ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ள முறைகேடுகள் வாக்காளர் பட்டியலிலும் வாக்களிப்பிலும் நடக்காமல் இருக்க என்ன வழி?
ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மக்களே உணர்ந்து போராடி அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொணர வேண்டும்.
ஒன்றிய அரசு ஆட்சியில் உள்ள ஐந்தாண்டுகளும் அவ்வபோது கருத்துக்கணிப்பின் வழியாக விசாரிக்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும். அரசைத் தொடர்ந்து கண்காணித்து மட்டுப்படுத்தும் நேரடி அதிகாரத்தை பொதுமக்களுக்கும் நீதிமன்றம், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளுக்கு கொடுப்பதுதான் சரியான மக்களாட்சிக்கு இடமளிக்கும். தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வழியாக ஆளும் அரசைத் தண்டிக்கும் சட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். ஒருமுறை வென்றால் அடுத்த தேர்தல் வரை யாரும் கையை வைக்க முடியாது எனும் பாதுகாப்பு ஆபத்தானது. இப்போது பாருங்கள் - ஊடக முதலாளிகளை மோடி அரசு தன் கட்டுக்குள் வைத்துள்ளது. யாரும் வாயைத் திறப்பதில்லை. தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் ஆதார் போன்ற சான்றுகளைக் கொண்டு வாக்காளர்களை ஏற்கலாமே எனக் கேட்க அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. தேர்தல் ஆணையம் மோடியின், அமித் ஷாவின் கைப்பாவைகள் என்பதால் பிரமரும் உள்துறை அமைச்சருமே உச்சநீதிமன்றத்தை புறங்கையால் டீல் பண்ணிவிட்டார்கள் என்பதே உண்மை. ஒட்டுமொத்தமாக அவர்கள் யாரையும் மதிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. பாராளுமன்றத்தில் இந்தியா பாக் போர் குறித்து எழுப்பப்பட்ட எந்த கேள்விகளுக்கும் மோடி அரசு சரிவர பதிலளிக்க முன்வரவில்லை. அதற்கெல்லாம் அவசியமில்லை என நினைக்கிறார்கள். இப்போது அவர்களை ஒட்டி தேர்தல் ஆணையமும் ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு அமைதிகாக்கிறது. சத்தியப் பிரமாணம் செய்துசொல்லுங்க என அவரிடம் கேட்கிறது.
இதன் பெயர்தான் மக்களாட்சியா? முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் இப்படித்தான் ஆண்டார். இந்தியாவின் மிகப்பெரிய பாசாங்கு இந்த மக்களாட்சி எனும் சொல்தான்.
நாளை காங்கிரஸோ வேறு கட்சியோ ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மோடியைப் பிரதியெடுக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? மனசட்சியையும் கொள்கையையும் நம்பி எப்படி ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைப்பது? காவலர்களை யார் காவல் காப்பது, கண்காணிப்பது என ஜூவனெல் கேட்டார். அது எக்காலத்திற்கும் ஏற்ற கேள்வி. பிரதமரை யார் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது? மக்களவை முழுக்க அவரது ஆதரவாளர்கள் இருந்தால்? எதிர்க்கட்சிகள் கையறு நிலையில் இருந்தால்? ஊடகங்களும் நீதித்துறையும் அவரது அடிமைகளாக மாறினால்? மக்களே ஒவ்வொருமுறையும் தெருவுக்கு வந்து போராட வேண்டும் எனில் அதை ஊக்கப்படுத்தும், அம்மக்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் உண்டா? இல்லை. ஆக மக்களும் செயலற்றுப் போகிறார்கள். வேறெந்த அமைப்பிலும் இப்படித் தன்னிகரற்ற அதிகாரம் ஒரு சிலருக்கு மட்டுமென இருப்பதில்லை.
ஆட்சியில் முறைகேடுகள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் மக்களால் அரசு கேள்விக்குள்ளாக்கப்பட்டு அதனால் தாம் பெற்ற நாடாளுமன்ற இடங்களுக்கு வேட்டு வைக்கப்படும், எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பதற்கு தடை வரும் எனும் சட்டம் வரவேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறை வரவேண்டும். ஒரு நல்ல அரசு எப்போதுமே நெருக்கடியில் இருக்க வேண்டும். ஜாலியாக கடவுளைப் போல இருக்கக்கூடாது. இருந்தால் அது மோசமான ஆட்சிக்கே வழிவகுக்கும். ஸ்திரமான அரசை விட ஸ்திரமற்ற அரசே நல்லது என்பதே வரலாறு சொல்லும் உண்மை. ஸ்திரமற்ற அரசிலே ஜனநாயகம் தழைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் படத்தில் மக்கள் காறி உமிழ்ந்து அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இன்று வேறெதையும் செய்ய முடியாதென நினைக்கிறேன்.