Skip to main content

என் TEFL வகுப்பு அனுபவம்



கடந்த ஆண்டு இறுதியில் ஏஷியன் காலேஜ் ஆப் டீச்சர்ஸ் நிறுவனத்தில் 120 Hour InternationalTESOL/TEFL In-Class Certification Programஇல் சேர்ந்து அயல் மொழியாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறைகளைக் கற்றேன். இது ஒரு பட்டயப் படிப்பு. வகுப்பிலேயே நிறைய இடுபணிகள், நேரடி வகுப்பெடுக்கும் சவால்களை முடித்துவிட்டு கடைசியில் கனடிய நிறுவனமான TCBE நடத்தும் டெஸோல் கேனெடா போர்ட் தேர்வையும் எழுதினேன். என் வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இந்த வகுப்பும் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அமைந்தன.
நான் பள்ளிக்கல்வி அளவில் பயிற்றுவித்ததில்லை என்றாலும் முன்பு ஒரு நண்பரின் தூண்டுதலால் இளங்கலை கல்வியல் பயின்று பட்டம் பெற்றேன். பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடுகள், மாணவர்களின் உளவியல், பயிற்சி என அமைக்கப்பட்ட அந்த வகுப்பில் "இதெல்லாம் தெரிஞ்சதுதானே" எனும் அனுபவம் பெற்ற ஆசிரியரின் அலட்சியம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என்னுடன் இருந்த மாணவர்கள் இளங்கலை முடித்துவிட்டோ பள்ளிக்கல்வி முடித்தோ நேரடியாகப் பயில வந்தவர்கள். அவர்களைப் பயிற்சி வகுப்பெடுக்கச் சொன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் போல ததிங்கிணத்தோம் பண்ணுவார்கள். நான் பெரிய சவால்கள் இன்றி ஒருமாதிரி ஜாலியாக அப்பட்டத்தை முடித்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு நான் அதே போன்ற வகுப்பில் அமர்ந்தபோது பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடு, நம்பிக்கைகள் மட்டுமல்ல வகுப்பின் அமைப்பு, வசதிகள், மாணவர்களின் எதிர்பார்ப்பு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. அதாவது நான் கற்றதும், கற்றுவித்ததும் சம்பிரதாயமான வகுப்புகளில். அங்கு 70-100 மாணவர்கள் இருப்பார்கள். "சொல்லிக் கொடுப்போம்", "அறிவுறுத்துவோம்", கரும்பலகையை, நுண்பலகையை பயன்படுத்துவோம், குறிப்புகள் அளித்து தேர்வெழுத வைப்போம். ஆசிரியரின் போதனைதான் முக்கியமாக இருக்கும். இன்று மாணவர்களை மையமிட்ட பயிற்றுவித்தல் முறை வந்துவிட்டது. பள்ளி வகுப்புகளில் உள்ள வசதிகளோ ஏராளம். மாணவர்கள் கலைந்து அமரும் வகுப்பு, பயிலரங்கு பாணி வகுப்பு, 20க்கும் உட்பட்ட மாணவர்கள் அமரும்வகுப்புகள் அதிகமாகிவிட்டன (வசதியான நகரங்களில்). இவ்வகுப்புகளில் மாணவர்கள் ஆசிரியர் தம்மை ஆர்வமூட்டி கற்றலுக்குள் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தாமே கற்றுக்கொள்ளும் அறிவு படைத்தவர் என்பதால் ஆசிரியர் தனக்கு கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்தினால், அவர் வகுப்பை ஒருங்கிணைத்தால் போதும் என நினைக்கிறார்கள். ஆசிரியர் எனும் இடத்தில் இன்று செயலாக்குநர் எனும் பெயரையே பரிந்துரைக்கிறார்கள். 360 பாகை மாற்றம் இது. உதாரணமாக, 40 நிமிட / 120 நிமிட வகுப்பை நீங்கள் 6-8 பகுதிகளாகப் பிரித்தால் எப்படி ஒரு பாடத்தை அறிமுகப்படுத்தி அதன் முடிவில் முழுமையாக கற்றுக்கொள்ள வைப்பது என்பதற்கு உத்திகளை வகுத்திருக்கிறார்கள். விளையாட்டுகள், ரசனையான இடுபணிகள், இணைநிலையினர் பயிற்றுவித்தல், செயலிகளின் பயன்பாடு, மீளச் சொல்லுதல், மீளச் செய்தல் என வழிமுறைகள் வகுப்பை வெகுசுவாரஸ்யமாக்குகின்றன.
எங்கள் TEFL வகுப்புகள் ரொம்ப ஜாலியான, களேபரமான அனுபவமாக அமைந்தன. ஆடுவது, பாடுவது, சவாலான பணிகளைச் செய்வது, புதிர்களை விடுவிப்பது, வரைவது என. அப்போதுதான் எனக்கு நான் ஏதோ விட்டராச்சார்யா காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனப் புரிந்தது. நான் எந்த கல்லூரியிலும் இத்தகைய வண்ணமயமான வகுப்புகளைக் கண்டதில்லை.
உயர்நிலை கல்வி நிறுவனங்களில் இன்று மிக அதிகமான பாடங்களை, சிரமமான பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டியிருப்பதால், காலக்கெடுவைத் துரத்திக்கொண்டே இருப்பதால், 400-500 மாணவர்களை சமாளித்து தேர்வுத்தாள்களைத் திருத்தி பல நிர்வாகப் பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இவ்வளவு ரசித்து, கற்றலின் சுவாரஸ்யத்தை, ஒவ்வொரு மாணவரும் பயன்படும்படி வகுப்பை நடத்த முடிவதில்லை. 100-200 மாடுகளை ஒற்றை ஆள் ஓட்டிக்கொண்டு போவதைப் போலத்தான். ஆனால் இந்த TEFL வகுப்புகள் குறைவான பங்கேற்பாளர்களுக்கு நெருக்கமாக அமர்ந்து பயிலரங்கு நடத்துவதைப் போல உள்ளன. அதனால்தான் இன்றைய சில தனியார் பள்ளிகள் கல்லூரிகளைவிட நான்கு மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. உயர்நிலைக் கல்வியை விட பள்ளிக்கல்வியில் அதிகமாக நவீனமும் பரிசோதனை முயற்சிகளும் நிகழ்கின்றன. உயர்கல்வி வகுப்புகள் இன்றும் ராஜ்கிரண் தலையில் அடித்து பாடையை நோக்கி அழுவதைப் போலத்தான் உள்ளன.
நான் இந்த வகுப்பில் கலந்துகொண்டபோதுதான் என் பயிற்றுவித்தலை முழுக்க மாற்ற முடியும், மாற்றவும் வேண்டும் எனப்புரிந்து கொண்டேன். ஆனால் சிக்கலான கோட்பாடுகளை நாம் ஆங்கில உரையாடலை சொல்லித் தருவதைப் போல விளையாட்டு, புதிர், இடுபணி எனச் சொல்லித் தரவும் முடியாது. 300-400 பக்க கட்டுரைகளை நம் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு முன் படித்துக்கொண்டு வருவதில்லை. ஆசிரியர்தான் கரண்டியில் எடுத்து ஊட்ட வேண்டும். ஆனாலும் warmer, context setting, இடுபணிகளை ஒவ்வொரு வகுப்பிலும் விதவிதமாக முயன்று பார்த்தேன். அதில் வரும் பிரச்சினைகளை TEFL வகுப்பில் என் ஆசிரியரிடம் குறிப்பிட்டு தீர்வு கேட்பேன். கடந்த செமஸ்டரில் என் வகுப்புகள் மேம்பட்டதை உணர்ந்தேன். போனதும் இலக்கிய கூட்டத்தில் பேசுவதைப் போல ஆரம்பிக்காமல் முடிந்தளவுக்கு சுயகற்றலுக்கான வெளியாக வகுப்பை மாற்றினேன். ஆங்கிலப் பாடத்தைப் பொறுத்தவரையில் நான் இலக்கணம், சொல்வளம், எழுதும் முறை போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினேன் (ஏனென்றால் பாடத்திட்டமும் அதையே அனுமதிக்கும்). ஆனால் அவற்றைத் தாண்டி மிக எளிமையாக வாசிப்பு, கவனித்தல், பேச்சு, எழுத்து ஆகிய திறன்களை நேரடியாகச் 'சொல்லித் தராமலே செய்ய வைத்து' பயிற்றுவிக்க முடியும் என அறிந்த்கொண்டேன். இந்தப் பயிற்சியை உயர்கல்வியில் எப்படிச் செயல்படுத்துவது என்பதே சவால் என்று தோன்றுகிறது. அங்குதான் ஆசிரியரின் திறன், கற்பனை முக்கியமகிறது.
நான் விசாரித்தவரையில் இந்தியாவில் இளங்கலை கல்வியியல் வகுப்புகள் கூட இந்தளவுக்கு நவீனமாக, புத்துணர்ச்சியாக நடப்பதில்லை. அதனாலே இப்போது கல்வி நிறுவனங்களே தமது முதுகலைப் படிப்பில் TEFT சான்றிதழ்ப் படிப்பையும் இணைத்து விடுகிறார்கள்.
எங்கள் ஆசிரியர் ஷாலினி ஜோன்ஸ் நான் பார்த்ததில் மிகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் -அவர் ஒரு அறிஞரோ சிந்தனையாளரோ அல்லர். நான் அத்தகையோரையே கல்லூரியில் கண்டிருக்கிறேன். இவர் செயல்பாட்டுநர் - முழுக்க வேறுவிதமான கல்வியியல் ஆசிரியர். என்னைவிட வயதில் குறைவானவர். ஈகோவை விடுத்து அங்கு அவர் முன் வெறும் மாணவராக அமர்ந்தது, திட்டு வாங்கியது, திருத்தங்களைப் பெற்றது, இடுபணிகளைச் செய்தது நல்லனுபவம். என்னை வெகுவாக புத்துணர்ச்சியூட்டிய அனுபவம் அது. இன்னொன்று மாணவராக இருக்கையில் நமது மனநிலை எப்படி இருக்கும் எனப் புரிந்தும் கொண்டேன் - மாணவர்களுக்கு சுதந்திரம் உள்ளதைப் போன்றே கடுமையான நெருக்கடியும் உள்ளது. மாணவர்களின் அடிப்படையான தேவையே தாம் தமது நடத்தை காரணாமாக ஆசிரியரால் எதிர்மறையாக மதிப்பிடப்படக் கூடாது, ஆசிரியர் தம்மைப் பொருட்படுத்த வேண்டும், சமமாக நடத்த வேண்டும் என்பதே. ஒரு வகுப்பில் தற்செயலாக சில மாணவர்களை அதிகமாகக் குறிப்பிட்டா கூட அது மற்றவர்களை பாதிக்கும். மாணவர்கள் அடிப்படையில் குழந்தைகளைப் போன்றவர்களே. வயதெல்லாம் பொருட்டில்லை - தன் பலவீனத்தை ஒப்புக்கொண்டு அமையாமல் ஒருவரால் படிக்க முடியாது. ஆசிரியரின் அறம் என்பது தொடர்ந்து தன் சமத்துவப் பண்பை பேணுவதுதான். என் மனநிலையை ஒரு மாணவராக உற்று கவனித்தபின்னர் என் மாணவர்கள் என் வகுப்பில் எப்படி உணர்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. ஒரு கனெடிய ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து உரையாடியபோது மாணவர்களை நண்பர்களாக நடத்தலாமா, கூடாதா, வரம்பு என்ன ஆகிய விசயங்களை விவாதித்தார். நான் நிறைய யோசிக்கவும் கற்றுக்கொள்ளவும் உதவிய வகுப்பு அது.
என் சக ஆசிரியர்களுக்கு இந்த வகுப்பை பரிந்துரைக்கிறேன். இணையத்தில் Asian College of Teachers எனத் தேடிப் பாருங்கள். இணையவழியிலும் நேரடி வகுப்பிலும் படிக்கலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...