இருவகையான நாவல் வாசிப்புகள் உளன. ஒன்று விமர்சக வாசிப்பு. மற்றொன்று வாசக வாசிப்பு. விமர்சன வாசிப்பு நாவல் குறித்த சிந்தனைகளை ஒழுங்குபடுத்த, அரசியல்படுத்த முயல்கிறது. அதற்கென்று திட்டமிட்ட நோக்கம் எப்போதும் உண்டு. அதனாலே நாவலின் திரளாத பலதரப்பட்ட முரணான எண்ண, உணர்வோட்டங்கள் உள்ள பரப்பை விமர்சகரால் எட்ட முடியாது. விமர்சகரின் இயக்கமே நாவல் வாசிப்பின் இயக்கத்துக்கு எதிரானதுதான். ஆனால் விமர்சன வாசிப்புக்கென்று ஒரு இடம் உள்ளது - ஒரு நூலகர் அலமாரி அடுக்குகளில் சரியாக நூல்களை அடுக்குவதைப் போன்ற, ஒரு போக்குவரத்துக் காவலர் சாலை நடுவே வந்து இவரை எதாவது கார் மோதினால் என்னாவது என நாம் பயந்துகொண்டிருக்கும்போதே 'நீ போ, நீ வா' என நெறிப்படுத்துவதைப் போன்ற செயல் அது.
ஆனால் வாசகர்கள் விமர்சக வாசிப்பைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பு அவர்களை விமர்சனத்துக்கு அப்பாலே கொண்டு செல்கிறது. வாசிப்பு ஒருவிதத்தில் வெள்ளப்பெருக்கைப் போன்றது. அதில் நின்று நிதானமாக யோசிக்க முடியாது. ஒரு நாவலில் முக்கியமற்றது என விமர்சகர் நினைக்கும் பகுதியை வாசகர் ரசித்து அதிலேயே தொய்வார். ஒரு கதையில் பொருட்படுத்தத் தகாத ஒரு தகவலையோ விவரணையோ படித்து மனம் நெகிழ்ந்து கண்ணீர் விடுவார். கதையின் போக்கில் வரும் ஒரு பிசிறான கருத்தால் ஈர்க்கப்பட்டு அவர் ஒரு புதிய தளத்தை வந்தடைவார். நாவலில் வரும் நூறு அலைகளில் ஒன்றில் ஏறி அவர் யாரும் காணாத தீவொன்றைக் கண்டடைவார். நாவலுக்கு என்று தெளிவான கதைக்களமும், கதைக்கருவும், இலக்கும் உண்டென்றாலும் நாவல் வாசிப்பு இவற்றுக்கு அப்பாலானது.
நாவலாசிரியருக்கு கிடைக்கும் பேருவகை வாசகர்கள் எப்படியெல்லாம் படித்து சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள் என கவனிப்பதே.