எழுதுவதிலேயே சுலபம் பேய்ப்படங்கள்தாம். உதாரணமாக ஒரு குடும்பம் ஒரு well furnished வீட்டுக்குக் குடி போகிறார்கள். அங்கே உள்ள குளிர்பதனப்பெட்டி அல்லது டீப் பிரீஸரைப் பயன்படுத்தியபிறகு பேயின் ஆர்ப்பாட்டங்கள ஆரம்பிக்கின்றன. ஏனென்றால் அங்கு ஒருவரைக் கொன்று பதுக்கி வைத்திருந்தார்கள். அவரது உடலின் அணுக்கம் கொண்ட ஒவ்வொரு இடத்திலும் பேய் இருந்துகொண்டிருக்க அதைத் துரத்த அவருடைய பின்னணியைத் தேடி அக்குடும்பம் பயணிக்கிறது. அல்லது பேய் ஒரு நாய்க்குட்டிக்குள் புகுந்துவிட அதை அக்குடும்பத்தின் குழந்தையொன்றை தெரியாமல் எடுத்துக்கொண்டு வர ... செக்ஸ் ஹாரர் வேண்டுமா? குறும்புக்கார ஹீரோ புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தன் கெர்ல் பிரண்டுடன் உறவுகொள்கிறார். அப்போது அவர் பயன்படுத்தும் ஆணுறையில் பேய் குடியிருப்பது அவருக்குத் தெரியாது. உறவின் உச்சத்தில் இருக்கையில் பேய் அவருக்குள் புகுந்த்து சன்னதம் கொள்கிறது. அத்துடன் .... இயற்கைப் பேரிடர் திரில்லர் வேண்டுமா? ஏதாவது ஒரு புராதனப் பொருள். அதைத் தீண்டினால் பேய் வந்து பேரிடரை ஏற்படுத்தும் என்று ஒரு ஐதீகம். இப்படி விதவிதமாக எடுக்கலாம். யாரும் தர்க்கம் குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். நிறைய atmospheric ஷாட்கள், ஸ்லோமோஷன் ஷாட்கள், பீதியூட்டும் இசை, முகத்திற்கு டீப் க்ளோஸப்கள், வியர்வை பூக்கும் முகங்கள், வீறிடும் முகங்கள், வெறித்த பார்வை, இருள், விதவிதமான இருள் வெளிகள் என அச்சுறுத்துவது சுலபம். இன்னொரு சுவாரஸ்யம் இத்தகைய கதைகளுக்கு இரக்கத்தைத் தூண்டும் பின்கதைகள் அவசியமில்லை. அப்படியே இருந்தாலும் பேய்க்கு எதிராகவே தவறிழைத்தவர்களுக்குச் சாதகமாகவே கதையைக் கொண்டு போக வேண்டும் என்பது.
ஒரே சிக்கல் பேய்ப்படங்களைத் தொடர்ந்து பார்க்க இயலாது - நாம் வாழும் அன்றாட உலகமே தன் அதீத வெளிச்சத்தாலும் அன்றாடச் சடங்குகளாலும் மிகையான தகவல்களாலும், தர்க்க நெறிகளாலும் பேய்களை விரட்டியபடி இருக்கின்றன. உதாரணமாக, ஒருவருக்கு கணினியில் ஒரு மின்னஞ்சலோ போனில் வாட்ஸப் செய்தியோ அனுப்புவதோ அது மாயமாகப் போய்ச் சேர்வதோ பீதியூட்டத்தக்க 'பேய்ச் செயல்தாம்'. ஆனால் அவை நம்மை பீதியூட்டாதபடி இணையம் எப்படிச் செயல்படுகிறது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அது நமக்குப் புரியாவிடினும் ஒருவிதமாகக் கற்பனை பண்ணுகிறோம். அடுத்து இது சாதாரண உலகினுள் வந்துவிடுகிறது. ஏதோ வடையை செய்தித்தாளில் சுற்றி கடிப்பதைப் போல இணையத்தில் புழங்குகிறோம். இப்படித்தான் இந்த உலகின் ஒவ்வொரு அற்புதச் செயலும் அன்றாடத்தினுள் கொண்டு வரப்பட்டு மீளமீள ஒரே போலச் செய்யப்பட்டு தன் அற்புதத்தை இழந்துவிடுகிறது. செக்ஸ் கூட ஒரு பேய் அனுபவம்தான். ஆனால் அதற்கும் ஒரு முறைமை இருக்கிறது - ஆடையைக் கழற்றுவது, முத்தமிடுவது, பாலுறுப்பைத் தொடுவது, குறிப்பிட்ட விதமாகப் பேசுவது என்று. நடைமுறை அதிலுள்ள பேயையும் என்றோ துரத்திவிட்டது. நாம் ஒரு இட்லியைத் தொடும்போது அது எப்படி ஒரு சதையைப் போல மென்மையாக வெதுவெதுப்பாக இருக்கிறது, இதன் உயிர் எங்கே என்று நாம் யோசிப்பதில்லை. ரசித்தபடியே கடித்து முழுங்கிவிடுகிறோம். சோதிடர்கள் பேசுவதைக் கூட தொடர்ந்து கேட்க முடியாது - அதில் உண்மையுண்டு என்று நினைத்தாலும் அது நிகழத்தக்க உண்மையல்ல என நமது நடைமுறை உலகம் அச்சுறுத்துகிறது. நாகரிக நவீன உலகம் அடிப்படையில் பேய்களை தினமும் துரத்தி வருவதால் நம்மால் தொடர்ந்து பேய்க்களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் எதார்த்தப் படங்களுக்கு நடுவே அவை எப்போது வந்தாலும் வெற்றிதான்.
ஆனால் பேய்க்கதையை நாவலாகவோ சிறுகதையாகவோ எழுதுவது கடினம். அதில் தர்க்கத்தை மனம் தேடும். யோசிக்க விடாமல் நிறைய வர்ணிக்க வேண்டும். அதேநேரத்தில், சினிமாவில் வரும் பீதியூட்டும் பிம்பங்களை நிஜ உலகில் நாம் காணும்வரை (இருட்டான அறை, சொட்டும் நீர்த்துளி, குற்றிருட்டில் யாரோ தனியாக நிற்பதாக ஒரு பிரமை) நமக்கு நினைவில் பயம் நீடிக்காது. எழுத்தில் வரும் ஒவ்வொன்றையும் நாம் ஆழமாகக் கற்பனைப் பண்ண வேண்டியிருப்பதால் பேய் அதன் பின்னர் நம் சொற்களுக்குள்ளும், கற்பனைக்குள்ளும் புகுந்துகொள்ளும்.
தமிழில் எதார்த்தவாதமும், இடதுசாரி சிந்தனைகளும், பெரியாரியமும் நவீன இலக்கியத்துக்குள் கலந்துவிட்டதால் பேய்க் கதைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ஆனால் அக்கதைகளைப் படித்தால் மாந்திரிகமும் பிரம்மாண்டமும் தெரியும், பயம் வராது. உளவியல் குறியீட்டுக் கதைகள் அவை.
எதிர்காலத்தில் ஏ.ஐ, தொழில்நுட்ப, டிஸ்டோப்பியன் பேய்க்கதைகளுக்கு ஒரு இடமிருக்கும் எனத் தோன்றுகிறது.