எனக்கு இடதுபுறம் நிற்பவர் என் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். ஆன் தெரஸா பென்னி. அவருக்கு நேற்றே முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடந்தது. கடுமையான உழைப்பாளி. ஆய்வுக் காலத்திலே கல்யாணம், குழந்தைப் பிறப்பு, புது வேலை என மாற்றங்களும் சவால்களும் வர அவர் அவற்றுடன் முனைவர் ஆய்வுப் பணியையும் செறிவாக மேற்கொண்டார். எனக்கு வலப்பக்கம் நிற்பவர் எப்.டி எனக்கு எம்.ஸி.ஸி கல்லூரியில் பிரசித்தமாகத் திகழும் பேராசிரியர் பிராங்கிலின் டேனியல். நான் அங்கே முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தபோது எப்.டி சார் அங்கு ஏற்கனவே நிலைப்பெற்று பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த பேராசிரியர்களின் மத்தியில் ஒரு நாட்காட்டியில் விடுமுறைத் தினங்கள் கவனப்படுத்தப்பட வேலை தினம் போலத் தோன்றினார். சற்று கூச்சமான, கனவான் தோரணை கொண்ட நட்பான மனிதர். இளைஞர்களுக்கு ஈடானத் தன்னைக் கருதி இளைஞர்களாலும் (இயல்பாகவே) அவ்வாறே கருதப்பட்டு சமமாக நினைக்கப்படவர். நான் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பத்தில் விரும்பி பின்னர் அப்பணி செய்யப் பிடிக்காமல் ஊடகம், இதழியல் என்று சிறிது காலமும் அறிவியல் இதழ்களைத் திருத்தும் பணியிலும் இருந்து வேலையில்லாதவன், வேலை தெரிந்தவன் தான் உண்மையான வேலைக்காரன் எனக் கருதி கல்லூரி வேலைக்குச் சென்று முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தேன். பட்டம் பெற்று பெங்களூருக்கு வந்தேன். அப்போது நிரந்தர வேலையில் எம்.ஸி.ஸியில் இருந்த எப்.டி சார் பேராளுமைகள் ஓய்வுபெற்று எப்.டி சார் துறையின் தலைவராகவும் முனைவர் பட்ட தேர்வாளராகவும் மாறிவிட்டார். ஆனின் தேர்வாளர்களுக்கானப் பட்டியலைத் தயாரிக்கும்போது நான் கொடுக்க பெயர்களில் அவரும் ஒருவர். அவரைத் தேர்வு பண்ணினார்கள் என்பதே எனக்கு அவரது பெயரில் தேர்வாளர் அறிக்கை வரும்போதுதான் தெரியும். நேற்று நடந்த வாய்மொழித் தேர்வின்போது அவரைச் சந்திக்கையில் எனக்கு சற்று விசித்திரமாக இருந்தது - என் மனத்தில் காலம் கடந்து நானும் அவரும் மாறிவிட்டதாக எந்தத் தடயமும் இல்லை. அம்மாற்றங்கள் புறவயமானவை. எப்போதும் வாடாத மலரொன்று காற்றில் அசைந்தபடி காற்றில் நிற்கிறது.
எப்.டி சார் நேற்றைய தேர்வில் பயங்கரமாகக் கேள்விகளை அள்ளி வீசியபோது இவ்வளவுக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லையே என்று சில கணன்ங்கள் யோசித்தேன். ஆனால் அவர் உடனடியாகக் கனிவாகவும் அன்பாகவும் பேசி பட்டத்தையும் அறிவித்தார், நிகழ்ச்சி முடிந்ததும் கலாய்ப்பது, சொற்களை வைத்து விளையாடுவது என துடிப்பாக லகுவாக இருந்தார். எல்லாமே எம்.ஸி.ஸி ஸ்டைல்தான் என்பதும், அதுவே எனக்கு வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு காலத்தில் இருந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது.
இத்தனை ஆண்டுகளில் வாடாத அம்மலர் எங்களுக்கு இடையில் சுடரொளி வீசுவதை, அவ்வொளி காலமெனும் கண்ணாடியை மறையச் செய்வதை உணர்ந்தேன். வயது, அனுபவம், மாற்றங்கள் நம்மை நாமே எதையோ நம்பவைக்கச் செய்யும் பிரயத்தனங்கள். இருபதுகளுக்குப் பின் நாம் எதையும் புதிதாகக் கற்பதோ மாறுவதோ இல்லை.
பட்டம் அறிவிக்கப்பட்டபின் நான் ஆன் தெரஸா பென்னியிடம் சொன்னேன்: அரசுப் பணியொன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். முனைவர் பட்ட நெறியாளராக உங்கள் மாணவர்களிடம் அன்பாக, கனிவாக, பொறுமையாக, கூலாக இருங்கள். புன்னகையுடன் மகிழ்ச்சியுடன் "நிச்சயமாக" என்றார். நான் என் நெறியாளரிடம் இருந்து பெற்ற தாக்கத்தையே என் மாணவர்களிடம் வெளிப்படுத்தினேன். ஆனும் அவ்வாறே நடந்துகொள்வார் என நினைக்கிறேன். இது ஒரு சங்கிலித் தொடர். அன்பையும் மகிழ்ச்சியையும் ஜனநாயகப் பண்புகளையும் நாம் விதைத்தால் அது ஒரு தனியான மரபை உண்டுபண்ணும்.
அவருக்கு என் வாழ்த்துகள்.