"ஆப்யந்தர குற்றவாளி" சேதுநாத் பத்மகுமார் என்பவர் எழுதி இயக்கிய படம். ஆசிப் அலி நாயக வேடத்தில். 498A போன்ற போலி வழக்குகளால் அலைகழிக்கப்படும் இளைஞர் ஒருவரின் கதை. இக்கதை நான் கேட்ட, பார்த்த பல்வேறு சம்பவங்களை மீள்நிகழ்த்தியதைப் போல உள்ளது. பெற்றோரின் அழுத்தத்தின் பெயரில் திருமணம் செய்து அதிலிருந்து உடனடியாக வெளியேற பொய்க்குற்றங்களை கணவர் மீது சுமத்தி வழக்காடுமன்றம் வரும் ஒரு பெண். அவர் இறுதியில் மனம் மாறி நீதிபதி முன்பு உண்மையை ஒப்புக்கொண்டு வழக்கைப் பின்வாங்குகிறார். நடுவே துணைக்கதைகளாக பொய்க்குற்றச்சாட்டின் பெயரில் மகளைக் காண அனுமதிக்கப்படாத அப்பாவும், அம்மாவாலும் தாத்தாவாலும் அவர் மீது அச்சத்திடமும் இயல்பாகவே தனக்கு அப்பா மீதுள்ள பாசத்திடமும் மோதித் தடுமாறுகிற அவரது பெண் குழந்தை, கணவர் இறந்தபிறகு மாமனார் பெயரில் உள்ள சொத்தைக் கேட்டு வழக்காடு மன்றம் செல்லும் பெண் எனக் காத்திரமான சில காட்சிகளும் உள்ளன. அந்த மகளைக் காணத் தவிக்கும் அப்பாவின் பாத்திரத்தில் சித்தார்த் பரதன் அபாரமாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, பெரும்பாலானவர்கள் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். சிறு பாத்திரங்களும் தெளிவாக, சின்னச்சின்ன நகைச்சுவை சங்கதிகளுடன் எழுதப்பட்டுள்ளன.
இப்படத்தின் பலவீனம் அதன் திரைக்கதை. இத்தகைய ஆணியக் கதைகளை எழுதுவது கடினம் (இது பெண்ணியக் கதைகளுக்கும் பொருந்தும்) - பேச வேண்டிய பிரச்சினையும் கருத்தும் நம் முன்னே உள்ளதால் கதையில் உள்மோதலோ அடுத்தடுத்த சிக்கல்களோ உருவாகாது. பேச ஆரம்பித்ததும் முடிகிற பாணி கதை இது. ஆகையால் பல்வேறு நிலைகளில் நாடகீய மோதல்களைத் திட்டமிட்டு கவனமாக உருவாக்கினாலே இதை ஒரு சுவாரஸ்மான கதையாக்க முடியும்.
அல்லது இப்படத்தை இயக்குநர் நாயகியின் பார்வையில் இருந்து எழுத முயன்றிருக்க வேண்டும். குழந்தைப் பருவத்துச் சிக்கல்கள், வளர்ந்தபிறகு அவளுக்கு விருப்பமில்லாமல் திருமணம் முடிவு பண்ணப்படுவது, அதற்கு அவளது பெற்றோருக்கு வரும் அழுத்தங்கள், அவளுக்கு ஏற்கனவே உள்ள உறவு, அவள் பல நிலைகளிலும் ஏமாற்றப்படுவது, அவள் அடுத்து தன் கணவனையும் கணவன் குடும்பத்தினரையும் ஏமாற்ற முயல்வது, அதற்கு தனக்கு நியாயம் இருப்பதாக நம்புவது, அடுத்தடுத்து வரும் உள்மோதல்கள், அவளது துன்பங்கள், அவளது மனமாற்றம், அதற்கு அடுத்து வரும் திருப்பங்கள் என. நகைமுரணைக் கொண்டு இயக்குநர் தான் உத்தேசித்த கதையை, உண்மையை இன்னும் வலுவாக கொண்டு சேர்த்திருக்கலாம்.
வழக்கம்போல வோக் ஊடகங்கள் இப்படத்துக்கு மிகக்குறைவான ரேட்டிங்கே கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கூகிள் விமர்சனங்களில் ரேட்டிங் நன்றாக உள்ளது.
முக்கியமான படம்!
