Skip to main content

எலிவளைகளின் கதை

 

அரசு தரவேண்டிய சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்கும்போது பணியாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. அரசு தன் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் மட்டும் இதைச் செய்வதில்லை. இதன்பின்னர் அதிகாரிகளில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பெரும் தொகையைப் கையூட்டமாகப் பெற முடியும். சொல்லப்போனால் ஊழல் என்பதே ஆளுங்கட்சி ஒப்பந்தப் பணிகளை தனியாருக்குக் கொடுக்கும்போது அரசின் நிதியில் இருந்து பெரும் தொகையொன்றை உருவி தமக்குள் பங்கிட்டுக் கொள்ள முடியும் எனும் நடைமுறைதான். தனியாரும் அரசும் இணையும்போதே ஊழல் பிறக்கிறது (லெஸ்லி ஹோம்ஸ் தனது "ஊழல்: மிகச்சுருக்கமான அறிமுகம்" நூலில் நிறுவுகிறார்.). அரசு அதிகாரிகள் மக்களிடம் பெறும் கையூட்டையே நாம் பிரதானப்படுத்துகிறோம். அது மிகச்சிறு தொகை. உண்மையான ஊழலென்பது அதற்கு வெளியே நிகழ்வதே.

அரசுகள் பொதுவாக டெண்டர் விடுவது, ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிப்பது என ஆவணமாக்கலில் மட்டுமே கவனமாக இருப்பார்கள், பணப்பரிவர்த்தனையை அதற்கு வெளியே வைத்துக் கொள்வார்கள். இதன் விளைவை நாம் ஒப்பந்தத்துக்குள் வரும் தனியாரின் தரமற்ற சேவையிலும் அங்கு வேலை பார்ப்போருக்குக் கிடைக்கும் மோசமான ஊதியத்திலும் காண்கிறோம்.
இதனால் பொதுமக்கள் இருவகையான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறார்கள்: 1) ஊழலினால் மக்கள் பணிகளுக்கான நிதி திருடப்பட்டு திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படாமல் போகும். இது மறைமுகமானது. 2) தரமற்ற சேவை வழங்கப்படும். இது நேரடியானது. இதை ஊழலென நேரடியாக அடையாளப்படுத்துவதும் சிக்கலாகும். மூன்றாவதாக இது பொருளாதாரத்துக்கும் கேடுவிளைவிக்கும் - பணம் வெள்ளையில் இருந்து கறுப்பாகும், பதுக்கப்படும், அது நேரடியாக புழக்கத்துக்கு வராமல் பணவீக்கத்தை ஏற்படுத்தும்.
இப்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ராம்கி நிறுவனம் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே ஆளாகியிருப்பதே என பேரலை யுடியூப் சேனல் விவாதத்தில் தரவுகளைக் காட்டுகிறார்கள். ஆனால் இந்நிறுவனம் மட்டுமல்ல பெரும்பாலான நிறுவனங்கள் இப்படித்தான். கர்நாடகாவில் சாலைகள் மிகமிகக் கேவலமாக இருக்கும். சாலையை அமைத்த ஒரு மாதத்திலே ஒவ்வொரு அடிக்கும் பெரும் பள்ளங்கள் தோன்றிவிடும். புகார்கள் வந்ததும் அங்கங்கே "பேட்ச்" போடுவார்கள். அவையும் பெயர்ந்துவிடும். பி.எம்.ஸி KRDCL எனும் அரசு நிறுவனத்தின் வழியாக ஒப்பந்ததாரர்களை நியமித்து சில வாரங்களிலேயே மூதாட்டியின் கன்னத்தைப் போல ஆக வேண்டும் எனும் வாக்குறுதியுடன் சாலையை அமைப்பார்கள். இந்த ஒப்பந்ததாரர்கள் அரசு அதிகாரிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் பல நூறு கோடிகளைக் கட்டிங் கொடுப்பார்கள். அப்போது ஒப்பந்தக்காரர்களுக்கான முதலீடு சரிபாதியாகக் குறையும். அதில் அவர்கள் லாபமும் எடுக்க வேண்டும். பத்து ரூபாயில் ரெண்டு ரூபாய்க்குத்தான் சாலை அமைக்க முடியும். இவை உடைந்தாலும் பிரச்சினை இல்லை - பேட்ச் போட அடுத்த டெண்டர் அழைத்து அதிலும் இதே போல கட்டிங் வாங்கலாம். பேட்ச் கழன்று போனதும் அடுத்தடுத்து கட்டிங் வாங்கலாம். இப்படி சாலைகள் உடைவதும் பெயர்ந்து குண்டுகுழிகள் ஆவதும் பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும், கழுத்து, முதுகு வலி வரும். ஆனால் அரசுக்கு இது இனிப்பான சேதி. பணத்தைக் கறந்துகொண்டே போகலாம். மக்களுக்கு தரமற்ற சாலை இருப்பதே தெரியும், இதில் ஊழல் உள்ளது கண்கூடாகத் தெரியாது.
கர்நாடகத்தில் இருந்து இன்னொரு உதாரணம் தருகிறேன். (இது தமிழ்நாட்டில் உள்ள இப்போதைய பிரச்சினைக்கும் பொருந்தும்.) இங்கு ஆரம்பத்தில் குப்பைத் தொட்டிகள் தெரு முனைகளில் வைத்திருந்தார்கள். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தொழிலாளர்கள் குப்பையை அள்ளிப் போக வேண்டும். ஆனால் எலிகள் நடுவே புகுந்து நிதியைத் தின்றுவிடுவதால் போதுமான ஊழியர்களை நியமிக்க முடியாது. இருக்கும் ஊழியர்களால் மொத்த குப்பையையும் அகற்ற முடியாது. தொட்டிகளின் எண்ணிக்கையையும் இதனால் குறைப்பார்கள். ஒன்று சரியாக அகற்றப்படாமல் தொட்டிகள் நிரம்பிவழியும். அல்லது போதுமான தொட்டிகள் இல்லாததால் மக்கள் தெருவிலேயே கொட்டுவார்கள். இதைச் சரிசெய்ய வேண்டும் எனும் தோரணையில் 2018இல் அப்போதைய அரசு இன்போஸிஸ் நாராயணமூர்த்தியின் வழிகாட்டுதலில் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கச் சொன்னார்கள். பரிந்துரைக் குழு குப்பைத் தொட்டிகள் இல்லாமல் அமெரிக்க பாணியில் வீடுவீடாக தூய்மைப் பணியாளர்களே சென்று குப்பையைச் சேகரித்து வெளியே கொண்டு போய் அகற்றுவார்கள், எங்குமே சிறுகுப்பை கூட தென்படாது, பெங்களூர் படுசுத்தமான நிறுவனம் ஆகிவிடும் என்றது. கேட்க நன்றாக இருக்கிறதா? ஆனால் இதற்குப் பின்னால் எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள் தோன்றி புதிய வளைகளைத் தோண்டியுள்ளதை அப்போது மக்கள் உணரவில்லை. தனியாரிடம் இப்பணி ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டது. BSWML எனும் புதிய நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கி அதன் பொறுப்பில் Saahas Zero Waste, Eco Wise, Hasiru Dala Innovations, Saveeco Waste Management Pvt Ltd போன்ற தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டார்கள். அரசு கொடுத்த நிதி பல்வேறு நிலைகளில் சுரண்டி தின்னப்பட்டது. இந்த நிறுவனங்களும் லாபத்தை எடுத்துக் கொண்டன. மீதமுள்ள நிதியில் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களை நியமித்தார்கள். அவர்களால் ஒருநாளைக்கு வீடுவீடாகப் போய் குப்பையை வாங்கவோ மொத்த பெங்களூருக்கும் போகவோ முடியாது. குறிப்பிட்ட சமயத்தில் வந்துவிட்டு "இடியாப்பம்" எனப் போய்விடுவார்கள். வேலையின் பொருட்டு, போக்கு வரத்து நெரிசலில் தனியார் கம்பெனிகளுக்கு சீக்கிரமே கிளம்ப வேண்டிய மக்களால் சரியான நேரத்தில் காத்திருந்து குப்பையைக் கொடுக்க முடியாது. புதிய திட்டத்தின் கீழ் குப்பைத் தொட்டிகளையும் அகற்றிவிட்டார்கள். மக்கள் வேறுவழியின்றி தெருவிலே குப்பையைப் போட ஆரம்பித்தார்கள். குப்பையைப் போடுவதற்காக மக்கள் நள்ளிரவில் நீண்ட தூரம் போவது இங்கு வாடிக்கை. மொத்த நகரமும் குப்பையால் நிரம்பி நாறுகிறது. சிறுகுப்பை கூட இல்லாமல் பெங்களூரைச் சுத்தமாக்குவோம் என சொல்லி ஆரம்பித்தது இப்படியாகிவிட்டது.
ஒப்பந்த அடிப்படையில் பணியை அரசு வழங்குவது நிதியைக் குறைவாகப் பயன்படுத்தவோ தரத்துக்காகவோ பணியைச் செய்யும் கட்டமைப்புப் போதாமையாலோ அல்ல, கறுப்புப் பணத்தைப் பெருக்கத்தான். இதற்காகத்தானோ அரசு நிறுவனங்களை முழுமையாக ஒழித்து தனியாரைக் கொண்டு வரவேண்டும் என ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் பண்ணிவருகின்றனவோ என்று தோன்றுகிறது - மக்கள் வரியாக அளிக்கும் நிதியை அரசு தனியாருக்கு அள்ளி வழங்கினாலே அதில் பணத்தை அடிக்க முடியும். இல்லாவிட்டால் அந்த வழி அடைந்துவிடும். எலிகள் நம் வீட்டுக்குள் வந்து உணவைத் தின்பதற்கு வழிகள் பலவற்றைத் தோண்டி உருவாக்கி வைத்திருக்கும். அப்படியான வழிதான் இதுவும்.
இப்போது கூட தமிழ்நாட்டில் துப்புரவுப் பணியாளர்களின் பிரச்சினை பணி நிரந்தரமாக்கல் அல்ல, சம்பளம்தான். ராம்கி நிறுவனம் எல்லாரையும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. இன்னொரு முக்கிய கோரிக்கை அரசு வழங்கிய அதே சம்பளமான 26,000 சொச்சத்தை ராம்கி நிறுவனமும் தர வேண்டும் என்பது. அதை அவர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? என்னுடைய ஊகம் பெருச்சாளி வளைகளின் வழியாக ஏற்கனவே ஊழியர்களின் சம்பளமாகப் போக வேண்டிய தொகை சாப்பிடப் பட்டிருக்கும் என்பதே. அல்லாவிடில் அரசு ஏன் இந்த சம்பளத்தை ஒரு முக்கிய நிபந்தனையாக டெண்டரின்போது வைக்கவில்லை?
அரசே துப்புரவுப் பணியாளர்களுக்கு நேரடியாகச் சம்பளம் கொடுப்பதே நம் பொருளாதாரத்துக்கு, நகரத்தின் தூய்மைக்கு நல்லது. இது மறைமுகமாக மக்களைப் பின்பு பாதிக்கும். கறுப்புப் பணம் சந்தைக்கு வரமுடியாது. ஆனால் மக்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்படும் பணம் செலவு செய்யப்படும், அது பொருளாதாரத்துக்கு நல்லது. பொதுவாகவே, ஒப்பந்த அடிப்படையில் தனியார் உள்ளே வரும்போது மறைமுகமாக மக்களின் பணமே களவுபோகும் என்பது இந்தியா முழுக்கவுள்ள நடைமுறை. ஆகையால் இப்போராட்டத்தை பொதுமக்கள் ஆதரிப்பது அவசியமானது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...