Skip to main content

உண்மையான சிறுபான்மை 'ஆதிக்கம்'

பெங்களூரில் மலையாளிகளின் ஆதிக்கத்தின் விளைவாக மாட்டுக்கறி தாராளமாகக் கிடைத்து வந்தது. அங்கு அரசு தடைவிதித்தபோதும் கூட முதிய மாடுகளை அறுக்கலாம் எனும் நிபந்தனைகளுடன் அனுமதித்தது. அங்கு இக்கடைகளை நடத்தி வரும் இஸ்லாமியர்களும் ஓரளவுக்கு சுதந்திரமாக செயல்பட முடிகிறது. அதாவது பாஜக அரசு இருந்தபோதும் கூட இதுவே நிலை. ஆனால் மைசூர் அப்படி அல்ல. மைசூர் மன்னர்களின் காலத்தில் பிராமணர்களுக்கு அதிகமாக நிலத்தையும் செல்வத்தையும் பதவிகளையும் வழங்கினார்கள். பிராமணர்களுக்கு இங்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. அடுத்து மார்வாரி ஜெயின்களின் ஆதிக்கமும் அதிகம். அவர்கள் வசமே பெரும்பாலான கடைகளும் வீடுகளும் உள்ளன. இதனால் மறைமுகமாகவே இறைச்சி உணவுகள் பரவலாகக் கிடைக்காமல் தடை செய்துவிடுகிறார்கள். ஒருமுறை சுற்றி வந்தாலே இதுவொரு சைவ உணவு நகரம் எனும் உணர்வு ஏற்படும். ஆனால் அது உண்மையல்ல, இறைச்சி உணவை உண்போர் குறிப்பிடத்தக்க அளவில் உள்கிறார்கள். தாம் உண்ணும் உணவைக் கொண்டாடும் உரிமை மட்டும் அவர்களுக்கு இருப்பதில்லை. கூச்சம், குற்றவுணர்வு இங்குள்ள பொதுப்பண்பாட்டில் உள்ளது.

நாங்கள் இங்கு வந்தபோது மாட்டுக்கறியைத்தான் தேடினோம். அது கிடைக்காது என்றே எல்லாரும் சொன்னார்கள். கூகிளும் கூடச் சொன்னது. அதன்பிறகு நாங்கள் உள்ளூரில் ஒவ்வொருவரிடமாக விசாரித்தோம். ஒரு கடையைக் கண்டுபிடித்தோம். அங்கும் ஒளித்தே விற்கிறார்கள். அக்கடைக்காரரிடம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதால் வெளிப்படையாக விற்க முடியவில்லை என்றார். இன்னும் அப்பிரச்சினை சரியாகவில்லை. ஒருவிதத்தில் மைசூரின் உண்மையான சிறுபான்மை பிராமணர்களும் ஜெயின்களுதாம். ஆனால் அவரக்ள்தாம் பெரும்பான்மையினரின் மென்னியை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள். (இன்னொரு காரணம் இங்குள்ள பிராமணமயமாகிவிட்ட லிங்காயத்துகள். ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையும் இஸ்லாமியர்களின் கூட்டுத்தொகைக்கு குறைவுதான். மேலும் அவர்களும் ரகசியமாக இறைச்சி உண்கிறார்கள்.)
(அரசு வெளியிட்டுள்ள SES ஆவணத்தின்படி)கர்நாடகாவிலே மொத்தமாகவே அவர்கள் 17 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியரோ 70 லட்சம் பேர்கள் இருக்கிறார்கள். மைசூரில் இஸ்லாமியர் 2 லட்சத்துக்கு மேல் இருக்கிறார்கள். இங்குள்ள பிராமணர்களுக்கு சில ஆயிரங்களுக்குள்ளே இருப்பார்கள். ஜெயின்களின் மக்கள் தொகையோ 1.13%.
எதற்கு மக்கள் தொகையைக் குறிப்பிடுகிறேன்? வரிப் பங்களிப்பைச் சொல்லத்தான். பெரும்பான்மையினரே அதிகமாக உழைத்து வருமானத்தைப் பெருக்கி ஒரு மாநிலலத்தை, நகரத்தை வளமாக வைக்கிறார்கள். அரசுக்கு அதிகமாக வரியளிக்கிறார்கள். இங்கு என்ன சிக்கலென்றால் நிலமும் வணிக முதலீடுகளும் 1-3% கீழுள்ள மக்களிடம் அதிகமாக உள்ளது. கலாச்சார விழுமியங்கள் மீதும் அவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. விளைவாக பெரும்பான்மையினரை மாற்றுவழியில் சென்று முந்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடிகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனம் மோனோபொலிதான். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களுக்கு புரதச் சத்து அதிகமான உணவு கிடைப்பதில்லை. தமது உணவு விருப்பங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடிவதில்லை.
இத்தரவைப் பாருங்கள் - தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, ஆந்திராவுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் இறைச்சி உண்போர் எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் அதுவொன்றும் சாதாரண தொகை அல்ல - மாநிலத்தின் 81.2% பேர்கள். 40,000 டன்களுக்கு மேல் கோழிக்கறியையும் மாட்டுக்கறியையும் மக்கள் கர்நாடகாவில் உண்கிறார்கள்.
ஆனால் இதை வெளிப்படையாக பெங்களூரில் பார்க்க முடியாது. இஸ்லமியர் வசிக்கும் பகுதியில் மட்டுமே காண முடியும். அங்குதான் இந்துக்களும் போய் பரவலாக இறைச்சியை உண்ண வேண்டும். அதாவது இறைச்சிக் கடைகளையும், இறைச்சி உணவுக் கடைகளையும் ஒருவித 'சேரியாக' பெருநகரத்திற்குள்ளேயே மாற்றி வைத்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் (18%) கையில் இந்துப் பெரும்பான்மையினர் போவதும், அவர்களின் கைப்பாவைகளாக இவர்கள் மாறுவதும் இந்துத்துவாவின் செயல்திட்டம்தான். ஆனால் அப்போதும் கூட பண்பாட்டு அரசியல்தான் மக்களின் அன்றாட வாழ்வின் அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. அதன் குடுமி எப்போதும் சிறுபான்மையினர் கையிலே இருக்கிறது.
இன்னொரு சிக்கல் வெளிப்படையாக ஒன்றைச் செய்ய முடியாமல் போகையில் மக்கள் சுதந்திரமாக தம் வாழ்வை அனுபவிக்கும், இருத்தலை முழுமையாக உணரும் உரிமையை கைவிடுகிறார்கள். தமக்குள்ளேயே அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். சொந்த மண்ணில் குடியேறிகளாக உணர்கிறார்கள். முன்பு பிரிட்டீஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியர்கள் இப்படித்தான் உணர்ந்தார்கள் என்பதால் இதை ஒரு 'நவகாலனிய நிலை' என்றும் சொல்லலாம். நீங்கள் இதை பெரும்பாலான கன்னடர்களின் உடல்மொழியில் தென்படும் கூச்சத்தில், மென்மையில், சிறுபிரச்சினைகளுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படும் போக்கில் காணலாம்.
பிடித்த உணவை வெளிப்படையாக உண்ணாமல் போவதன் பின்னால் கூட்டு உளவியலில் இவ்வளவு விசயங்கள் நடக்கின்றன. அது பின்னர் ஒரு நோய்மையாகவே மாறிப் போகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...