பொதுவாக கடுமையான விமர்சனங்களைப் பார்க்கையில் எனக்கு விமர்சிக்கப்பட்ட படைப்பாளி மீது இரக்கம் மேலிடும். ஆனால் அண்மையில் அவ்வாறு விமர்சித்த ஒருவரே என் இரக்கத்தை, வருத்தத்தை, கவலையைக் கோரும்படியாக ஒரு பதிவெழுதியிருந்தார்: தான் எழுதிய எதிர்மறை விமர்சத்தினால் தனக்கு எதிர்காலத்தில் திறக்கப்படக்கூடிய கதவுகள் திறக்கப்படாமல் போகக்கூடும் எனத் தனக்குத் தெரியும் என்று அவர் சொல்கிறார். அவரது வருத்தம் புரிகிறது. இது இன்றைக்கு பல எழுத்தாளர்களுக்குள்ளும் இருக்கும் அச்சம்தான். எழுத்தாளர்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் வரும் ஒரு இயக்கத்தின் பகுதியாக தம்மை மாற்றும்போது அவர்களை இணைப்பது தன்னலமும் அச்சமுமே. அவர்கள் அதனாலே தம் கருத்துக்களை தம் இதயத்துக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் தம் கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்க முடியாமல் போகும்போது அவர்கள் அகவெளியும் சுருங்குகிறது, அவர்களுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு வலை அறுகிறது, அவர்கள் மௌனத்தை தூக்குக் கயிறாக முடிச்சிட்டு தம் கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தமிழில் இதற்குச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரம் அமைப்பு. ஜெயமோகன் என்னதான் எழுத்தாளர்கள் திமுக சார்பு எடுத்து போலியாக நடிப்பதாக விமர்சித்தாலும் உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே அரசைப் பற்றி விமர்சனம் செய்ததில்லை. ஆனால் அவர்கள் கலாச்சார விமர்சனத்தை, கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விருதளிப்பது, வேறு இலக்கிய மேடைகளைத் தன் செல்வாக்கால் ஆக்கிரமிப்பது, வெளிநாட்டுப் பயணங்களைத் தன் ஆதரவாளர்களுக்கு அமைத்துக் கொடுப்பதன் வழியாக அவர் வெளியே உள்ள படைப்பாளிகளை தன்னை விமர்சிக்காமல், தன் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்லாமல் நாக்கைத் துண்டித்துவிடுகிறார். கமல்ஹாசன், மணிரத்னம் தொடர்பையும் அவர் சினிமா வாய்ப்பு எனும் ஆசை காட்டவே பயன்படுத்தி இருக்கிறார். சினிமாவுக்குப் போக விரும்பும் இளம் படைப்பாளிகளும் எதற்குப் பகைத்துக் கொள்ள வேண்டும் என அமைதியாகப் போகிறார்கள். எதையும் இழக்கச் சாத்தியமில்லாத வாசகர்களும் பேஸ்புக்கர்களுமே இப்போதும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இச்சூழல் அந்த காலத்துக்கு ஸ்டாலினிய ரஷ்யாவையும், ஹிட்லரின் ஜெர்மனியையும் நினைவுபடுத்துகிறது.
அச்சம் ஆபத்தானது. அது இலக்கியத்தை உள்ளிருந்தே தின்னும் புற்றுநோய். எனக்கு மேற்சொன்ன எழுத்தாளரின் விமர்சனப் பாணியிலோ கருத்துக்களுடனோ உடன்பாடில்லை. ஆனால் அவரது பயத்தைப் பார்க்க பயமாக உள்ளது. தமக்கான வாய்ப்புகள் பறிபோகக்கூடும் என ஒரு எழுத்தாளர் பயப்படும்போது அவர் தனக்கான வாய்ப்புகளும் திறக்கூடிய கதவுகளும் உள்ளன என நம்புகிறார் என்றே பொருள். (அதேநேரம் அவர் இதை ஒரு தற்காலிக உணர்வாகவே பார்க்கிறார். இது அவரை மௌனிக்க வைப்பதில்லை.) நிஜத்தில் இந்த அச்சமே ஒரு கற்பிதம்தான். இப்படியான கற்பிதங்கள் இன்னும் அச்சமூட்டுகின்றன.
நீங்கள் பொய்யாக ஒரு கதவை உருவாக்கி அதை ஒரு சிறு திரளின் முன் வைக்கிறீர்கள். ஒருவர் பாடல் எழுத வாய்ப்பு பெற்றால் அது தன்னாலே நடந்தது எனச் சொல்லி, ஒருவர் தேசிய விருது பெற்றால் அதுவும் தன்னால்தான் எனக் கோரி அக்கதவைக் கட்டமைக்கிறீர்கள். அமெரிக்காவில் இருபது பேர்கள் திரளும் கூட்டம் ஒன்றை நடத்தி நான் சர்வதேச அளவிலான கூட்டத்தை நடத்தி அங்கு என் ஆதரவளார்களை அனுப்புவேன் என ஒரு கதவை வரைந்து காட்டுகிறீர்கள். (ஒரு ஒப்பீட்டுக்கு, உலகம் முழுக்க மில்லியன் கணக்கில் புத்தகங்களை விற்கும் பெருமாள் முருகன் எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் எனப் பாருங்கள்.) இப்போது அக்கதவை நோக்கி பரிதவிப்புடன் மக்கள் நிற்கிறார்கள். அல்லது ஒருவேளை அக்கதவு திறந்துவிடுமோ எனும் அச்சத்தில் நிற்கிறார்கள். எப்படி கடவுள் பேசுவதில்லையோ அதேபோல இம்மாதிரி கதவுகளும் திறப்பதில்லை