Skip to main content

கனவு வாழ்க்கை, 'கனவு' வாழ்க்கை



 இன்று ஒரு நண்பர் என்னிடம் பாலிஷ் போட்ட யானைக் குட்டியைப் போன்ற காரைக் காட்டி "இந்த கார் ஒரு கோடி ரூபாய். பகத் பாஸில் வைத்திருக்கிறார். இதில் பயணிக்க அவ்வளவு சொகுசாக இருக்கும்." என்றார். இப்படி விலைமதிப்பான பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீடுகள் குறித்து யாராவது தொடர்ந்து தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மற்றவர்களைவிட ரொம்ப கேவலமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் உணர்வு சட்டெனத் தோன்றிவிடுகிறது. நான் முன்பு மூவாயிரம் ரூ சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது பணம் ஒரு பிரச்சினையாக, பணமின்மை போதாமையாகத் தோன்றியதில்லை. கடன் அதிகமானதால் ஒரு குடும்பத்தில் ஏழு பேர்கள் விடமருந்தி தற்கொலை பண்ணி ஒரு காருக்குள் அமர்ந்திருந்ததாக செய்தி படித்தேன். இப்படியான செய்திகளை நான் அதிகமாக முன்பு கேள்விப்பட்டதில்லை. மிக ஏழ்மையான நிலையில் சகித்துக்கொண்டு கௌரவமாக வாழ்ந்த குடும்பங்களை அறிவேன். இன்று அப்படியான வாழ்க்கை மிகவும் கடுமையாகிவிட்டது. ஏழ்மையும் கடனும் கைகோர்த்துவிட்டன. அனேகமாக எல்லாரிடமும் வீட்டு வசதிப் பொருட்கள், வாகனங்கள் இருக்கின்றன, அனேகமாக எல்லாரும் வீடு வாங்கவோ வாங்க முயலவோ செய்கிறார்கள், எல்லாரிடமும் ஏதோ ஒரு கடன் இருக்கிறது, எல்லாருமே ஒன்றுமே இல்லாததாக உணர்கிறோம், நிம்மதியற்று இருக்கிறோம். நிறைய பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் இன்னொரு பக்கம் நிம்மதியற்றிருப்பதாகப் புலம்புகிறார்கள். கூடவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தம் செல்வத்தை ஊருக்கெல்லாம் காட்டி வெறுப்பேற்றவும் செய்கிறார்கள். இவ்வளவு குழப்பமான உலகை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை.

நிறைய பணமிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டாம், பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம் எனும் தர்க்கத்தை ஏற்க முடிகிறது. பணம் = நேரம் என்பதும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்குப் பொருந்தும் உண்மை. கார் என்பது பயணிப்பதற்கான வாகனம் என்பதைத் தாண்டி அசையாமல் செல்கிற கார், அதிர்வில்லாமல் ஓசையின்றி போகிற கார், பெரிய வீட்டைப் போன்ற கார் எனும் ஏற்பாடுகளின் தேவையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அசையாமல், சத்தமின்றி பெரிய இடத்தில் இருக்க வேண்டுமெனில் ஒரே இடத்தில் இருந்தால்போதுமே! அடுத்து எதற்கு மக்கள் இவ்வளவு அதிகமாகப் பயணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. இருக்க நல்ல இடம், நல்ல உணவு, இலக்கியம் வாசிக்க, படைக்க நேரம், கற்பனை, விளையாட்டு, அவ்வப்போது கலவி (கவிஞர்களுக்கு கொஞ்சம் காதல்) ஆகியவற்றைத் தாண்டி எதுவும் பிரதானமாக மனிதனுக்குத் தேவையில்லை எனும் கட்சி நான். ஆனால் அதெல்லாம் ரொம்ப செலவு பிடித்ததாகிவிட்டது என்பதே நம் காலத்தின் துயரம்.
நிம்மதியான தொந்தரவில்லாத இடம் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்றவர்கள் பயணிப்பதன் வழியாக இதை ஈடு கட்டத் தவிக்கிறோம். நல்ல உணவு கிடைக்காததால், தவறான உணவுத் தேர்வால் உடல் பாதிக்கப்பட்டு அதை ஈடுகட்ட பல்வேறு கேளிக்கைகள் நமக்குத் தேவையாகின்றன - உணவே மனிதனின் ஒரே மகிழ்ச்சி என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆரோக்கியமான உணவு இல்லாதபோது அதற்கு ஈடு அதிகப்படியான காமம்தான். காமமும் கிடைக்காதபோது அதைக் குறித்த கற்பனை, வேடிக்கை பார்க்கும் இன்பம், போர்ன் போதை, மேம்போக்கான பொழுதுபோக்கைக் கொண்டு மனத்தை திருப்புகிறோம். வாசிப்பு, கற்பனை, படைப்பாக்கம் ஆகியவற்றுக்கு நிறைய நேரமும் ஓய்வும் அவசியம் - அது இன்று மத்திய வர்க்கத்துக்கு அருகி வருகிறது. வேலை நெருக்கடி, கடன், பாதுகாப்பின்மை, மிக நீண்ட வேலை நேரம், தூக்கமின்மை. அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு கவலைப்படக் கூட நேரமில்லை. அந்த கால ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நாட்டில் 90% வாழ்ந்து வருகிறார்கள். கை, கால்களில் சங்கிலி இல்லை என்பதே வித்தியாசம். விளையாட்டை நீங்கள் அந்த கால அடிமையிடம் இருந்தும் பிரிக்க முடியாது. அப்படியே அவர்கள் தம் முகமையை மீட்டெடுப்பார்கள். ஆனால் இன்று நவீன சமூகம் விளையாடும் உரிமையை எடுத்துவிட்டு நமக்கு விளையாட்டை நிகழ்த்து கலையாக, கேளிக்கையாக மாற்றி அதன் முழுநேர நுகர்வோராக நம்மை மாற்றிவிட்டது. தொழில்ரீதியாக விளையாடுவோரைப் பார்த்துத் திகைத்து ரசித்துக் கிடக்கிறோம். நம்மிடம் துளி கூட விளையாட்டில்லை என்பதை யோசிக்கவே நேரமல்லை. ஏனென்றால் விளையாட இடமும் நேரமும் தேவை. நகரங்களில் இரண்டும் இல்லை.
இச்சூழலில் நமக்கு ஒரு கறுப்புக் கண்ணாடியை யாராவது ஒரு லட்சம் என்று சொன்னால், கைக்கடிகாரத்தை ஒரு கோடி என்றால் சந்தோஷமாக இருக்கிறது. இன்று நமக்கு கிடைக்கும் கண்ணாடியும் கடிகாரமும் மலிவானது எனும் எண்ணம் நம் வாழ்க்கையே மலிவானது எனும் எண்ணத்தைத் தள்ளிப் போட உதவுகிறது. அடையச் சாத்தியமே இல்லாத பொருட்களைப் பற்றி சிலாகிப்பது நிகழ சாத்தியமில்லாத நம் அன்றாட எளிய ஆசைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க உதவுகிறது. "எனக்கு அப்பெண்ணை முத்தமிட வேண்டும், எனக்கு எனக்கேயான ஒரு தனித்த இடத்தில் நிம்மதியாக வாழ வேண்டும், என்னை வலுவாக, முழுமையாக உணர வைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்" எனும் அசாத்தியமே ஒரு கோடி மதிப்பிலான காரில், பிரைவெட் ஜெட்டில் செல்ல வேண்டும் எனப் பேச வைக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் மிகச்சாதாரணமான அனுபவங்களை விட விலைமதிப்பான வசதிகளைக் கருதுகையிலே அவை நமக்கு சாத்தியமாக, மிக அருகில் இருப்பதாகத் தோன்றுகின்றது. கொஞ்சம் பணமிருந்தால்போது, கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால்போது 'இதையெல்லாம்' அடைந்துவிடுவேன் என நினைக்கிறோம். இதற்கு நேர்மாறானதே உண்மையென நமக்கு ஏனோ தோன்றுவதில்லை.
நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன் - அதில் ஜப்பானில் வாடகை செலுத்த வசதியின்றி கணினி மையத்தின் இரண்டு, மூன்று அடிகள் மட்டுமே இடமுள்ள சதுரத் தடுப்புக்குள் வாழும் மக்களைக் காட்டினார்கள். கருவறைக்குள் தூங்கும் கருவைப் போலத்தான் இரவில் படுக்க வேண்டும். அந்த நபர்களே பகலில் கேளிக்கை, கொண்டாட்டம் என ஈடுபட்டு தம் போதாமையை மறக்க முயல்கிறார்கள். எதிர்காலத்தில் பெரும்பாலான நகரங்களில் வீடுகள் இப்படித்தான் மாறும் என நினைக்கிறேன். அதில் வாழும் மக்கள் ஒரு கோடி, பத்து கோடி மதிப்பிலான வீடுகளைப் பற்றி கனவு காண்பார்கள், தாம் ஏன் இப்படி இருக்கிறோம் என யோசிக்க, கேள்வி கேட்க மாட்டார்கள்.
யார் இந்த வாழ்க்கையை இப்படி மாற்றியது? இதை ஏன் சொர்க்க உலகம் என்று சொல்கிறார்கள்? சமத்துவம், சமவாய்ப்புகள் உள்ளதாக ஏன் சொல்கிறார்கள்?
மிக நீண்ட சூப்பர் மார்க்கெட்டாக வாழ்க்கை மாறும்போது நம் டிராலி நிரம்பி வழிகிறது, நாம் அடுத்தவர்களின் டிராலியைப் பார்த்து மனம் வெதும்புகிறோம், நம் வாழ்க்கை காலியாக இருப்பதை நாமே பார்க்காமல் இருப்பது குறித்து நாம் நிம்மதியடைகிறோம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...