ஜெனெட் (1930 – 2018) கதையியலில் பெயர்பெற்றவர். ஆய்வாளர். பிரஞ்சுக்காரர். ஜெனெட்டின் முக்கியமான நூல் Narrative Discourse: An Essay in Method. இது புனைவின் மொழியை வலுப்படுத்த, சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பின் வழியாக நுட்பமான தாக்கத்தை வாசகரிடம் ஏற்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறது. குறிப்பாக, நாமொரு கதையை எழுதி முடித்தபின்னர் அதைத் தொழில்நுட்பரீதியாகப் புரிந்துகொண்டு திருத்தவும், அதை சரியாக அமைந்துள்ளவற்றை செறிவாக்கவும், சரியாக வராதவற்றைத் திருத்தவும், மீளெழுதவும் நமக்கு இந்நூலில் உள்ள கருத்தமைவுகள் உதவுகின்றன.
ஜெனெட் ஒரு அமைப்பியல்வாதி. அதாவது அவர் அர்த்தம் எப்படித் தோற்றுவிக்கப்படுகிறது எனக் கேட்டு அர்த்தத்தை ஒரு அமைப்பே உண்டு பண்ணுகிறது என விடையை அடைகிறவர். குடும்பம் எனும் அர்த்தம் எப்படித் தோன்றுகிறது? இரண்டு பேர் சேர்ந்து சில செயல்களில் ஈடுபடும்போது குடும்பம் எனும் அர்த்தம் தோன்றுகிறது. அச்செயல்களில் ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு. ஒரு வீட்டுக்குள் அவர்கள் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்பத்தை அர்த்தப்படுவதே. பாலுறவு கொள்வது, சமைத்து சாப்பிடுவது, குழந்தை பெற்றுக்கொள்வது இப்படி ஒவ்வோன்றுமே ஒரு அமைப்பு. இந்த அமைப்பு குறிப்பான், குறிப்பீடு ஆகிய இரண்டு சங்கதிகளால் தோன்றுகிறது. சேர்ந்திருத்ததலே ஒரு நிலைதான், அர்த்தம்தான் - இதைக் குறிப்பான் என்கிறார்கள். இந்நிலையை சேர்ந்து வாழ்தல் எனும் செயல் குறிப்புணர்த்துகிறது - இதைக் குறிப்பீடு என்கிறார்கள். இந்த நோக்கை ஜெனெட் கதைகூறலில் பொருத்திப் பார்க்கிறார்.
தொலைவாக்கம்
அ) நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய்”.
ஆ) அவளால் நான் ஏமாற்றப்பட்டதாக நான் அவளிடம் சொன்னேன்.
அ-வில் அந்த வசனம் மேற்கோள் குறிக்குள் வருகிறதே அதில் நிகழ்ந்த ஒன்று மாற்றமின்றி நமக்கு தெரிவிக்கப்படுகிறது. இது நமக்கு வெளியிலிருந்து அதைக் கேட்கிற உணர்வைத் தருகிறது. கதைசொல்லியிடம் ஒரு விலகல் உணர்வு நமக்கு வருகிறது. ஆ-வில் அதையே (வெளியிலிருந்து உள்ளாக) இடைமாற்றிச் சொல்லும்போது கதைசொல்லியின் மனதில் இருந்து அதைக் கேட்கிற உணர்வு வருகிறது. அவனிடம் நமக்கு அணுக்கம் அதிகமாகிறது.
அ-வை ஜெனெட் கதையாக்கப்பட்ட கூற்று என்கிறார்.
கதையாக்கப்படுதல் என்பதை இருப்பதை அப்படியே நடித்துக் காட்டுவது எனும் கருத்தாக்கமாக ஜெனெட் அடையாளப்படுத்துகிறார். அதாவது கதையை ஒன்று அப்படியே போலச்செய்து காட்டலாம். இதை mimesis என்கிறார். அல்லது கதையைச் சுருக்கி நம் மொழியில் சொல்லலாம். ஒருவர் தன் காதலியின் இதழ்களில் முத்தமிடுவதை ஒரு பத்தியில் வர்ணித்தால் அது நம் கண்முன் நிகழ்கிற உணர்வு ஏற்பட்டால் அது கதைக்குள் போலச்செய்வது (mimesis). “அவன் அவளை அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு தன் போனை எடுத்து பேஸ்புக் பார்த்தான்” என்றால் அது diagesis (சுருங்கச் சொல்வது). சுஜாதாவின் கதையில் நீங்கள் பின்னதை அதிகமாகப் பார்க்கலாம். அசோகமித்திரனிடமும், பெருமாள் முருகனிடமும் கூட இது அதிகமாகத் தெரியும். தி.ஜாவிடம், ஜெயமோகனிடம் நிறைய போலச்செய்வது (mimesis) இருக்கும். போலச்செய்தல் கதையை விரிவாக்கி காலத்தை நீட்டிக்கும். சுருங்கச் சொல்லுதல் கதையின் காலத்தைச் சுருங்க வைக்கும் உணர்வைத் தரும்.
ஜெனெட் காலத்தை கதைக் காலம் (narrative time), கதையாடல் காலம் (discourse time) என இரண்டாகப் பிரிக்கிறார்.
எப்படி முத்தமிட்டார் என வர்ணிக்கையில் காலம் அதிகரிப்பதாகத் தோன்றும். முத்தமிட்டார் என்று மட்டும் சொல்லும்போது அது வேகமாக நிகழ்ந்து முடிந்துவிட்டதாகத் தோன்றும். ஆனால் இரண்டிலுமே கதையாடல் காலமே வேறுபடுகிறது, கதைக்காலம் ஒன்றுதான். இதனாலே ஒரு வாரம் நடக்கிற கதையை ஒருவர் 300 பக்கங்களில் எழுதலாம். ஓராண்டு நிகழும் கதையை 80 பக்கங்களில் சொல்லலாம். நாவலின் உன்னதங்களில் ஒன்று அது கதையாடல் காலத்தை நீட்டித்தும் குறைத்தும் நம் பிரக்ஞையின் வடிவத்தில் மாற்றங்களை உண்டுபண்ணி காலத்தை ஆழமாகவே வேகமாகவும் உணர வைக்க முடியும், காலத்தைக் கட்டுப்படுத்தி வாசகரின் இருத்தலை ஆழமாக்க முடியும் என்பது. ஒரு பெண்ணைக் குறித்த மிகச் சில தருணங்களையே மௌனி “அழியாச்சுடரில்” நமக்கு உணர்த்துகிறார். ஆனால் அச்சித்தரிப்பில் நாம் பல ஆண்டுகளின் ஆழத்தை உணர்கிறோம். இதுவே கதையாடல் காலத்தின் வலிமை.
‘அவளால் நான் ஏமாற்றப்பட்டதாக நான் அவளிடம் சொன்னேன்.’ என்பதை ஜெனெட் இடமாற்றப்பட்ட சுதந்திரமான மறைமுகக் கூற்று (transposed free indirect speech) என்கிறார். ‘நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய்”’ என்பதை பிறர் கூற்று (reported speech) என்கிறார். தன்னிலையில் சொல்லப்பட்டாலும் வசனம் அடைப்புக்குறிக்குள் வரும்போது அதை கதைசொல்லி அப்படியே மாற்றமின்றி நம்மிடம் தருவதான உணர்வு வருகிறது. அதாவது வசனம் கதைசொல்லியின் மனதுக்கு வெளியில் இருந்து புறவயமாக ஒலிக்கிறது. இது கதைசொல்லியை ‘பிறராகக்’ காட்டுகிறது. யோசித்துப் பாருங்கள்: உங்களிடம் ஒருவர் “உன்னை சாவடிக்கப் போறேண்டா” என்று சொன்னால் அதை நீங்கள் உங்கள் மனதுக்குள் நிகழ்த்தும்போது அந்த வசனம் மாற்றமின்றி உங்களுக்குள் ஒலிக்கும். அப்போது நீங்கள் ஒரு வெளிநபரமாக நின்று உங்களுக்கு நிகழ்வதை உணரப் பார்ப்பீர்கள். கிட்டத்தட்ட கனவில் நிகழ்வதைப் போல உங்களையே நீங்கள் வேடிக்கைப் பார்ப்பீர்கள். உங்களுக்கே நீங்கள் தொலைவாவீர்கள். ஆகையாலே அது உங்களை அதிகமாகக் காயப்படுத்தும், கோபப்படுத்தும். ஆனால் அவன் என்னை அசிங்கமாகப் பேசிவிட்டான், அவன் என்னை வசைபாடி விட்டான் என நினைக்கும்போது அந்த கூற்றை நீங்கள் தன்வயமாக மாற்றிவிடுவீர்கள். அதைச் சொல்லும் உங்களுக்கும் அதைப் பற்றி யோசிக்கும் உங்களுக்கும் இடைவெளி இருக்காது. நீங்களே உங்களுக்கு அணுக்கமாக இருப்பீர்கள். உங்கள் கோபமும் வருத்தமும் குறைவாக இருக்கும். அவனைச் சில வசைச்சொற்களைச் சேர்த்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கும் சுதந்திரத்தை இது தரும்: ‘தே … பையன் என்னைத் திட்டிட்டான்’. நடந்ததைச் சற்றே மாற்றுகிற சுதந்திரம் உங்களுக்குத் திருப்தியளிக்கும். இந்த உணர்வை வாசகருக்கு இத்தகைய வாக்கியம் கொடுப்பதாலே ஜெனெட் இதை இடமாற்றப்பட்ட சுதந்திரமான மறைமுகக் கூற்று என்கிறார் என்கிறார்.
இந்த வர்ணனையைப் பாருங்கள்: ரோட்டில் கிடக்கும் ஐந்து ரூபாய் நாணயம். பொறுக்கிவிடலாமா என ஒரு தத்தளிப்பு. யாரும் பார்க்கவில்லையே என மனம் சொல்லியது. அடச்சே இதெல்லாம் நமக்குத் தேவையா என்று உடனே அவளுக்குத் தோன்றியது.
இது இடமாற்றப்பட்ட மறைமுகச் சுதந்திரக் கூற்றே. இது மறைமுகமாகச் சொல்லப்படுகிறது (அதாவது தன்வயப்படுத்தப்படுகிறது). என்னவெல்லாம் உணர்வுகள் தோன்றுகின்றன என குறிப்பேற்றிச் சொல்லப்படுகிறது (தத்தளிப்பு, மனம் சொல்லியது). இந்த நுட்பங்கள் உங்களுக்கு பிறர் கூற்றில் கிடைக்காது. ஆனால் பிறர் கூற்றில் இன்னொருவர் பேசுவதை ஒட்டுக் கேட்கும் கிளுகிளுப்பு இருக்கும். அது இடமாற்றப்பட்ட மறைமுகச் சுதந்திரக் கூற்றில் வராது.
பிறர் கூற்றில் கூட கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்:
இ) ’நான் அவளை நோக்கிக் கத்தினேன், என்னை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறாள் என்று.’
இங்கு ‘கத்துவது’ புதிய தகவல், புதிய உணர்வு. இன்னும் வாசக அனுபவத்தை இன்னும் தீவிரமாக்குகிறது. அதேசமயத்தில், இது புறவயமாக உள்ளதால் வாசகருக்கும் கதைசொல்லிக்கும், கதைசொல்லிக்கும் தன் கதைக்குமான தொலைவும் அதிகரிக்கிறது. இதை ஜெனெட் கதையாக்கப்பட்ட கூற்று என்கிறார் (வண்ணமூட்டப்பட்ட புறக்கூற்று).
பிறர் கூற்றையே படர்க்கையில் சொல்லலாம்.
ஈ) நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்.
இப்போது இதில் அகவயமான தன்மையும் உள்ளது, அதேநேரத்தில் புறவயமாகப் நடக்கும் ஒன்றை ஓரளவுக்குப் அகவயமாகவும் சொல்லும் இடைநிலையான போக்கும் தெரிகிறது.
இதை இடமாற்றப்பட்ட மறைமுக கூற்று (transposed indirect speech) என்று ஜெனெட் அழைக்கிறார். இதை (அ)வுடன் ஒப்பிட்டுப் பார்த்து மேலும் தெளிவு பெறுங்கள்: நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய்”.
இப்படி நான்கு வகையான கூற்றுகளை ஜெனெட் குறிப்பிடுகிறார்:
அ) நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய்”. (Reported speech [பிறர் கூற்று’)
ஆ) அவளால் நான் ஏமாற்றப்பட்டதாக நான் அவளிடம் சொன்னேன். (இடமாற்றப்பட்ட சுதந்திரமான மறைமுக கூற்று [transposed free indirect speech])
இ) ’நான் அவளை நோக்கிக் கத்தினேன், என்னை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறாள் என்று.’ (கதையாக்கப்பட்ட கூற்று [narratized speech])
ஈ) நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். (இடமாற்றப்பட்ட மறைமுக கூற்று [transposed indirect speech])
நான் மேலே சொன்ன ‘அவளால் நான் ஏமாற்றப்பட்டதாக நான் அவளிடம் சொன்னேன்.’ என்பது வெறும் வாக்கியம் அல்ல. அது ஒரு தகவல். அத்தகவல் நமக்கு அவ்வாக்கியத்தின் சொல்லமைவினால் கடத்தப்படுகிறது. தகவலை ஜெனெட் ஒரு உணர்வாகப் பார்க்கிறார், புறத்தகவலாக அல்ல. இது கவனிக்கத்தக்க வேறுபாடு. கதையின் நோக்கம் புறத்தகவல்களை அளிப்பதல்ல, உணர்வுகளை தகவல்களால் ஏற்படுத்தி நம்மை வேறொரு கால, வெளிக்குள் எடுத்துச் செல்வதே.