ராம்கி நிறுவனத்தின் தலைவர் 'அல்ல அயோத்திய ராமி ரெட்டி' மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை வழக்குகள் மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2021இல் உலக வங்கிக் குழுமமே அமெரிக்காவில் இவர்களை ஒரு முறைகேட்டின் பெயரில் தடைபண்ணி விட்டார்கள் (பெரிய சம்பவக்காரர்கள்). ஏற்கனவே சென்னையில் 2012இல் பணிகளைச் சரிவரச் செய்யாததற்காக சென்னை மாநகராட்சி இவர்களுடனான ஒப்பந்தத்தைத் தடைபண்ணியுள்ளது. இவர்களுடைய முறைகேடுகளின் பட்டியலை பதிப்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசு அளவுக்கு நீண்டுவிடும் என்பதால் அதை இங்கே செய்ய முடியாது. ஆனால் இவரது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஒப்பந்தங்களை ஏன் வழங்குகிறார்கள்? இவர் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி. ஜெகன் மோகன் ரெட்டியின் வலதுகை என அறியப்பட்டவர். அண்மையில் இவர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டாரோ என ஐயம் நிலவியது. இல்லை நான் ரெட்டிகாரு பக்கம்தான் என ஒரு கையை ஜெகன் மோகன் பக்கமும் நீட்டினார். துப்புரவுப் பணியாளர் சம்பளப் பிரச்சினைக்குப் பின்னால் முறைகேடுகளின் மலைத்தொடரே ஓடுகிறது. ராமி ரெட்டிக்குப் பின்னால் பாஜகவா ஜெகன் மோகன் ரெட்டியா என்பது கரகாட்டக்காரன் கார் காமிடியைப் போன்றது. இவர் தன் ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பார் என்பது அல்ல பிரச்சினை என இப்போது தெரிகிறது - இவர் இந்த புரோஜெக்டையே முடிக்காமல் பாதியில் கைவிட்டுப் போகவே வாய்ப்பதிகம். அதுவே அவரது வரலாறு. பணத்தை வாங்கி கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு ஜகா வாங்குவதே இவரது 13 ஆண்டு வரலாறு. இவர்களை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தம் வாழ்க்கையை அடமானம் வைப்பது நித்தியானந்தாவை நம்பி கைலாசாவுக்குப் போவதற்குச் சமம். மேயர் ப்ரியா சொல்வதைப் போல இவர்கள் தம் ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளைப் பண்ணிக்கொடுப்பார்கள் எல்லாம் சும்மா கதைதான். இவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியையே முடிக்க மாட்டார்கள். ஊழியர்கள் எல்லாம் எம்மாத்திரம்?
எப்படியும் மிஸ்டர் ராமிரெட்டி ராவோடு ராவாக தலைமறைவாகிவிட்டு இன்னொரு ஊரில் இதே போல வேறு பெயரில் தோன்றி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிக்கொண்டே பாஜக, ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் என இருவேறு கட்சிகளின் சட்டைப் பைகளில் பாதுகாப்பாக உறங்குவார். அப்படியே ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து என்றுகூட மோசடி வேலை செய்து பல இடங்களில் தடைசெய்யப்பட்டு சர்வதேச டானாகிவிடுவார்.
நீரவ் மோடி, மல்லையா போன்ற மற்றொரு வகை மோசடித் தொழிலதிபரான இந்த ராமி ரெட்டியிடம் இத்தனை ஆயிரம் தொழிலாளர்களிடம் கொடுப்பதற்குப் பதிலாக அரசே அவர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம். ராமி ரெட்டிக்கும் அமலாக்கத்துறைக்கும், அவரது கட்சிக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் அட்ஜெஸ்மெண்டில் சாதாரண மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?