இப்படத்தில் வரும் பல்வேறு கருத்துக்கள், தருணங்கள் எனக்குப் பிடித்திருந்தன. இந்தக் காலத்தின் மத்திய வர்க்கச் சிக்கல்கள் இரண்டை எடுத்திருக்கிறார்கள்: பிடிக்காத வேலை, அதில் அவமானம், தோல்வியிலே நீடித்திருப்பது, எதிர்காலத்துக்காக வாழ்வது, வீடு போன்ற ஒற்றை அபத்தக் கனவுக்காக வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவது. மக்களின் உணர்வுகளை நேரடியாகத் தொடும் நோக்கில் படத்தைத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சரத்குமாரின் பாத்திரமான வாசுதேவன் நன்றாக எழுதப்பட்ட பாத்திரம் - அவர் தன் குழந்தைகள் நல்ல வீட்டுக்குப் போய் வாழவேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுக்கிறார். அதை நோக்கி ஒவ்வொருவரையாக நகர்த்துகிறார். பிடிக்காத குடும்பத்தில் மகளை வாழ வைப்பது, அதற்காக மகனைக் கடன் வாங்க வைப்பது, பிடிக்காத படிப்பில் மகனைத் தள்ளுவது, அதற்காக தியாகம், குடும்பம், முயற்சி போன்ற செண்டிமெண்டுகளைப் பயன்படுத்துவது - அவரது இந்த தந்திரத்தை அவரது பிள்ளைகள் கடைசியில் புரிந்துகொள்வது, அவரது மனைவியே அதை ஓரிடத்தில் சுட்டிக் காட்டுவது படத்தின் நல்ல பகுதிகள்.
ஆனால் இப்படத்தைப் பார்க்கையில் ஏதோ ஒன்று சரியாக வரவில்லை எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. முதல் அரைமணிநேரம் கடந்த பின்னரே உறைத்தது:
படத்தில் பாத்திரங்கள் வீட்டுக்காக படும் பாடுகள் - வாடகை வீட்டில் உரிமையாளரால் அவமதிக்கப்படுவது, வசதியின்மை, வெள்ளம் போன்ற கஷ்டங்களால் அவதிப்படுவது, நாயகன் படிப்பில் தொடர்ந்து தோல்வியடைவது போன்றவை - நம்மை அசைப்பதில்லை. நான் மனதளவில் இப்படத்தை பாலுமகேந்திராவின் "வீடு" படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். அதில் துவக்கத்திலேயே வீட்டை மாற்றும் கட்டாயம் ஏற்படுகிறது. புது வீட்டைக் கண்டடைந்து மாறுவதில் ஏகப்பட்ட சவால்கள். சரி புது வீடு கட்டலாம் என முடிவெட்டுத்ததும் அடுத்தடுத்து இடைஞ்சல்களும் அவற்றை நாயகி எதிர்கொள்ளப் படும் பாடுகளும் வரும். எல்லாமே சின்னச்சின்ன பிரச்சினைகளே, ஆனால் அவற்றுக்கு சுலபமான தீர்வு இருக்காது. எல்லா விசயங்களிலும் நாயகி சரியாகத் திட்டமிட்டு முடிவெடுக்கவே செய்வாள், ஆனாலும் எதிர்பாராத பிரச்சினைகள் வரும். இனிமேல் வாய்ப்பே இல்லை எனத் தோன்றும், அதன்பிறகு மற்றொரு கதவு எங்கிருந்தோ திறக்கும். இந்த கதை நுட்பத்தை 3BHKவில் தவறவிட்டுவிட்டார்கள்.
படிப்பு வரவில்லையென்றால் உழைக்கலாம், டியூஷனில் சேர்ந்து படிக்கலாம், ஆனால் அப்போதும் ஏதோ ஒரு சிக்கல், தீர்க்க முடியாத நெருக்கடி நாயகனுக்கு வரவேண்டும். வீடு வாங்குவதிலும்கூட அப்படித்தான். வீட்டின் விலை அதிகமாக மொத்த குடும்பமும் உழைத்துப் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் அப்பாவுக்கு ஆஸ்பத்திரி செலவு வந்து பணம் அதில் கரைந்துவிட விட்ட இடத்தில் மறுபடியும் நிற்கிறார்கள். இது திருப்புமுனை - சவால் அல்ல. இப்படம் முழுக்கவே அப்படித்தான் எழுப்பப்பட்டுள்ளது ஏனெனப் புரியவில்லை. இதனால் முதல் இரு மணிநேரங்கள் மனதுடன் ஒட்டுவதில்லை. என்ன நடக்கப் போகிறது என்பது உள்ளது, ஏன் எனும் கேள்விக்கும் பதில் உள்ளது, எப்படி என்பதைக் கோட்டைவிட்டு விட்டார்கள். எப்படி என்பதற்குள் எதிர்கொள்ள இயலாத இடையூறுகளே இல்லை. உ.தா., சித்தார்த்தின் பாத்திரம் ஒவ்வொரு நேர்முகத்திலாகத் தோற்கிறான். கடைசியில் தன் தோல்விக்குக் காரணம் தோல்வி பயமே என உணர்கிறான். பயமின்றி எதிர்கொண்டு கடைசி நேர்முகத்தில் வெல்கிறான். இதுவே ஒரு தனி எப்பிஸோட்தான் - அவன் அதை எப்படிக் கண்டுபிடிக்கிறான், பயமின்றி கேள்விகளை எதிர்கொள்கையில் எப்படியெல்லாம் சிரமப்படுகிறான் என்பதைக் காட்டியிருக்க வேண்டும் ("The Pursuit of Happiness" படத்தில் வரும் நேர்முகக் காட்சியைப் போல; ராக்கி படத்தின் முதற்பாகத்தின் பிற்பகுதியில் சில்வஸ்டர் ஸ்டாலோனின் பாத்திரம் தன் அணுகுமுறையை மாற்றுவதையும், அதற்காக எடுக்கும் ரிஸ்கையும் காட்டுவதைப் போல).
சேரன் தன் "தவமாய் தவமிருந்து" படத்தில் இப்பகுதிகளை சில இடங்களில் நன்றாக எழுதியிருப்பார். பிரசவத்துக்கு மனைவி ஆஸ்பத்திரியில் இருக்கையில் நாயகன் பணத்துக்காக படும் பாடுகள். சட்டென அப்பா பணத்துட்ன வரும் இடம். கிட்டத்தட்ட பணமே கிடைக்காது எனும் இடத்துக்குக் கொண்டு போய்விட்டு ஒரு தீர்வைக் காட்டுவார்கள் (அது சாத்தியமில்லாத தீர்வாக Deus ex machinaவாக இருந்தாலும் கூட நன்றாகாவே இருக்கும்.)
3 BHKவில் கடைசி 20 நிமிடங்களை (பார்வையாளரின் விருப்ப நிறைவேற்றம் போல) நன்றாக எடுத்துள்ளதால் நமக்கு திருப்தியாக இருக்கிறது. இன்னும் நன்றாக எழுதப்பட்டிருந்தால் கிளாஸிக்காக மாறியிருக்கும்.