"ஆண் பாவம்” ஒரு சுவாரஸ்யமான நீதிமன்ற நாடகம் (court room drama). ஆண்களின் தரப்பை எடுத்துப் பேசுகிற சில படங்களில் “ஆண் பாவத்துக்கு” முக்கியமான இடம் உண்டு. இன்று சமூகத்திலும், சமூகவலைதளங்களிலும், சட்டத்திலும் ஆண்களுக்குப் பாதகமாக உள்ள விசயங்களை ஆற்றல் மிக்க வசனங்களால் எடுத்து வைக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேலு. ஆண்கள் குடும்பத்துக்காக கடுமையாக உழைத்து தியாகங்கள் செய்து ஒரு பட்டுப்புழுவின் கூட்டைப் போல குடும்ப வாழ்க்கையை உருவாக்கும்போது மனைவி “நீ என்னுடன் நேரம் செலவிடவில்லை” எனக் கூறி பிரியக் கோருவது, சொந்தப் பிள்ளையை அவரிடம் இருந்து பறிப்பதுடன் அவரை ஒருபோதும் பார்க்கவிடாமல் தடுப்பதைச் சொல்லும் இடம் என் கண்களில் நீரை வரவழைத்தன. நான் என் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லவியையும் பார்த்தேன். அவளும் அழுதுவிட்டிருந்தாள். ஏனென்றால் இதில் ஓரளவுக்கு உண்மை உள்ளது - ஒன்று இன்றைய வேலை நேரம் அதிகம், மனம் களைத்துக் காலியாகும் அளவுக்கு உழைக்க வேண்டும். வீட்டுக்கு வந்ததும் கணவனால் சாக்லேட் பாயாக மாறிக் கொஞ்ச முடியாது. பேசும் சக்தி இருக்காது. அதைவிடப் பெரிய சிக்கல் இதையெல்லாம் மனைவியிடம் வெளிப்படுத்திப் புரிய வைக்கும் மொழி ஆற்றலும் ஆணுக்குக் குறைவே. அவன் அமைதியாக இருப்பான் அல்லது கத்திக் கூப்பாடு போடுவான் அல்லது டிவி பார்ப்பான். இதெல்லாம் மனைவியை நிச்சயம் எரிச்சல்படுத்தும். அவள் தன்னை அவனிடத்தில் வைத்துப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். இயல்பாகவே மொழியாற்றலோடு தொடர்புள்ள மூளைப்பகுதிகள ஆணுக்கு வலுவாக இருக்காது. பெண்களுக்கு இயல்பிலேயே இப்பகுதிகள் வலுவாக இருப்பதாலே அவர்களால் உணர்வுகளை வெளிப்படுத்தவும், அடுத்தவர்களைக் கையாளவும் நன்றாக வரும் (இதில் விதிவிலக்குகள் உண்டு). நீங்கள் சங்க இலக்கியத்தைப் படித்தாலும் மனச் சஞ்சலத்தின், கலக்கத்தின் வெளிப்பாடுகளைப் பெண்களின் தரப்பில் இருந்தே அதிகம் சொல்லியிருப்பார்கள். ஆண்கள் இவ்விசயத்தில் நிஜமாகவே பாவம் தான் - அவர்கள் இத்திறனை வளர்க்க வேண்டும். பெண்களும் இதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால் அன்பை மொழியில்தான் காட்ட வேண்டும் என்றில்லையே. அக்கறையும் கூட அன்புதான். உழைப்பதும்கூட அன்புதான். நம் தந்தையின் காலத்தில் இருந்தே ஆண்கள் தம் வருமானத்தைப் பெரும்பகுதியாகக் குடும்பத்துக்காகவே பயன்படுத்துகிறார்கள், நல்ல ஆடைகள் அணிவதற்கோ உணவை உண்பதற்கோ பயன்படுத்துவதில்லை என்பது அப்பட்டமானது. ஆனால் நாம் அன்னையின் தியாகத்தைச் சொல்லும் அளவுக்கு இதை வலியுறுத்துவதில்லை. படத்தில் இதைச் சொல்லும் வசனங்கள் அருமை (கதை, திரைக்கதை, வசனம் சிவகுமார் முருகேஷனும் கலையரசன் தங்கவேலுவும்).
நாயகி சக்தியின் பாத்திர அமைப்பு மிக நன்றாக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது - அவள் தன் கண்டிப்பான தந்தையின் கராறான கண்காணிப்பில், கடிதலின் கீழ் வளர்கிறாள். அவளை ஒரு ஒழுக்கமான வளர்ப்பு நாயைப் போலத்தான் வளர்க்கிறார்கள். பெண் பார்க்க நாயகன் சிவா வரும்போது அவளைத் தரையில் அமரச் சொல்வது அதனால்தான். அப்போது சிவா அவளை நாற்காலியில் அமரச் சொல்ல அவள் தயங்கியபடி நிற்கிறாள். அங்குள்ள கூட்டமே சிவாவின் அணுகுமுறைப் புரியாமல் விழிக்கிறார்கள். அதன்பிறகு அவள் அவனிடம் தனிமையில் ஒன்று கேட்கிறாள் - வீட்டில் உள்ள ஆண் என்ன சொல்வானோ எனும் பயமின்றி அவள் நிம்மதியாக இருக்க வேண்டும். அதாவது கொஞ்சம் சுதந்திரமுள்ள ஒரு வீடும், எரிந்து விழாத கணவனும்தாம் அவளது எதிர்பார்ப்பு. ஆனால் அவள் எதிர்பாராத சுதந்திரமும் சமத்துவமும் அவளுக்கு முன்மொழியப்படுகிறது. அவன் அவளுடன் புகைபிடிப்பது, சமமாகப் பாவிப்பது, பேசுவது, அவளுக்க்கு அவன் தன்னை மறுக்க அனுமதி கொடுப்பது எல்லாம் அவளுக்குப் புதிய அனுபவங்கள். அவள் வீட்டில் ஒருபோதும் கிடைக்காத புது கருத்துருக்களான சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் திடீரென வழங்கப்படுகையில் அவள் திகைக்கிறாள். அதுவரை அழுத்தி வைத்திருந்த கோபம், வெறுப்பு, சீற்றம் எல்லாம் இந்த சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிஜம்தானா, அதை வலியுறுத்தி நிச்சயமாகப் பாவிப்பது எப்படி எனும் பதற்றத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. அதனாலே அவள் தொடர்ந்து தன் கணவனைச் சோதித்தபடியே இருக்கிறாள். அவன் ஆரம்பத்தில் எல்லா முற்போக்காளர்களையும் போல போலியாக மிகையாக இந்த கருத்துக்களை வலியுறுத்தி அவளிடம் நற்பெயர் வாங்கப் பார்க்கிறான். ஆனால் உள்ளுக்குள் அவனும் முழுக்க இவற்றை நம்பவில்லை - இவற்றை நம்பினால் திருமண உறவே, அமைப்பே தகர்ந்து போக வேண்டும். உ.தா., ஒரு அமைப்புக்குள் பரஸ்பரம் கட்டுப்பட்டிருக்கும் இருவர் எப்படிச் சுதந்திரமாக இருக்க இயலும், சுதந்திரம் இல்லாத இடத்தில் நீங்கள் அடிமையெனும்போது அங்கே சமத்துவமும் இல்லையே, சமத்துவம் இல்லாத போது நீங்கள் சக-அடிமைதானே ஒழிய சோதரர் அல்லர். ஆகையால் இது ஒரு லட்சிய பாவனை. இது விரைவில் கலையும். அப்போது சக்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள். மேலும் அதிகமாக அவனைச் சோதிக்கிறாள், விளைவாக இருவருக்கும் இடையில் வாக்குவாதமும் உணர்வு மோதலும் வலுக்கின்றன. அதனால் அவர்கள் பிரிவார்களா இல்லையா என்பதே மிச்சக் கதை.
இந்த கோணத்தில், சக்தியின் பாத்திரம் அப்பாவின் குட்டி இளவரசி (dad’s little princess) தொன்மத்தின் எதிர்-வடிவம் - அவள் ‘அப்பாவின் குட்டி அடிமை’. அவள் மணமுடித்து வந்ததும் தன்னால் தன் வீட்டில் அரங்கேற்ற முடியாத ஒவ்வொரு கலகமாகச் செய்து பார்க்கிறாள். ஏனென்றால் அவளுக்கு சிவா ஒரு கணவன் மட்டுமல்ல, அவன் அவள் அப்பாவின் நகல். அழகான மென்மையான நகல். அவள் அந்நகலுடனே மோதுகிறாள். ஆனால் அவனுக்குத் தான் ஒரு நகலாகப் பார்க்கப்படுவது தெரியாது. அவன் அற்புத விளக்கத்தைத் தெரியாமல் உரசி பூதத்தை வெளிவிட்ட அலாவுதீனைப் போலாகிறான். பூதம் தான் பூதமாக நடத்தப்படாவிட்டால் அவனைக் கொன்றுவிடும். அவன் அவளைத் திறந்துவிட்ட பின்னர் அவள் அவனைத் தன் தந்தை அத்தனை நாட்களாக அடக்கி ஒடுக்கியதற்குப் பழிவாங்கத் தொடங்குகிறாள். இதையெல்லாம் படம் வெளிப்படையாகப் பேசுவதில்லை - கதையின் பின்னணியில் நுட்பமாக அரங்கேறும் உளவியல் இது.
இந்த கோணத்தில் பார்க்கையில் அவளது அப்பா (அவள் சார்பாக வக்கீல் கொடுக்கும்) அவளது புகாரால் கைதாவது ஒரு திருப்புமுனை. அதன்பிறகு அவளால் தன் வீட்டுக்குப் போக முடியாது. அவள் முழுக்க தற்சார்பானவளாகிறாள். அவள் ஒரு அழகு நிலையத்திற்கு வேலைக்குப் போய் கஷ்டப்படுகிறாள். திட்டு வாங்குகிறாள். நடைமுறை உலகின் கசடுகளை அறிந்துகொள்கிறாள். படத்தின் முடிவில் சக்தி நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெறுவதற்காக நிற்கும்போது அவள் அப்பாவின் குட்டி இளவரசி அல்லள். அவள் ஒரு சுயமனுஷி. தன் கணவன் மனம் திறந்து நீதிபதி முன் தன் தவறுகளை ஒப்புக்கொண்டு தன் காதலை அவளிடம் தெரிவிக்க அவனை ஏற்றுக் கொண்டு தனக்கு விவாகரத்து வேண்டாம் என்கிறாள் - முதன்முதலாக அவள் பிறருக்காக அன்றி, அழுத்தப்பட்ட தன் உணர்வுகளால் தூண்டப்படாமல், பிறருடைய தாக்கத்தினால் அல்லாமல் சுயமாக முடிவெடுக்கிறாள். ஊரோ உலகமோ தெரியாமல் இருந்த, பேச்சுக்கு நூறு தடவை உரிமை, சமத்துவம் என்று பேசினால் தான் அறிவாளி என்று வெள்ளந்தியாக இருந்த அவள் தெளிவாகச் சிந்திப்பவளாகிறாள். முதிர்கிறாள். ஆனாலும் அவள் முழுக்க மாறியதாகக் காட்டினால் எதார்த்தமாக இருக்காது என்பதால் படத்தின் முடிவிலும் அவள் சிவாவுடன் அற்ப பிரச்சினைக்காக வாதிடுவதாகக் காட்டுகிறார்கள் (இயக்குநர் ஷங்கர் தன் படத்தின் நாயகர்களையும் இப்படித்தான் முடிவில் முழுக்கத் திருந்தாமல் இருப்பதாகக் காட்டுவார் - “முதல்வன்” ,“அந்நியன்”, “எந்திரன்”).
விடுதலை என்றொரு இயக்கத்தை நடத்தும் பாரதி எனும் பாத்திரமும் (அனுபமா குமார்) நன்றாக வந்துள்ளது - அவர் பயங்கரமான பெண்ணியப் போராளி. ஆனால் வீட்டில் தன் கணவருக்கு காபி தயாரித்துக் கொடுக்கிறார். கணவரிடம் பிரியமாக இருக்கிறார். தன்னை மதித்து நேசித்து தனக்காக உழைக்கும் அவருக்காக நான் இதைச் செய்தால் என்ன என்று நாயகியிடம் அவர் கேட்கும் காட்சி முக்கியம். அவர் அதை தன் காதல் என்கிறார். வீட்டு வேலை அவமானமானது எனும் ஒரு குப்பையான எண்ணம் பெண்ணியம் தெரியாதோரால் பரப்பப்படுகிறது. அதனாலே அவர்கள் வீட்டு வேலைக்குச் சம்பளம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். அவர்கள் பாலுறவைக் கூட உழைப்பாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொன்றையும் மரியாதையுடன் கேட்டுப் பெற்று அதற்கு ஈடு செய்யவும் வேண்டும் என்று அவர்கள் கோரும்போது குடும்ப வாழ்க்கையே ஏதோ தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதைப் போல ஆகிவிடுகிறது. மிதமிஞ்சிய தற்சார்பை விரும்புவோருக்கு குடும்ப அமைப்பே தேவையற்றது. ஏனென்றால் அங்கு சுதந்திரமே கிடையாது. அங்கு அன்பின் பெயரால் பரஸ்பரம் நாம் சுரண்டப்படுவதை ஏற்றுக்கொள்கிறோம். மகிழ்ச்சியாகத் துன்பப்படுகிறோம். இதை பகுத்தறிவுடன் பார்த்தால் புரியாது. இப்படம் இவ்விசயத்தை நன்றாகக் கையாண்டுள்ளது - கிடைத்த இடங்களில் எல்லாம் இந்த நேரடி ‘அரசியல்படுத்தலை’ மூக்கில் குத்திவிட்டு அன்பை, தியாகத்தை வலியுறுத்துகிறது.
சில காட்சிகளின் நகைமுரண் பிரமாதம் - சக்தி தன்னை ஆணுக்கு நிகராகக் காட்ட சிகரெட் புகைக்க முயல்வது, அம்பேத்கர் போர்பந்தரில் பிறந்ததாக நம்புவது, தன்னைக் கண்டிக்க வக்கீல் வீட்டுக்கு வரும் தன் அப்பாவையே காவல்துறையினரால் கைதுபண்ண வைப்பது, அதை நினைத்து மனம் வருந்தி அழுவது, கிராமத்தில் நடக்கும் திருமண விழாவில் சற்று கிளாரமாக வந்துவிட்டு, அது தன் உரிமை, அதைத் தவறாகப் பார்க்கப்படுவதுதான் தவறு என்று வாதிட்டுவிட்டு தன் நண்பர்களின் கடைத்திறப்பு விழாவின்போது தன் கணவர் கௌரவமான உடையில் மட்டுமே வரவேண்டும் என எதிர்பார்ப்பது … இப்படி ஒரு நீண்ட பட்டியலே போடலாம்.
“சாய்ஸ்” எனப்படும் விருப்பத் தேர்வை படத்தில் பயன்படுத்தும் இடமெல்லாம் நகைமுரண் மிளிர்கிறது - தன் அதிகப்பிரசிங்கத்தனத்தை, சமூகவலைதள அபத்தங்களை நாயகி தன் “சாய்ஸ்” என்பது அதன்பிறகு வீட்டைவிட்டு வெளியேறுவதையும், விவாகரத்துக் கோருவதையும் தன் தேர்வு என்பது, கடைசியில் அவள் சுயமாகவே விவாகரத்து மனுவை நிராகரித்து கணவனுடன் இணைந்து வாழ நினைக்கையில் வக்கீல் அவளிடம் “அது உன் தேர்வு” என்பது குத்துச்சண்டையில் மூக்கில் குத்துவதைப் போல இருக்கிறது. பரஸ்பர சம்மதத்துடனான விவாகரத்து என்பதையும் கூட இப்படத்தில் இன்னொரு பொருளில் காட்டுகிறார்கள் (கொஞ்சம் “மௌன ராகம்” மோகனை நினைவுபடுத்துகிறது).
இயக்குநர் கலையரசன் தங்கவேல் இதைப் பார்க்க மனதை வருத்தாத, கசப்பில் மனங்குமுற வைக்காதப் படமாக எடுக்க நினைத்திருக்கிறார். அதனாலே அவர் சிவா, சக்திக்கு இடையிலான மோதலுக்கு அற்பமான எளிய காரணங்களை வைக்கிறார். உண்மையில் இம்மாதிரி வழக்குகளில் இரு தரப்பும் மிக மோசமாக நடந்துகொள்வார்கள், காயப்படுத்துவார்கள், கொத்தடிமைகளாக எதிர்த்தரப்பை நடத்துவார்கள், நீதிமன்றம் முழுக்க முழுக்க வதைக்கூடமாக இருக்கும். ஆனால் இது ஒரு feel good படமென்பதால் நீதிமன்றக் காட்சிகள் எதார்த்தமாக இல்லை. குடும்பநல நீதிமன்ற நடைமுறைக் காட்டினால் எந்த படமும் யூத வதைமுகாம் கதையாகிவிடுமே. அதனால் இப்படத்தில் எதார்த்தத்தைத் தேடலாகாது - இது ஒரு பகடிப் படம். சில கருத்துக்களைப் பகடி செய்யவும், இன்றைய ஆண்-பெண் உறவு நிலையைப் பரிகசிக்கவும் எடுக்கப்பட்ட படம். திரைக்கதையில் சில பல பிழைகள் இருந்தாலும் நல்ல படம்.