இந்த நேர்முகத்தில் இயன் மெக்-இவன் புனைவில் வரும் ஒரு பத்திகளை கவிதையின் வரிகளுடன் ஒப்பிடுகிறார். கவிதையில் வரிகள் இடையே ஓசையளவிலும் கருத்து, தொனி, அர்த்தங்களின் அளவிலும் மாற்றங்களும், முரண்களும் அவசியம், இவை ஒரு சீராக வரும்போது தாளமாகிறது. அது வாழ்க்கையின் பாய்ச்சலுக்கு, நமது பிரக்ஞையின் உள்ளோட்டத்துக்கு நெருக்கமாக கவிதையைக் கொண்டு வருகிறது. ஆனால் கவிதையின் தீவிரத்தை, மிக நுட்பமான விவரிப்பை புனைவில் நம்மால் கொண்டு வர முடியாது. செய்தாலும் அது வாசகருக்குத் திகட்டும். கதை ஒழுங்குக்கு வராமல் அலைவதாகத் தோன்றும். கவிதையின் தீவிரத்தையும் அழகையும் புனைவுக்கு கொண்டு வந்து அதேநேரம் அது ரொம்பவே கவிதைத்தனமாக ஆகாமல் இருக்க மெக்-இவன் ஒரு உத்தியைச் சொல்கிறார் - இது ஏற்கனவே ஸ்டைலிஸ்டுகள் பலமுறைச் சொன்னதுதான்: ஒவ்வொரு பத்தியையும் தன்னளவில் முழுமையான ஒரு வாக்கியமாகக் கருதி உருவாக்குவது. ஒரு அத்தியாயத்தில் பத்து பத்திகள் இருந்தால் ஒவ்வொன்றும் கதையின் வளர்ச்சியில், போக்கில் ஒருவிதமான மாற்றத்தின் ஒழுங்குவரிசையை உருவாக்குவதில் பங்களிக்கும். அவை ஒருங்கே ஒருவித தாளத்தை, மனநிலையைக் கட்டமைக்கும். தனித்தனியாக அவற்றுக்கு மதிப்பிருக்காது. இப்படியான அத்தியாங்களைப் படிக்கையில் தன்னளவில் மிகுந்த அழகு கொண்டவையாக, நம் மனத்தில் ஆழமாகப் படிவனவாக இருக்கும். கோயில் பிரகாரத்தில் தீட்டப்படி தனி ஓவியங்களைப் போல, சிற்ப வரிசையைப் போல. கலவியின் போது தரப்படும் முத்தங்களைப் போல.
மெக்-இவன் இதைச் சொல்லக் கேட்டபோது எனக்கு என் புனைவிலும் அத்தியாயங்களை மிகவும் ஈடுபாட்டுடன் ரசனையுடன் அமைக்க வேண்டும், கதையை நகர்த்துவது மட்டுமே அத்தியாயங்களின் நோக்கமல்ல என்று தோன்றியது. இப்போது எழுதிவரும் நாவலைத் திருத்த இது உதவியது.
சினிமா நடிகர்களின் பேட்டிகளைவிட இத்தகைய பேட்டிகள் அர்த்தபூர்வமானவை. எழுத்தாள நண்பர்கள் இதைப் பாருங்கள்.