அம்பையின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இம்மாத உயிர்மையில் வெளியாகி உள்ளது. கதையின் மையம் இதுதான்: ஒரு வீதி அல்லது பகுதியுடன் நமது நினைவுகள், நம்பிக்கைகள், வரலாறு பிணைந்துள்ளது. நாம் அதை நம்முடனே வைத்துக்கொள்ள விரும்புகிறோம். இன்னொரு பக்கம், அந்த வெளி உருமாறிக்கொண்டும், நகர்ந்தபடியும் இருக்கிறது. அழியாதவை, அழிந்து உருமாறுகிறவை எனும் இரு விசைகளுக்கு இடையிலான மோதல்தான் இக்கதை. அம்பை தன் வழக்கப்படி ஒரு குடும்பத்தை, அதன் வரலாற்றை, அக்குடும்பம் வேர்பிடித்த நகரத்தை விவரிக்கிறார். அக்குடும்பத்துப் பாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளை, நிபந்தனைகளை, பாசப்பிணைப்பைக் காட்டுகிறார். ஆண் குடும்பத் தலைவர் பேசினாலும் அவர் மெல்லமெல்ல பின்னகர்ந்து பெண்களின் குரல் அதிகமாகக் கேட்கத் தொடங்கி அவ்வாறே - பெண்ணின் தன்னிலை வெளிப்பாட்டுடன் - கதை முடியவும் செய்கிறது. அம்பையின் முந்தைய கதைகளில் பாசப்பிணைப்பு துன்பப் பிணைப்பாக மாறும் நிலையும் சித்தரிக்கப்படும். ஆனால் இக்கதையில் பாஸிட்டிவிஸ்ட் தன்மை அதிகம் எனத் தோன்றும்போது அவர் ஒரு சிந்தி இனத்துப் பெரியவரான திலீப் ஸக்லானியை முன்னிலைப்படுத்துகிறார். திலீப் தன் கடந்த கால நினைவுகளுக்குள் போகிறார். அவரது பேத்தியான சாவித்திரி நகரியல் ஆய்வாளர். அவள் மும்பை நகரத்தை ஆய்வு பண்ணுவதற்காக வந்திருக்கிறாள். அவளிடம் திலீப் கித்வானி சாலைக்குத் தன் பெயரை அளித்த டாக்டர் சொயித்ராம் பர்தாப்ரய் கித்வானியின் வரலாற்றைச் சொல்கிறார். கித்வானி ஒரு காந்தியவாதி, தியாகி, மக்களுக்காக உழைத்த மருத்துவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து காலமானவர். அவர் பெயரில் ஸி.பி கித்வானி தெரு அழைக்கப்படுகிறது.
அடுத்து பாட்டி தான் ஒரு ஏழை மாணவனான ப்ராபகரின் கல்விக்கு உதவியதையும், அப்பையன் வளர்ந்து பத்திரிகையாளராகி, பின்னர் பெரிய அரசுப் பொறுப்பை ஏற்று அதன் பிறகு அவன் காலமாகிட அவர் பெயரில் ஒரு தெருவும் அங்கு அவன் நினைவில் பேனா ஏந்திய சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்: ப்ராபாகர் கதம் தெரு. கஸ்தூரி அங்கு சென்று பார்ப்பதென முடிவெடுக்கிறாள். தன் சித்தப்பா, சித்தியுடன் போகிறாள். அங்கு போனால் ப்ராபாகரின் நினைவுச் சின்னம் விபத்துகளில் அழிந்துபோய் அதை நகராட்சி அகற்றியிருக்கிறது. அங்கு சோளம் விற்கும் ஆள் அதைப் பற்றிச் சொல்கிறார். இதுதான் கதையின் உச்சம். மிகச்சிறந்த இடம்.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்க சோளம் விற்பவரின் 15 வயது மகள் வருகிறாள். அவளுக்கு அத்தெருவின் வரலாற்றைப் பற்றி, அதன் பெயரைப் பற்றி ஒன்றும் தெரியாது. தான் ஷாப்பிங் போகும் எம்.ஜி சாலையென்றால் மகாத்மா காந்தி தெருவென்பதும் தெரியாது. தன் வாழ்க்கை, தன் தேடல், இலக்கு, சுயநலம், பேஷன் என்று வாழும் இளந்தலைமுறையின் ஒரு பகுதி. கஸ்தூரியும் சித்தியும் சோளக் கொண்டைகளை வாங்கிக்கொண்டு காருக்குள் அமர்கிறார்கள். “கஸ்தூரி தன் சோளக்கொண்டையை மெல்லக் கடித்தாள். உப்பு, புளிப்பு, காரத்துடன் சூடான சோளமணிகள் வாயில் நிரம்பின.” வாயில் நிரம்பும் பலவிதமான சுவைகளின் சங்கமான சோளமணிகள் அந்த மும்பை நகரத்து நினைவுகளாகவும், அந்நினைவுகள் தோன்றித்தோன்றி அழியத் தோன்றும் நகர வெளியாகவும், அதில் சுவையூற வாயில் கரையும் வாழ்வாகவும் இருக்கிறது. நாம் நம் நகரங்களையும் அதன் தினசரி வரலாற்றையும் தின்று செரிக்கிறோம். அதன் சுவையில் திளைக்கிறோம். வரலாறு அழிந்து மறைகையில் அதைக் கைப்பற்றி நிறுத்த எத்தனிக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் கிளர்ச்சியும் மலர்ச்சியுமே நமக்கு எஞ்சுகிறது. வரலாற்றைப் பேணுகிறவர்கள் இருக்கும்போதே அதைப் புசித்தபடி நகர்ந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். வரலாறு தோன்றியபடியே இருக்கிறது. அதை நாம் உட்செரித்தபடி அந்த உணர்வே இல்லாமல் இருக்கிறோம். அதன் ரசனையான அனுபவம் கதையின் முடிவில் முன்னிலைப்படுத்தப்பட கதை 360 பாகையில் சட்டெனத் திரும்பி விடுகிறது.
இக்கதையில் ஒரு விமர்சனம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதைக் கடந்த அவதானிப்பும் உள்ளது. வழக்கமாக அம்பை தன் கதையின் முடிவில் சாட்டையொன்றுடன் தோன்றுவார். ஆனால் இக்கதையில் ஒரு கனிவு இருக்கிறது. உறுத்தாத நுட்பமான கோபமும் உள்ளது. நல்ல கதைகள் புலனுலகில் இருந்து ஒரு தருணத்தை எடுத்து அதை கவித்துவமாக மாற்றும். அதன் பொருளை நம் வசம் விடும். இக்கதையும் அதைச் செய்கிறது: சோளமணிகள் வாயில் நிரம்புவது. நகரத்து வெளி உதிர்ந்து நம் மனத்தில் நிறைவதை அது உணர்த்துகிறது.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share