நான் கடுமையாக வெறுப்பது யுடியூப் வழியாக முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பட பிரமோஷன்களைத்தாம். அவை நம் நேரத்தைக் கொல்வதுடன் உலகமகா சமத்துவ, நீதிப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்பதாகப் பாவிக்கின்றன. ஆனால் அப்படங்களின் ஒரே நோக்கம் வியாபாரம்தான். நம் கவனத்தை அறுவடைப் பண்ணி விற்பதுதான். அதற்காக 'நான் சிறுவயதில் வடை தின்னும்போது காக்கா ஏமாற்றிவிட்டது, அந்தக் காக்காய்ளுக்கு எதிராகவும், பாட்டிகளின் சார்பாகவும் படமெடுக்கிறேன்' என குரல் தழுதழுக்கப் பேசுவார்கள். ஊடக வெளிச்சத்திற்காக ஏங்கும் அப்பாவிகளையும் கூடவே கூட்டிவருவார்கள். பிஹைண்ட்வுட்ஸ் துவங்கி பல்வேறு சேனல்கள், பேஸ்புக், இன்ஸ்டா விளம்பரக் கட்டணம், தயாரிப்பு வலையில் உள்ள சன் டிவி, ஸ்டார் டிவி என பெரிய பிள்ளைபிடிக் குழு இது. இவர்களுடைய பாணி அப்படியே பிக்பாக்கெட் திருடர்களின் உத்தியை ஒத்திருக்கும் - ஒரு கூட்டம் கவனத்தைத் திருப்பும், இன்னொன்று திருடும், மற்றொன்று விற்கும், பணத்தை மடைமாற்றும். ஒரு கும்பலாக ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சில வாரங்களில் மறைந்துபோவார்கள். இது ஒரு பருவகால வியாபாரம் போல வருடத்திற்கு இருமுறைகளோ, ஒருமுறையோ வருவார்கள், திருடுவார்கள், போவார்கள் இந்த பவேரியா சினிமா கொள்ளையர்கள்.
தாம் எடுப்பது நல்ல படமெனில் அதற்காக இவர்கள் இவ்வளவு 'இரைச்சலை' ஏற்படுத்தி மக்களை இழுக்க வேண்டியதில்லை. எத்தனையோ நல்ல படங்கள் அப்படித் தோன்றி வெல்கின்றன. இவர்களுக்கு தம் படத்தில் நம்பிக்கை இல்லை, உடனடியாக விற்றுப் பணம் பார்க்க வேண்டும், அத்தோடு தம்மைப் பெரும் போராளி, மக்கள் தலைவர் என்றும் ஈகோவைத் திருப்திப்படுத்தி பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும்.
அடுத்து இவர்கள் முக்கியமான பிரச்சினைகளை மதிப்பிழக்கச் செய்கிறார்கள் - கரூர் பிரச்சினையைப் பற்றி நாளை ஒருவர் படமெடுக்கிறேன் என வந்து இரு தரப்பினருக்கு இடையில் சண்டை மூட்டிவிட்டு அதை வைத்து படத்தை சிறிது காலம் ஓட வைக்கலாம். பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதைக் கதையாக்கி படமெடுப்பவர் அப்பெண்களில் சிலரைக் கொண்டு வந்து ஊடகங்களிலும் திரையரங்களிலும் பேசவத்து நன்றாகப் படத்தை ஓட்டலாம் (இதற்கெல்லாம் முன்னோடி நம் ஊரில் ஸ்டார் விஜய்). ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பிரச்சினை தன் உண்மைத்தன்மையை இழக்கிறது. ஏனென்றால் இன்றைய வியாபாரம் ஒரு பொருளைப் பிளாஸ்டிக்காக, பலமுறைகள் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி பண்ணுவதன் வழியாகவே நிகழ்கிறது என்பதால் சினிமாவில் தோன்றும் பிரச்சினை இன்று பிளாஸ்டிக்காகி மக்கள் கண்ணில் செத்துவிடுகிறது. ஒரு குழந்தையைப் போல பிளாஸ்டிக் பொம்மையைப் பண்ணி அதைக் கொஞ்சும்போது குழந்தையின் இடம் காலியாகி குழந்தை மதிப்பிழந்து பசியில் சாவதைப் போல. இது ஒரு நவதாராளத்துவ பின்நவீனப் பிரச்சினை.
சொல்லப்போனால், இவர்கள் இரு சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை உண்டுபண்ணி தம் சினிமாவை விற்கும்போது அதை ஒட்டி அரை நூற்றாண்டுக்கு மேல் பேசப்பட்ட கருத்துக்கள், அமைக்கப்பட்ட இயக்கங்கள், அமைப்புகளின் வரலாறு மதிப்பிழக்கிறது, பொருளிழக்கிறது - உலகைச் சந்தைப்படுத்துவதே நோக்கம் எனில், வாழ்க்கைச் சந்தைப்படுத்தலுக்கு அப்பால் இருப்பதால், சந்தைப்படுத்தைப்படுவது வாழ்க்கையில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். ஒரு பிரச்சினையின் விலை ரூ 200-750 தான் எனில் அப்பணத்தைத் தாண்டி எந்த மதிப்பும் இல்லை எனும் நிலை வரும். ஒரு பிரச்சினையைப் பேசுவதே அது தரும் பணத்திற்காகத்தான் எனும்போது அப்பணத்தைத் தாண்டி அதற்கு மதிப்பில்லை என்றாகும். (ஒவ்வொரு பிரச்சினைக்கும் இன்று ஒரு அவகாசத்தைச் சந்தையே தோற்றுவித்து கால அட்டவணையை - சாதிப் பிரச்சினை, மதப்பிரச்சினை, இயற்கை, சூழலியல் பிரச்சினை, ஏழை மாணவர் பிரச்சினை, பெண்கள், மூன்றாம் பாலினத்தோர் பிரச்சினை என முன்கூட்டியே உருவாக்குவதைக் கவனிக்கலாம்.)
அதை ஒட்டிச் சிந்தப்படும் கண்ணீரும் அவ்வாறே மதிப்பிழக்கும். அடுத்து இனி யாரும் அதைப் பற்றிப் பேசவோ அதற்காகக் கண்ணீர் சிந்தவோ முடியாது என்றாகும்.
இப்படியான சமூகச் சூழலில் மக்கள் செயல்படாதவர்களாக, உண்மையான நீதியை, சமத்துவத்தைக் கோராதவர்களாக மாறுவர். மக்களை அடிமையாக்க முதலீட்டியம் செய்யும் முதல் வேலை அவர்களுடைய பிரச்சினைகளைப் பண்டமாக்கி அவர்களே அதைப் புசிக்கச் செய்வது. மதம் நமக்கான கடவுளை நம்மையே நுகர வைத்ததைப் போல. நவீன காலம் நமக்கான சுதந்திரத்தை, காலத்தைப் பண்டமாக்கி அதை நுகர்வதத்குச் சம்பாதிக்க நம்மை பெருநிறுவன அடிமைகள் ஆக்கியதைப் போல இது மற்றொரு காலம் - இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி இருப்பவற்றை மதிப்பிழக்க வைக்கும் காலம். இல்லாதவற்றை நுகரும்பொருட்டு நம் உணர்ச்சிகளை நாமே நுகரவைக்கும் சந்தையின் காலம். இது நம்மைத் தனியர்களாக, (சக சாதியினர், சகமனிதர்கள், சக-குழுமத்தின் மீதான) வெறுப்பைத் தின்று அதற்கும் சந்தையில் கட்டணம் செலுத்துபவர்களாக ஆக்குகிறது. இப்படியான சமூகத்தில் அதிகாரத்துக்கு எதிரான மாற்றங்களே ஏற்படாது, உணர்ச்சிகள் மட்டும் தூண்டப்பட்டு பிளாஸ்டிக்கான பிரச்சினக்கள் திருப்தியாகும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களை எதிர்க்க மாட்டார்கள் என்பதாலே பெருநிறுவனங்கள் இம்மாதிரி போலி நீதிக் கதையாடால்களை ஆதரிக்கிறார்கள். இத்தகைய போலி கலை வியாபாரிகள் தாம் கருத்தியல்ரீதியாக் எதிர்ப்பதாகச் சொல்வோருடன் தோளில் கையிட்டு அடுத்த புரோஜெக்டை அடுத்த நாளே மேடையில் தோன்றி பிரகடனம் செய்வதும் எனக் கோருவதும் இதனால்தான்.
அதனாலே சினிமா நீதி, சமத்துவ வியாபாரிகள் முகாம்களை அமைக்கும் தேதி தெரிய வந்ததும் நான் அவர்களுடைய சமூகவலைதளக் கூட்டாளிகளின் கணக்கைத் தடை செய்வேன், என் பார்வைக்கு வராமல் பார்த்துக் கொள்வேன்.
நான் உண்மையின் உலகில் சிறிது காலம் வாழ விரும்புகிறேன்!