எதிர்க்கட்சிகள் பாஜகவின் காலாட்படையாகிவிட்ட நிலையில் இப்போது காங்கிரஸின் இடத்தில் இருந்து பாஜகவின் மோசமான போர்த்திட்டம், தவறுகளை அம்பலப்படுத்தி விமர்சிப்பது கரன் தாப்பரின் The Wire தான். அருண் ஷௌரியின் பேட்டியில் வரும் விமர்சனம் அவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது (தொடுவழியை முடிவில் போடுகிறேன்):
1) அருண் ஷௌரி முதலில் சொல்வது மோடி அரசு போர் நிறுத்தம் செய்வதாகச் சொல்லிவிட்டு எப்போது வேண்டுமானாலும் இது நடக்கும் எனக் கூறுவது தவறு என்பது. எப்போதுமே ஒரு தேசத்தால் போர்த் தயார் நிலையில் இருக்க முடியாது. மேலும் நாளையே ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்து அப்போது நம்மால் போர்த் தொடுக்க இயலாவிடில் இந்திய அரசின் மீதான உலகளவிலான நம்பிக்கை குலையும். எப்படிப் பார்த்தாலும் முன்கூறாக ஒன்றை அறிவிப்பது, பஞ்ச் டயலாக் விடுவது அரசின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும். அது நல்லதல்ல.
2) இந்திய அரசு மிதமிஞ்சி அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறது. அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல. அது பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இந்தியாவையும் சமாதானப்படுத்தும். வணிக உறவை ரத்து செய்வேன் என மிரட்டிப் பணிவைத்தேன், குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினேன் என்று சொல்லி அவமானப்படுத்தும். அதற்கு சீனா மேலான நம்பத்தகுந்த பங்காளி என்கிறார் அவர் (சீனா இன்னும் ஆபத்தானது என்பதே என் கருத்து). அதனால் பரவலான கூட்டாளிகளின் வலைத்தொடர்பில் இருந்தபடி இந்தியா பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பதே நல்ல பயனளிக்கும்.
3) இந்தியா யுத்தம் தொடுப்பதற்குப் பதிலாக உளவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். பெஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தீவிரவாதிகள் இங்கு வந்து தங்கியிருந்தார்கள், தாக்குதலுக்குப் பின்பும் அவர்கள் அப்பகுதியிலேயே இரு மணிநேரங்கள் ராணுவ உடையில் இருந்தார்கள் எனப்படுகிறது. எனில் ஏன் உளவுத்துறை எச்சரிக்கவில்லை? (அவர்கள் இரண்டு நாட்கள் மாமனார் வீட்டில் இருந்து உண்டு விழாவைச் சிறப்பித்துவிட்டு எதிரி மன்னன் போர்த் தொடுக்கப் போகிறான் மன்னா என்று வந்து சொன்னபோது இங்கே விமானப்படைத் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.) இதைச் சரி செய்யாமல் போர்த்தொடுப்போம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் கடன் தேவைப்படும்போதெல்லாம், அங்கு ராணுவம் நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் இங்கு தீவிரவாதிகளை அனுப்புவார்கள். சீனாவின் பலம்பொருந்திய ஆயுதங்களும் படைகளும் இருக்கும்வரை பாகிஸ்தான் அஞ்ச வேண்டியிருக்காது. கடைசியில் வந்து காப்பாற்ற பிக்பாஸ் அமெரிக்காவும் உள்ளதே. ஆக சரியான தீர்வு நம்மை நமது உளவுத்துறையை பலப்படுத்துவதுதான்.
4) தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது உலகம் முழுக்கவிருந்து அதைக் கண்டித்தார்கள். இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக கண்டித்தார்கள், காஷ்மீர மக்கள் பேரணி நடத்தினார்கள். அரசின் முடிவுக்கு துணை நிற்பதாகச் சொன்னார்கள். இதுவரைச் சரி - ஆனால் அரசு தயங்கி நேரத்தை வீணடித்து கடைசியில் விமானத் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்தபோது அதை என்னதான் ஊடகங்கள் மிகையாகப் பெருக்கினாலும் மக்கள் நம்ப மறுத்தார்கள். மக்களின் பரவலான உணர்ச்சிகரமான ஆதரவு இருக்கவில்லை (சங்கிகள் எப்போதும் போல கத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.). அதனாலே போர்த்தளபதிகளை - குறிப்பாகப் பெண்களை - வைத்து ஊடக சந்திப்பை மோடி அரசு நடத்தியது, அவராக வந்து அறிவிக்கவில்லை, அவர் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது என்கிறார் ஷௌரி. இது ஏற்கத்தக்கதாக உள்ளது.
5) ஒரு நல்ல அரசானது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அதுவே ராஜதந்திரம் - நாம் இந்நாட்டின் இஸ்லாமியர்களை விரோதிகளாகப் பாவித்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. மேலும் பாகிஸ்தான் சொல்வது உண்மையெனும் பிம்பம் ஏற்படும். இந்தியா ஒரு இந்துத்துவ அரசு எனும் எதிர்மறைப் பிம்பம் ஒழியாமல் இந்திய அரசால் தீவிரவாதத்துக்கு எதிராக வலிமையாகப் போர்தொடுக்க முடியாது. இதேபோலத்தான் மோடி தன் குஜராத்தைத் தாண்டி பிற மாநிலங்களையும், பிற மக்களையும் தன் மக்களாக நினைக்க வேண்டும், சமத்துவமாகப் பாவிக்க வேண்டும், தமிழர்களை ஒதுக்கக் கூடாது என்கிறார். இதை மிக முக்கியமான பார்வையாகக் கருதுகிறேன். உ.தா., காஷ்மீர மக்கள் தீவிரவாதத்தைக் கண்டித்து நடத்திய பேரணியை மோடியின் அரசுப் பாராட்டி அரவணைத்திருக்க வேண்டும். நம் எதிரிகள் தீவிரவாதிகளே, இஸ்லாமியர் அல்லர் என வலியுறுத்தியிருந்தால் உலகின் ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கும். மேலும், தன் மக்களை பாரபட்சமின்றி நேசிப்பதே ஒரு அரசின் தர்மம். இந்த அரசு காஷ்மீரத்து ஜனங்களை ஏதிலிகளாக மாற்றிவிட்டது. காஷ்மீர் நமது என்று சொல்வதற்குப் பதில் காஷ்மீரிகள் நம்மவர்கள் எனத் திரும்பத்திரும்பக் கோர வேண்டும். அதுவே சிறந்த அரசியல், அதுவே அசலான போர்த்தந்திரம்.
https://youtu.be/BC85sTVTCuE?si=6ZGA8gNQ36qVHZHD
