ஒரு இளம் எழுத்தாள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் தொடர்ந்து எழுதியும் தனக்கு எந்த விருதோ அரசின் அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று வருந்தினார். "எழுத்தில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டவர்களே அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமாக இருப்பதால் எல்லாவித அங்கீகாரங்களையும் அள்ளிக்கொள்கிறார்கள்." என்று புலம்பினார். அவரை ஆறுதல்படுத்தும் பொருட்டு நான் ஒன்றைச் சொன்னேன். அதில் சிறிது உண்மையும் உள்ளதால் இங்கு பகிர்கிறேன்:
இந்தியாவிலும் இந்திய மாநிலங்களிலும் ஆளும் அரசுகள் தம் ஆன்மாவில் தம்மை ஜனநாயக அரசாக உணர்வது இல்லை. அவை மன்னராட்சி மனநிலையில் உள்ளவையே. இதை பலவித குறியீடுகளைக் கொண்டு உணர்த்தியபடி இருப்பார்கள். அரசை நெருங்க நினைப்போர் பண்டைய காலத்தைப் போன்றே முதலில் அதிகார வர்க்கத்தை நெருங்குவார்கள். அங்கும் தம்மை அடிமைகளாக, புலரவலர்களாக, எடுபிடிகளாக, முகவர்களாக,போர்வீரர்களாக, விதூஷகர்களாக முன்வைப்பார்கள். முழுமையாக ஒப்புவிப்பர். அப்படியே அமைச்சர், முதல்வர் என்று நெருங்கிப் போவார்கள். இவர்களை நாம் நேரடியாக இவ்வாறு புரிந்துகொள்ளத் தேவையில்லை. மனதளவில் இவ்வாறு வரித்துக் கொண்டு நடந்துகொள்வார்கள் என்கிறேன். ஒரு எழுத்தாளரால் இவ்வாறு இருக்க இயலாது. எழுத்தாளர் பண்டைய மன்னராட்சி காலத்திலேயே செருக்கோடு நவீன மனநிலையில் இருந்தவர்கள். ஜனநாயகக் காலத்திலும் அவர்கள் முழுமையான ஜனநாயகப் பண்போடுதான் இருப்பார்கள். தன்னிச்சையாக உண்மையாக எழுதுவது, பேசுவது அவர்களின் அடையாளம். ஆனால் இத்தகையோரைக் கண்டு அரசும் அதிகார வர்க்கமும் அஞ்சும். அதற்காகவே ஆளும் அரசுகள் எழுத்தாளர்களை ஒருவித கலாச்சார சின்னமாகவும், தமக்காகப் பிரச்சாரம் செய்யும் கருவியாகவும் மாற்ற முனைவார்கள். இந்த இரண்டு எதிர்விசைகளுக்கும் இடையில் ஒரு சமரசம் நடக்கும்போது எழுத்தாள தரப்பில் இருந்து சிலர் அங்கு போவார்கள். இவர்கள் யார் என்பதே கேள்வி.
இந்தியாவைப் போன்ற கொடூரமான அடிமைச் சமூகத்தில் நீங்கள் நீண்ட காலம் தன்மானத்துடன், செருக்குடன் வாழ இயலாது. எழுத்தென்பது சமூகத்துடனும், காலத்துடனும், சக-படைப்பாளிகளிடமும் கொள்ளும் கோபத்தில், அந்த நெருப்பில் பிறப்பதே. உரசாமல் எழுத்தில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் இந்த சண்டைச் சச்சரவு, கோபம், ஆவேசம் போதும், அணைந்து தணிந்து கிடக்கலாம் என்று தோன்றும்போது, இசைந்து போகலாம் என்று மனம் நினைக்கும்போது எழுத்து மெல்லமெல்ல நின்றுவிடும். குமாஸ்தா எழுத்தாகும். செண்டிமெண்டாக எதாவது எழுதி, தகவல்களைத் தொகுத்து நூலாக்கி, இளைஞர்களுக்கு தலைமை தாங்குவதாக பாவனை செய்து, சிறு அமைப்புகளை நடத்தி உலகையே தாம் கையில் வைத்துத் தாங்குவதாக பாவனை செய்து, மேடைகளில் வந்து புன்னகையுடன் அமர்வது, வாழ்த்திப் பேசுவது என செட்டில் ஆகிவிடுவோம். அப்போதுதான் விருதுகளும் அங்கீகாரங்களும் நமக்கு வந்து குவியும். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
எழுத்தாளர்கள் அசலாக எழுதுவதை நிறுத்தும்போதே அவர்கள் மன்னராட்சி மனநிலை அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் சமூகத்துக்கும் பிரியமானவர்கள் ஆகிறார்கள். ரொம்ப வயதான நாய்கள் வீட்டில் ஒரு ஓரமாய் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்குமே அப்போது 'நமக்கு நீ சின்ன வயசில் என்ன ஆட்டம் போட்டே, ஓரிடத்தில் உட்கார்ந்திருக்காம அங்கே ஓடுவே, இங்கே பாய்வே, யார் சொன்னாலும் கேட்க மாட்டே, இப்போ நீ அமைதியா இருக்கிறதைப் பார்க்க ஜாலியா இருக்கு' என்று தோன்றும். அப்படித்தான் அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும்.
அதற்காக வயதுக்கும் கனிவுக்கும் நேரடியான தொடர்புண்டு என நினைக்க வேண்டாம். எல்லாருடைய உடலும் மூளையும் ஒரே போல இருப்பதில்லை. சில படைப்பாளிகள் வயதான காலத்திலும் சண்டை, சச்சரவு, எதிர்ப்பு, மறுப்பு, கிண்டல் கேலி, காதல் என நெருப்பாக இருப்பார்கள். தம்மை வயதானவர்களாகவும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சில இளம் படைப்பாளிகளே 30-40 வயதிலேயே 60, 70 வயதினரைப் போல சலனமின்றி இருப்பார்கள். அவர்கள் காலை மிதித்து ஒடினால் கூட எங்கே நானா என்று பார்ப்பார்கள். வயதாவது என்பது உடலுக்கு வயதாவது அல்ல. வயதாவது என்றால் எழுத்தில் இருந்து ஓய்வு பெற்று புற உலகிடம் இசைந்து போவது. இது எந்த வயதிலும் நடக்கும்.
வயதானாலும் 'வயதாக' மறுக்கும் படைப்பாளிகளை அரசு கடைசி வரை அங்கீகரிக்காது, தனியார் அமைப்புகளும் விருதளிக்காது. எந்த உதவியும் கொடுக்காது. இதற்குப் பல உதாரணங்களை நீங்கள் நேரில் பார்க்க முடியும். (நான் என் நண்பர்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.)
வயதாவது என்பது நிலவுடைமைச் சமூகத்தில் ஒரு சடங்கு. நாம் இதைப் பற்றி சுருக்கமாக இங்கு தெரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு கருத்தரிக்கும் தகுதி 60 வயதுவரைக்கும் உண்டு. ஆண்களால் 70-80 வயதுவரை கூட முடியும் என்கிறார்கள். குழந்தைப் பேறு என்பது சொத்தோடு சம்மந்தப்பட்டது. ஒருவர் வயதானபின்னரும் காதல், காமம், குழந்தைப் பெறுவது என இருந்தால் சொத்தைப் பிரிப்பதில் அவரது குழந்தைகளுக்கு சிக்கல்கள் வரும். அதனால்தான் வயசானால் மூடிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும் என்று அடிக்கடி நம் ஊரில் சொல்கிறார்கள். வயதாக ஆக இந்த அழுத்தம் அதிகரிக்கிறது. கோபம் வரும், காமம் பொங்கும், ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமுக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆன்மீகம், கோயில், குளம் என தடம் மாறுவார்கள். இதெல்லாமே ஒருவித பாவனை. என்னால் இளைய தலைமுறையினருக்கு தொந்தரவு இல்லை எனக் காட்டுவது. வயதானதாக நடிக்காதவர்களை சமூகம் வெளியே தள்ளும். துன்புறுத்தும், அவமானப்படுத்தும்.
குடும்பத்துக்குள், ஊருக்குள் இது ஒரு உள்-நடிப்பு என்றால் எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் இது ஒரு வெளி-நடிப்பு. எழுத்தாளர்களுக்கும் அரசும் சமூகமும் ஒரு இளமைக் காலத்தை விதிக்கிறது. அது முடிந்ததும் அவர்கள் சர்வத்தையும் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறது. உலகம் முழுக்க இளமையில் மரிக்கும் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவதை கவனிக்கலாம். இது உபமனத்தில் நாம் அவர்கள் சரியான நேரத்தில் போய்விட்டதை அங்கீகரிக்கும் மகிழ்ச்சியே அன்றி வேறில்லை. ஆனால் அப்படிச் சொன்னால் அசிங்கமாக இருக்கும் என்று இன்னும் சில காலம் இருந்திருக்கலாமே என கண்ணீர் வடிப்போம்.
நான் இதையெல்லாம் கற்பனையில் சொல்லவில்லை. இது தமிழ்நாட்டு நிலைமை மட்டும் கூட அல்ல. உலகம் முழுக்க எழுத்தாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், சமூகமும் அரசும் அவர்களை மாலையிட்டு அங்கீகரித்து பதவிகள் வழங்கும்போது அவர்கள் என்னவாகிறார்கள் என்பதை கவனித்தே சொல்கிறேன். நம்மை நோக்கி மாலையும் பரிசுகளும் வருகின்றன என்றாலே நம்மை வயதானவர்களாக்குகிறார்கள், மூலையில் உட்கார வைக்கப் போகிறார்கள் என்று பொருள். நம் மீது நிறைய வெளிச்சம் விழும், மேடைகளில் பேசுவதற்கான வாய்ப்புகள் பெருகும். ஆனால் அத்துடன் எழுத முடியாதபடி ஒரு பெரும் இருள் நம் மீது அமரும்.
எழுத்தாளராக இருப்பதன் நகைமுரண் இது - நாம் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும், அறிவுஜீவிகளாக, பண்பாடுச் சின்னங்களாக முன்வைக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறோம், ஆனால் இவை நம்மை முதுமையாக்கும் சடங்கின் முதற்கட்டம். நம் எழுத்தாள நெருப்பை அணைக்கும் முதல் காற்று.
இங்கிருந்து நாம் விருதுகளுக்கும் அங்கீகாரத்துக்கும் வரலாம். விருது கிடைத்தால் வாங்கிப் போட்டுவிட்டு நம் இயல்புபடியே இருக்கலாம் என்றாலும் அதில் பல தடைகள் வந்தே ஆகும். அடுத்து இப்படியான நினைப்பவர்களுக்கு எந்த விருதும் வராது. எனக்கு யுவ புரஸ்கார் தரப்பட்ட போது ஒரு மதிப்புக்குரிய நண்பர் சொன்னார்: "தெரியாம ஒரு தடவை கொடுத்திட்டாங்க. இனி தர மாட்டாங்க" என்று. நான் அதை ஒரு பெருமையாகவே எடுத்துக் கொண்டேன். நான் முதுமையாக விரும்பவில்லை.
ஆகையால் இளம் நண்பரே, 'முதுமையாகாமல்' இருப்பது ஒரு சுதந்திரம். மிகப்பெரிய அதிர்ஷ்டம். நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். யாரைப் பற்றியும், விளைவைப் பற்றியும் கவலையின்றி வாழலாம். புத்தகம் விற்குமா, கவனிக்கப்படுமா, விருதுபெறுமா எனும் கவலையின்றி பரிசோதனைகளைச் செய்தபடி இருக்கலாம். எவ்வளவு பெரும் உயரத்தை நோக்கியும் கேள்வி கேட்கலாம். 'முதுமையாகி' விட்டால் முடியாது. அப்போது எழுதலாம், ஆனால் அது அச்சத்தில் பிறக்கும் எழுத்து. அந்த அதிர்ஷ்டத்தை, சுதந்திரத்தைக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு கணமும் பொன்னானது. வீணடிக்காதீர்கள். அந்த பூதம் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. அது நெருங்கும் முன்பு நம்மை முழுமையாக வெளிப்படுத்தி புதிய ஆழங்களை நோக்கிப் பயணிப்போம்.
பி.கு: இது திராட்சை புளிக்கும் கதை அல்ல. இதுதான் எதார்த்தம்.