பூஞ்ச், ஊரி உள்ளிட்ட ஜம்மு மாவட்டங்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் ஷெல்லடித்ததில் இறந்த மக்களின் எண்ணிக்கையை பத்திரிகைகளும், டிவி சேனல்களும் 21, 13, 7 என ஒவ்வொரு எண்ணிக்கையில் சொல்கின்றன. பாஜக சார்பு பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவே இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம் என்கிறது. பொதுவாக உலகம் முழுக்க அதிகாரபூர்வ போர்க்காலச் செய்திகளில் வருமை எண்ணிக்கையில் இரட்டிப்பாகவே நிஜமான தரவு இருக்கும் என்பதால் இதுவரைக்கும் இவர்கள் மாறிமாறி குண்டு போட்டதில் இரு நாடுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தொடும் என நினைக்கிறேன். தீவிரவாதத் தாக்குதலின் போதும் "குங்குமத்தை இழந்த பெண்களுக்காக" நடத்தப்பட்ட இந்த சிந்தூர் ஆபரேஷனின் விளைவாக இந்தியாவில் கணவர்களையும் சகோதரர்களையும் குழந்தைகளையும் இழந்த பெண்களுக்கு இந்த அரசு எந்த விதத்தில் ஈடு செய்யும்? உலகின் பெரும் அபத்தம் இந்த சிந்தூர் ஆபரேஷன்.
காஷ்மீரில் வாழும் என் நண்பரிடம் கேட்டபோது நேற்று இரவு முழுக்க போர் விமானங்கள் பறந்ததாகவும், ஷெல்கள் அடிப்பதால் ஏற்படும் அதிர்வை வீட்டுக்குள் உணர முடிந்ததால் தம்மால் உறங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். அங்கு சாலைகளை பெரும்பாலும் மூடிவிட்டார்கள் அல்லது அவை பயணிக்கும் நிலையில் இல்லை. கடைகளும் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமானங்கள் காஷ்மீர் விமான நிலையத்தைத் தாக்கும் என அச்சம் நிலவுகிறது. ஜம்முவில் இருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக சொந்த வாகனங்களிலோ வாடகை ஜீப்புகளிலோ வெளியேறுவதை டிவியில் காட்டினார்கள். ஆனால் காஷ்மீரில் அத்தகைய ஏற்பாடுகளை அரசு இன்னும் செய்யவில்லை, மக்களுக்கும் வழிவகை இல்லை. இப்போதைக்கு ஏதோ பள்ளி பேருந்துகளை ஏற்பாடு பண்ணியிருப்பதாக நண்பர் சொன்னார். ஆனால் இதெல்லாம் விமானத் தாக்குதலுக்கு முன்பு நடக்குமெனத் தோன்றவில்லை. இங்குதான் முக்கியமான பிரச்சினையே வருகிறது:
இந்த தாக்குதலை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஒன்றிய அரசுக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாக அவகாசம் இருந்தது. அரசு ஜம்மு, காஷ்மீர் எல்லைப் பகுதி மக்களை இடமாற்றம் செய்து, அவர்கள் தங்குவதற்கு முகாம்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எனில் இந்த "உயிர்த்தியாகங்களைத்" தவிர்த்திருக்க முடியும். குழந்தைகளும் பெண்களும் (ஆண்களும்) ஷெல்லடியில் மாண்டிருக்க மாட்டார்கள். அவர்களும் இந்தியர்கள் தாமே. அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் பொறுப்புதானே. இண்டிபெண்டெண்டில் வந்த கட்டுரையில் பூஞ்சைச் சேர்ந்த புக்காரி என்பவர் இப்படிக் கேட்கிறார்: “தீவிரவாதத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பிரயாணிகளின் மனைவியரின் குங்குமத்துக்காக அரசு இப்போரைத் தொடுத்தது என்கிறார்கள். அரசு திரும்பத் தாக்கியதை நான் பாராட்டுகிறேன். அப்பெண்கள் முக்கியம்தாம். ஆனால் பாகிஸ்தான் குண்டிவீச்சில் இறந்த பூஞ்சிலும் ஊரியிலும் உள்ள ஆண்கள் முக்கியமில்லையா? அவர்களின் மனைவியரின் குங்குமம் முக்கியமில்லையா?”
இதற்கு உலகம் முழுக்க முன்னுதாரணங்கள் உண்டு - 2006 லெபனான் போரின்போதும் 2014 காஸா யுத்தத்தின்போதும் இஸ்ரேல் தன் எல்லையில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றிய பின்னரே போரை ஆரம்பித்தது. 2022இல் உக்ரைனுடனான யுத்தம் ஆரம்பிக்குமுன்னரே ரஷ்யா தன் குடிமக்களை பத்திரமாக வெளியேற்றியது. 1991இல் கல்ப் யுத்தத்தின்போதும் சவுதி அரேபியாவும், குவைத்தும் தம் மக்களை வெளியேற்றின. இவ்வாறு மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழிமுறைகளும் வலியுறுத்துகின்றன. கேத்லீன் டியர்னி தனது The Social Roots of Risk எனும் நூலில் பேரிடர்கள் வருமுன்பே மக்களைப் பாதுகாப்பாக அகற்றுவதைப் பற்றிப் பேசுகிறார். போரையும் ஒரு பேரிடராகக் கருதுவதே சரி.
சரி இந்திய அரசு ஏன் இதைச் செய்யவில்லை? மக்களை அதிகப்படியாக இடமாற்றினால் அது தம்மைப் பலவீனமாகக் காட்டும் என அரசுகள் பொதுவாக பயப்படும். தம்மை வலிமையான ஆதிக்கமான தேசியவாதிகளாகக் காட்ட விரும்பும் பாஜக அரசும், அதன் பிரதமரும் ஊடகப் பிம்பமாக்கலை மிகவும் முக்கியமாக நினைக்கக் கூடியவர். பூத்ரிலர் முன்பு சொன்னதைப் போல (The Gulf War Did not Take Place) யுத்தத்தை ஊடகக் கதையாடலாக, யுக்தியாக, பிரச்சாரமாக மாற்றுவதே நவீன அரசியல். யுத்தம் ஒரு போலியுரு (simulacrum).
அடுத்து, இந்தியா எல்லையோர மக்களை பாதுகாப்பாக அமர்த்தியிருந்தால் பாகிஸ்தான் இதனால் உஷாராகியிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல - பாகிஸ்தான் ஊடகமும் அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதல் நடக்குமுன்னரே முன்கூறாக அதை அறிவித்தபடியே இருந்தனர். இந்திய அரசு கூடுதலாக இத்தாக்குதலைத் தாமதப்படுத்தி அவரக்ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க முடியும். கொரோனா லாக் டவுனின்போதும் அரசு தம் புஜபல பராக்கிரமசாலி ஊடகப் போலியுருவைத் தக்க வைப்பதற்காக மக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை. ஆனாலும் மக்கள் நடந்தே சொந்த ஊருக்குப் போயினர். முதற்கட்டமாக 10 லட்சம் பேர்கள். இரண்டாவது கட்டமாக, 63 லட்சம் புலம்பெயர் தொழிலாள்கள் ரயிலில் ஊருக்குப் போயினர். இத்தனை பேர்கள் இடம்பெயர்ந்தனர் எனும்போது ஜம்மு காஷ்மீரின் 12 சொச்சம் மக்கள் தொகையில் பாதி பேரையாவது அரசால் பத்திரமாக இடம்பெயர்த்திருக்க முடியாதா? முடியும். ஆனால் அது தமக்கு அவப்பெயரைத் தரும் என பயந்து தாக்குதலுக்குப் பிறகும்கூட மக்களை அகற்றுவதற்கு இந்த அரசு விரும்புவதில்லை.
மக்களாட்சியில் அரசெனில் அது மக்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் செயல்படக் கூடியது. யுத்தம் செய்வதிலும் குண்டுபோடுவதும் அதைத் தம்பட்டம் அடிப்பதும் அரசின் பிரதான கடமை அல்ல. இது உண்மையில் ஒரு அரசா அல்லது மாபியா கேங்கா என எனக்கு சந்தேகம் வருகிறது.