மௌஞ்சாரோ, வெகோவி ஆகிய மருந்துகள் இந்தியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றன. வாரம் ஒருமுறை இதை ஊசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டதும் பயனருக்குப் பசி குறைந்து அவர் தன் உணவைக் குறைவாக உண்படுவதால் எடை குறைகிறது. அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தியோர் சொல்லும் முக்கிய புகார் ஊசியை நிறுத்தியதும் திரும்ப எடை வந்துவிடும் என்பது. அதாவது இச்சிகிச்சை உங்களை மருந்துக்கு அடிமையாக்கும் - எடையைத் தக்கவைக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்து, எடை அதனளவில் ஒரு பிரச்சினை அல்ல. எடை என்பது 'பசித்த உடலின் அறிகுறி'. அதாவது உடல் நல்ல சத்தான உணவின்றி குப்பையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் கோளாறுகள், கைகால், முட்டி, முதுகுவலி, மனப்பிரச்சினை, தூக்கமின்மை, அசதி, இதய தமனியில் அடைப்பில் இருந்து புற்றுநோய் வரை. சிலருக்கு கொழுப்பு செல்கள் பெருகி உடல் கனக்கிறது. ஒருவிதத்தில் இது நல்லதே - இதைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அவர் சீராக்க முடியும். சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும், ஆனால் உள்ளுறுப்பைச் சுற்றி கொழுப்பு படியும். அப்படியே அது கல்லீரலைச் சுற்றிப் படியும். தமனிகளை அடைக்கும். இவர்கள் தாம் ஒல்லியாக இருப்பதால் எதையும் மாற்ற வேண்டாம் என நினைப்பதால் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பக்கவாதம் வரும், மாரடைப்பு வரும். உடலை நாம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு போகும்போது நமது அணுக்கள் வெறுத்துப் போய் தம்மை அழித்துக்கொள்ள முனைவதும், அவை ஆக்ஸிஜன் இன்றி புராதன நுண்ணுயிர்களைப் போல வாழ் முயன்று பெருகுவதுமே புற்றுநோய் என ஒரு கருதுகோள் உண்டு (atavistic theory). ஆக உடல் எடை மிகச்சிறிய பிரச்சினைதான். அது ஒரு அழைப்பு மணி. காலனின் அழைப்பு மணி. ஆனால் உடல் எடையால் காலன் வருவதில்லை. காலன் வந்துவிட்டான் என்பதை உணர்த்தவே உடல் எடை வருகிறது. பிரச்சினை எடையல்ல.
அழகுக்காகவும் சௌகர்யத்துக்காகவும் ஒருவர் எடையைக் குறைக்கலாம். ஆனால் அவர் காலனிடம் அத்துடன் டேட்டிங் போக முடிவு பண்ணிவிட்டார் என அர்த்தம். ஏனென்றால் அவர் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு அதே பழைய குப்பையான உணவுகளையே தின்பார். 99% அவரது உணவு மாவுச்சத்தாலும் துரித உணவாலும் அமைந்திருக்கும். ஆகையால் உணவின் அளவு குறைந்தாலும் அவர் தன் உணவு முறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவருக்கு ஒரு குறுக்குவழி கிடைத்துவிட்டதே. அவர் உடலை நல்ல சத்துணவின்றி, சத்துக்கள் இன்றி 'பட்டினி போடுவதால்' பிரச்சினைகள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகும்.
அதனாலே இதை ஒரு மோசடி மருந்து என்கிறேன். மருத்துவர்கள் கமிஷனுக்காக இதைப் பரிந்துரை பண்ணுகிறார்கள். ஏதோ நீரிழிவு நோயாளிகளுக்காகப் பரிந்துரைப்பதாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நீரிழிவு இல்லாதவர்கள், தோற்றத்துக்காக இதைப் பயன்படுத்துவோரே. அவர்கள் தம் அறிவீனத்தால் இதற்குப் பலியாகிறார்கள். இந்திய அரசோ மோசடிக்காரர்களுக்காகவே கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். எதையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க மாட்டார்கள். எந்த 'கிட்னி திருடும்' கார்ப்பரேட் நிறுவனம் வந்து கமிஷன் கொடுத்தாலும் அனுமதி கொடுத்துவிடுவார்கள். இந்த நாட்டில் எதையும் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.