும் முன்வருவார்கள். குழந்தைகளுக்கு எதிலும் இனிப்பை, சாக்லேட்டைக் கலந்து ஏமாற்றி சாப்பிட வைப்பதைப் போல.