Skip to main content

அமெரிக்காவின் அவலம்


அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான மானியத்தை ரத்து பண்ணிவிடும் என வையுங்கள். நீங்கள் எங்கே போவீர்கள்? ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மாதத்துக்கான செலவையெல்லாம் நடத்திவிட முடியுமா? முடியாது. இப்போது மக்கள் மிக மலிவான பொருட்களை மட்டும் வாங்கி அதையே மூன்றுவேளைகளும் உண்கிறார்கள். அதுவும் கிடைக்காதபோது வீட்டுக்குள் பசியுடன் காத்திருக்கிறார்கள்.


இதைக் குறித்து கார்டியன் இதழில் ஒரு கட்டுரை படித்தேன். நாட்கணக்காக பாக்கெட்டில் கிடைக்கும் ஒரே துரித உணவைச் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், சத்தான உணவுகளை கண்ணிலே பார்க்க இயலாது என ஒருவர் அதில் பேட்டியளித்திருக்கிறார். "ஆரம்பத்தில் ஸ்னேப் அட்டையைப் பயன்படுத்தவே கூச்சமாக இருந்தது, யாராவது பார்த்தால் கௌரவம் போய்விடுமே என ஒதுங்கி நடப்பேன், ஆனால் ஊரில் பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த பின்னரே நான் இயல்பானேன். நாங்கள் இப்போதெல்லாம் பரஸ்பரம் பார்த்து புன்னகைத்துக் கொள்கிறோம்." என்கிறார் அவர். யோசித்துப் பார்த்தால் நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்குவதற்கோ அரசு தரும் உரிமைத் தொகையைப் பெறுவதற்கோ நாம் கூச்சப்படுவதில்லை. அது 'நியாயமானது' எனும் உணர்வு நமக்கு உள்ளதைப் போல வலதுசாரி முதலீட்டிய நாடான அமெரிக்காவில் இல்லை. அங்கு 'ஏழ்மையை' ஒரு சமூக அநீதியாகக் காணும் புரிதல் குறைவு. தோல்வியுற்றவர்களே ஏழைகள் என்பதே அவர்களின் விழுமியம்.

ஸ்னேப் நிர்வாகி ஒருவர் சொல்வதாக மற்றொரு கார்டியன் கட்டுரையில் சொல்கிறார்கள்: "ஸ்னேப் தொகையை அரசு நிறுத்திவிட்டது. கடைசி சில்லறைக் காசையும் பயன்படுத்திவிட்டோம். இப்படியே போனால் எங்களுக்கு சாப்பிட பூனை உணவு மட்டும்தான் மீதமிருக்கும்."

டிரம்ப் அடிப்படையில் ஏழைகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கு எதிரானவர். ஆனால் இந்த ஏழைகளே இவர்களுக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது (உங்கள் பணத்தையெல்லாம் வந்தேறிகளான இஸ்லாமியர், ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், கம்யூனிஸ ஆதரவாளர்களான முற்போக்காளர்கள் இதை ஆதரிக்கிறார்கள் எனச் சொல்லி ஏமாற்றி வாக்குகளை அவர் அள்ளிவிடுகிறார்.) அவர் ஏற்கனவே பேசியபடி ஸ்னேப்புக்கான நிதியை நிறுத்திவிட்டார். நீதிமன்றம் தலையிட்டு வலியுறுத்தியபடி அவர் சிறிது தொகையை மட்டும் கொடுப்பதாகச் சொல்கிறார். இதனிடையே அங்கே பட்டினி கிடக்கும் மாத வருமானத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நம்மூரில் விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கிறார்கள். அங்கு அதுவும் இல்லை. பட்டினிதான். இப்போதும்கூட இதனால் மக்களுக்கு டிரம்ப் மீது கோபம் வந்து கலகம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வந்தேறிகள்தாம் என்று சொல்லி அவர்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடுவார்.

இந்தியா அமெரிக்காவை விட பல மடங்கு மேலானது எனும் உணர்வு எனக்கு ஒருநாள் வரும் என நான் கற்பனையே பண்ணியிருக்கவில்லை. இங்கு உங்களுக்கு மாத வருமான வேலை இருந்தாலே போதும், மூன்று வேளையும் உணவுக்குப் பஞ்சமில்லை. வேலையும் இருக்க வீடும் இல்லாத தெருவில் வாழும் பெண்களுக்கு கூட கர்நாடகாவில் அரசு விடுதியை நடத்துகிறது. மாநில அரசுகள் பெண்களுக்கு மாதமாதம் உரிமைத்தொகை கொடுப்பது தேர்தல் யுக்தியாகிவிட்டது. சலுகையையோ மானியத்தொகையையோ உரிமைத்தொகைகளையோ அரசோ கட்சிகளோ அவமதிப்பதில்லை. ஏழ்மை குறித்த குற்றவுணர்வு மேல்மத்திய, மேல்வர்க்கத்திடம் தாராளமாக உள்ளது. என்னதான் குப்பைக்கூளமாக, மதவெறியர்களாக, ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நாம் இருந்தாலும் அடிப்படையான பாதுகாப்பு வலையொன்றை வைத்திருக்கிறோம்.

நான் கடந்த மாதம் வயநாடு சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டின் முன்பு பத்து பெண்கள் சீருடை அணிந்து சீரமைப்புப் பணியைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபோது அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும், பொதுமக்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைப்பட்டால் அரசிடம் விண்ணப்பித்து இவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். அரசின் முகமையில் இவர்கள் வருவதால் அடிப்படைப் பாதுகாப்பு உண்டு. உடலுழைப்பு வேலைகளுக்கு அங்கு ஆள் கிடைக்காத நிலையில் இதனால் பொதுமக்களும் பயன்பெறுகிறார்கள். தனியாரிடம் உழைப்பாளிகளைப் பணயம் வைக்காமல் அரசு தொழில் நிர்வாகத்தில் நேரடிப் பங்கு வகிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நல்ல உதாரணம் இது.

வாக்குகளைத் திருடித்திருடி பாஜக இன்னும் பத்திருபது ஆண்டுகள் ஆண்டாலும் வேலை செய்து சம்பாதித்துக்கொண்டே ஏழையாகவும் பரதேசியாகவும் இருக்கும் நிலை இந்தியர்களுக்கு வரப்போவதில்லை. இந்த பாதுகாப்பு நடைமுறைகளும் கட்டமைப்பும் இல்லாததாலே அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரித்ததும் எளிய மக்களும் மத்திய் வர்க்கமும் தெருவுக்கு வருகிறார்கள்.

முதலீட்டிய-சார்பு சமூகங்கள் பெங்களூர் நகராட்சி போடும் சாலையைப் போன்றவை. எப்போது அது உடைந்து வாகனம் உள்ளே போகும் எனத் தெரியாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...