பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு வருவது புதிதல்ல. முன்பு திட்டமிடப்பட்ட அழகான நகரம் என அறியப்பட்ட, பூங்கா நகரம் எனக் கொண்டாடப்பட்ட பெங்களூர் மென்பொருள் சொர்க்கமாக வளர்ந்து விரிந்தபோது சரியான திட்டமிடலோ கட்டமைப்பு வளர்ச்சியோ இல்லாமல் கொடூரமாக உருமாறிவிட்டது. துணை முதல்வர் டி.கெ சிவகுமார் பெங்களூர் "திட்டமிட்டு உருவான நகரம் அல்ல" எனச் சொல்லும் நிலை வந்துவிட்டது. இப்போதும் பெங்களூரின் சீதோஷ்ண நிலை, நவீனக் கலாச்சாரம் ரசனைக்குரியதே. ஆனால் உலகின் ஆக மட்டமான சாலைகளை பெங்களூரிலே பார்க்க முடியும் - புதிதாக சாலையை அமைத்துவிட்டுப் போவார்கள், ரெண்டு நாள் அரைமணி நேரம் தூறல் போட்டால் அந்த சாலை பிஸ்கட்டில் உள்ள கிரீமை குழந்தை நக்கியெடுத்ததைப் போல மறைந்துவிடும். இங்கு சாலையா இருந்தது என மக்கள் மூக்கில் விரலை வைக்க முடியாது, பின்னால் பெரிய டிராபிக் ஜாம் ஆகிவிடும். இந்த சாலைகளில் வாகனம் ஓட்டியும், ஆட்டோவில் பிரயாணம் செய்தும் தனக்கு கடும் முதுகுவலி ஏற்பட்டதாகவும், எவ்வளவு சிகிச்சைகள் எடுத்தும் செலவு அதிகமானதே ஒழிய வலி தீரவில்லை என்று, அதனால் பி.பி.எம்.பி தனக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் எனக் கோரி ஒரு பெங்களூர்க்காரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் இன்று நாளிதழில் செய்தி பார்த்தேன். பலராலும் உணர்வுரீதியாக ஒன்ற முடிகிற பிரச்சினை இது.
இங்குள்ள சாலைகள் உடனுக்குடன் பெயர்ந்து பள்ளமாகிவிடுவதற்கு காரணம் அதிகப்படியான வாகனங்கள் எனும் அரசாங்க வாதத்தை நான் ஏற்கவில்லை. அதிகப்படியான வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு தரமான சாலைகளை இங்குள்ள காண்டிராக்டர்கள் அமைப்பதில்லை. மிகமிக மலினமான பொருட்களாலே சாலையமைக்கிறார்கள். ஒரு மேடுபள்ளமான சாலையில் பேட்ச் போடவரும் ஒப்பந்த ஆட்கள் அரைமணியில் ஜல்லியும் கீலும் போட்டு உருளை வாகனத்தை ஓட்டி ஏதோ மாஸ்டர் பரோட்டோ போடுவதைப் போல முடித்துவிடுவார்கள். ரெண்டே நாட்களில் தோனியின் கன்னத்தில் உள்ள மேடுபள்ளங்கள் அந்த சாலைப் பகுதியில் தோன்றும். அவை சில வாரங்களில் அலியா பட்டின் கன்னக்குழிகள் ஆகும். சிலநேரங்களில் டூவீலர் சக்கரங்கள் உள்ளே போனால் வண்டி சரிந்துவிடும். இந்த குழிகளில் விழாமல் வாகனம் ஓட்ட ஒடிஸி நடனமே ஆடவேண்டும்.
2015இல் மழையினால் கொத்துப்பரோட்டாவாகும் இச்சாலைகளைக் கலாய்ப்பதற்காக நஞ்சுண்டசாமி என்பவர் சாலை நடுவே உள்ள பள்ளத்தில் வண்ணமடித்து அதில் ஒரு பெரிய முதலை பொம்மையை மிதக்கவிட்டார். ஆனாலும் அதிகாரிகள் அதைப் பார்த்து சிரித்தபடி ஊர் சூலெ மகா என்று போய்விட்டார்கள்.
பி.பி.எம்.பி ஒருபக்கம் வரி போதாமையால் கடன் சுமையால் தவிக்கிறது. ஜப்பானிடம் எட்டாயிரம் கோடிகள் அண்மையில் கடன் வாங்கியிருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். இன்னொரு பக்கம் இந்த ஆயிரக்கணக்கான கோடிகளை பல வருடங்களாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலங்களில், மட்டமாக அமைக்கப்படும் சாலைகளில் செலவிட்டு வீணடிக்கிறார்கள், தொலைநோக்குத் திட்டமின்றி செயல்படுகிறார்கள் என விமர்சிக்கிறது பெங்காவால்க் ஆவணப்படம் (The never ending construction of Bengaluru). பிரச்சினை கர்நாடக அரசாங்கங்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல தற்காலிக லாபங்களை மட்டுமே சிந்திக்கின்றன என்பதே - எந்த திட்டத்தையும் அமைச்சர், உள்ளூர் தலைவர், அதிகாரி, ஒப்பந்தக்காரர்கள் சேர்ந்து தமக்குள் பங்குபோடுவதையே முதலில் செய்கிறார்கள். சில திட்டங்களில் அதிகாரிகளின் பினாமிகளே நேரடியாக முதலீடு செய்து சம்பாதிக்கிறார்கள். இவர்கள் தின்று மீதம் வைக்கும் பணமே சாலையாகவோ பாலமாகவோ தோன்றுகிறது. நீங்கள் சிக்கன் குழம்புக்கு பொருள் வாங்க முன்னூறு ரூபாய் எடுத்துப் போய் அதில் சரக்கு வாங்கி ஊற்றிக்கொண்டு கடைசியில் முப்பது ரூபாய்க்கு வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மட்டும் வாங்கி வந்து குழம்பு வைத்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இங்குள்ள கட்டமைப்புகளும் இருக்கும். ஊழலும் பயனர்களான மக்களின் நேரடியான கட்டுப்பாடும் இன்றி அரசு, அதிகாரி, ஒப்பந்தர்க்காரர் மாபியாவிடம் நகரம் போனால் இப்படித்தான் இருக்கும். இதன் விளைவை மக்கள் நேரடியாகக் காண்பது மழை வெள்ளத்தின்போதுதான்.
தமிழ்நாட்டின் கிராமங்களிலும், சென்னைப் புறநகரங்களிலும் உள்ள சாலைகள் பெங்களூர் சாலைகளைவிட பலமடங்கு தரத்திலானவை. நம்மூரிலும் ஊழல் உண்டு என்றாலும் கொஞ்சமாவது தரமாக அமைக்க வேண்டும் எனும் அழுத்தம் அங்கு இருக்கிறது. இப்படியே பத்தாண்டுகள் போனால் பெங்களூருக்கு வரவேண்டிய வளர்ச்சி சென்னைக்கும் ஹைதராபாதுக்கும் போய்விடும். பெங்களூரை இந்த மாபியா உள்ளிருந்து தின்று அழிக்கிறது.
மழை இன்னும் சில நாட்கள் பெய்து முடித்தபின் இந்த சாலைகளில் வண்டியோட்ட வேண்டுமே என நினைத்தால் திகிலாக இருக்கிறது.